Monday, July 29, 2019

பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் இணை அமர்வு - பெட்னா 2019 சிகாகோ
சிகாகோ நகரில்   10 வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு , பேரவையின் 32 வது விழா , மற்றும் சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா என  முப்பெரும் விழாவாக நடைபெற்ற நிகழ்வில்   பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக , நூற்றுக்கும் மேற்பட்ட  பங்கேற்பாளர்களை கொண்டு அரங்கம் நிறைந்த சிறப்பான இணை அமர்வை நடத்தி முடித்தது .

முத்தமிழர் அறிஞர் கலைஞர் மறைந்தபின் நடந்த முதல் இணை அமர்வில் , கலைஞரின் புகழ் வணக்கதோடு அமர்வு தொடங்கியது .

முதன்முறையாக பெரியார் மற்றும் அம்பேத்கரின் நட்பு சிலையை பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்  , சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  கவிஞர் சல்மா அவர்களை கொண்டு வெளியிட்டது.

முதல் சிலையை சல்மா வெளியிட தோழர் சிவானந்தனும்  , இரண்டாவது  சிலையை  சிக்காகோவின் தமிழ் பள்ளிகளில் தொடர்ந்து செயலாற்றுபவரும் , ஆசிரியர் வீரமணி அவர்களின் மகளுமான அருள் செல்வி அவர்கள் வெளியிட தோழர் சுதாகரும் , மூன்றாவது சிலையை  பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சோம இளங்கோவன் வெளியிட தோழர் வினோத்சந்தரும் பெற்றுக்கொண்டனர் .

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தோற்றமும் , செயல்பாடுகளையும் தொகுத்து தோழர் கனிமொழி அவர்கள்  முன்னுரையாக வழங்கினார் .

 அடுத்த நிகழ்வாக சிறப்பு விருந்தினர் சல்மா அவர்கள்  சிலை வெளியீட்டுக்கு பாராட்டியும் , தந்தை  பெரியார் அவர்கள் பெண்ணுரிமைக்காக ஆற்றிய செயல்களையும் , சுயநலமில்லாமல் , எதிர்பார்ப்பில்லாமல் மக்களுக்கு தொண்டாற்றியதையும் , மதத்திற்கு எதிரானவர் என்று பெரியாரை பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உடைக்க செயலாற்றுவதின் அவசியத்தையும் ,அம்பேத்கரையும் , பெரியாரையும் எதிர்நிலைக்கு கொண்டு சென்று நமக்குள் பிரிவினையை உண்டாக்கும் சக்திகளை எதிர்த்து செயலாற்ற வேண்டிய நிலையையம் ,  தேர்தல் முடிவுகளின் அதிர்ச்சியால்  தமிழ்நாட்டில் ஊடுருவி கைப்பற்ற துடிக்கும் RSS இன் சூழ்ச்சிகளையும்  , சாதிய வெறியால் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளைப் பற்றியும் ,இவைகளை முறியடிக்க பெரியார் ,அம்பேத்கர்- இந்த இரு தலைவர்களின் சிந்தனைகளை முன்னெடுத்து செல்ல உறுதிமொழி எடுக்க  வேண்டும் என உரையாற்றினார் .

அடுத்தபடியாக பேச வந்த அருள் செல்வி  அவர்கள்  குழந்தைகளுக்கு பெரியார் அவர்களின் கருத்துக்களை , அவர்களுக்கு புரியும்படி கொண்டு செல்ல செயல்படுமாறு  அறிவுறுத்தினார் .மேலும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் Humanist  Conference இல் பங்கேற்க அழைப்பு விடுத்தும் , பெண்கள் அதிகமாக  இணை அமர்வில் கலந்து கொண்டிருப்பதினால் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார் .

தோழர் கார்த்திகேயன்  அமெரிக்காவில் நிகழும் சாதிய பாகுபாட்டை இளைஞர்கள் ஆதரிக்கவில்லை என்றும் , பெரியாரின் கோட்பாடுகளை அவர்கள்தான் எடுத்து செல்கிறார்கள் என்றும் , கலைஞர்  அவர்களின் சமூக நீதி செயல்பாடுகளை எடுத்துச் சொல்லி , கலைஞரின் புகழ் வணக்கத்தை மீண்டும் ஒருமுறை கூறிச்சென்றார் .

பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சோம இளங்கோவன்  பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கு ஒவொருவரும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து  செயல்படுமாறு கூறினார் .

ஜெர்மனியின் மருத்துவர் Ulrike Niklas  அவர்கள் பெரியாரின் கருத்துக்களை , ஆங்கிலம் , ஜெர்மன் முதலிய மொழிகளில் மொழிபெயர்த்து  மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் , பள்ளி குழந்தைகளுக்கு பெரியார் கருத்துக்களை தாம் எடுத்துச் செல்வதாகவும் , மாணாக்கருடன் இந்தியா செல்லும்போது திடலுக்கு கூட்டிச்  சென்று  காண்பிப்பதாகவும்  அவர் கூறினார்.

முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் பேசும்போது இயல் இசை நாடகம் மூலமாக  ஏறி வந்த மதத்தை , அதே இயல் , இசை நாடகம் கொண்டு  பெரியாரிய கருத்துக்களை  முன்னெடுத்து சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார் , பெரியார் பிஞ்சு இதழ் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் கையில் இருக்க வேண்டும் என்றார் அவர் .

முனைவர் இளங்கோவன் அவர்கள் பேசும்போது தொழில் நுட்ப கருவிகளின் துணை கொண்டு  இயக்கம் சார்ந்த கருத்துக்களை , இணைய  வழியாக , பயிலரங்கம் வாயிலாக  கொண்டு செல்வதாக கூறினார்.

 அமர்வின் சிறப்பு நிகழ்வாக பெரியார் பிஞ்சுகள் சிறுவன் இலக்கணன் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடலையும் , ஆதவன் திருகுறள்களையும் தமது மழலைக் குரலில்  கூறினர்

வருகை தந்தவர்கள் அனைவருக்கும்  பெரியார் சிந்தனைகள் தாங்கிய புத்தகங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டது .

பின் , விழாவில் பங்கேற்றவர்கள் , பெரியார் கருத்துக்களை கொண்டு செல்ல தாம் என்ன செய்ய போகிறார்கள் , செய்தார்கள் என்பதை உணர்ச்சிபூர்வமாக விளக்கினர்.கிராமப்புறங்களில் பெரியார் கருத்துக்களை கொண்டு செல்லுதல் , சுணக்கமின்றி தொடர்ந்து போராடுதல் , பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் இனத்தில் பாகுபாடு காட்டாமல் இருத்தல் ,பெரியார் கருத்துக்களை கலையாக, சித்திரங்களாக , கதையாக கொண்டு செல்லுதல் , இளைஞர்கள் பெரியாரை படிக்க வேண்டும்  , பள்ளிகளுக்கு பெரியாரின் கருத்துக்களை, திருகுறளோடு சேர்த்து   எடுத்து செல்ல வேண்டும்  போன்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர் .

அவர்கள் கூறிய கருத்துக்களின் உத்வேகத்தோடு  தொடர்ந்து செயலாற்றும் முனைப்புடன் இணை அமர்வு முடிவு பெற்றது

வாழ்க பெரியார் !!!               வளர்க பகுத்தறிவு !!!!

Wednesday, July 24, 2019

தேசியக் கல்விக் கொள்ளை!!!

மூன்று வயதில் 
மூன்று மொழிகள் 
மூன்றினில் இரண்டு 
சமசும் இந்தியும் ! 
ஆற்றலில்லை 
ஆங்கிலத்தில்! 
மாற்றம் இல்லை 
அதனைக் கற்றல் ! 

அறிவைப் பெருக்க 
கூடா நட்பை 
ஓயாமல் சொல்லி 
மனிதரை சேராமல் 
காக்கும் நீதிக்கதைகள் ! 

சிந்தனையை சீராக்க 
வேதம் , மனுதர்மம் 
வழிகாட்டும் 
இந்திய 
மரபுப் பாடங்கள்! 

குலத்தொழிலை 
அழித்தொழித்து 
கல்வி கற்று 
நாம் வளர ! 
தொழிற்கல்வி முதன்மை 
கொண்டு 
வருகிறது பாடத்திட்டம் ! 

அதனில் 
உயர்கல்வி சிலருக்கு 
தொழில் கல்வி பலருக்கு 
சிலர் மற்றும் 
கல்வி கற்க 
பலரும் சிலர்க்கு 
வேலை செய்ய 
குருகுலத்தின் அதிகாரத்தில் 
குலக்கல்வி துளிர்க்கிறதே! 


நீட்டாக ஒரு தேர்வு 
அனிதாக்களை 
கொல்ல 
கூட்டாக வருகிறது 
எட்டாம் வகுப்பிற்குள் 
மூன்று பொதுத் 
தேர்வுகள் ! 

நூலுக்கே நூல் 
என 
கல்வி மறுத்த 
கொடூரம் 
புதுக்கல்வி கொள்ளையாக 
புணரமைத்து வருகிறதே ! 

                                         - பாவி

Tuesday, July 23, 2019

குறுந்தொகை பாடல் 18

பாடல் :

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே!

பாடல் காட்சி  :

இரவுக் குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது. -  தலைவியை சந்தித்து விட்டு கிளம்பும்  தலைவனை எதிர்கொண்டு தோழி சொல்வதாக இந்தப் பாடல் இருக்கிறது 

இப்பாடலை  எழுதியவர் :

 கபிலர் , 235 பாடல்கள் எழுதிய அவரை பற்றி அறிமுகம் தேவையில்லை  , அதனால விளக்கம்

விளக்கம் 

தோழி என்ன  சொல்றங்கனா

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட - 

வேரல் வேலி - சிறு மூங்கிலாகிய வாழ் வேலியை உடைய,
வேர்க்கோட் பலவின்- வேரிலே பழக்குலைகளை உடைய பலா மரங்கள் நிரம்பிய 
சாரல் நாட - பக்கத்து மலையில் உள்ள நாட்டுல இருப்பவனே

சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு - பலா மரத்தின் சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்கியதைப்  போல

இவள் உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே -  தலைவியின் உயிர் சிறியது , ஆசையோ மிகப் பெரியது ,


யார் அஃது அறிந்திசினோரே -     இப்படி இருக்கிற நிலையை  அறிந்தவர் யார் ? 

இப்படி தலைவியின் நிலையை  எடுத்துக் கூறி

செவ்வியை ஆகுமதி!  -     சீக்கிரம் கல்யாணம் பண்ணுறதுக்கு ஒரு வழியப் பாருன்னு சொல்லுவதாக இந்தப் பாடல் இருக்கிறது செவ்வியை - வரைந்து (மணம் செய்துகொள்ளும்) கொள்ளும் காலத்தை,
ஆகுமதி - உண்டாக்கு

இதுல இரண்டு சாரல் வருகிறது ,  தலைவினின் மலையில்  பலாப்பழம் வேரிலே இருக்கிறது  அதுக்கு காவலாய்  மூங்கில்  வேலி இருக்கிறது  அதனால தலைவியின் மலையில் சிறிய கொம்பிலே தொங்கும் பெரிய பழத்தினால் கொம்பு தாங்கும் வலியை புரிந்துகொள்ள உன்னால் முடியாது ,  தலைவியை மணம் புரிந்துகொள் என்று சொல்வதாக பொருள் வருகிறது .

இந்த ரெண்டாவது பாடலில் , மற்ற பாடல்களிலும்  கூட நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் , இயற்கையை எவ்வளவு  தூரம்  அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதும் , அதனோடு வாழ்க்கையை  பிணைத்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் தான்  சங்கப்  பாடல்களின் உதாரணம் இயற்கையாகவே இருக்கிறது . . நாம்தான் இயற்கையில் இருந்து மிகவும் விலகி வந்துவிட்டோம் ,

குறுந்தொகை பாடல் 17

பாடல்

மா என மடலும் ஊர்ப; பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே.

இந்த பாடலின் காட்சி :

 தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமாறாமல் கூறியது-     தலைவியிடம் சொல்லி அழைத்துவா என்று அவன் தோழியிடம் கூறும்போது தோழி மறுக்காமல் இருக்க இச் செய்தியைச் சொல்கிறான்.


இதனை எழுதியவர் 

பேரெயின் முறுவலார் - குறுந்தொகை 17, வது  புறநானூற்றில் 239  வது பாடலும் இவர் பாடியுள்ளார் . முறுவலிப்பவர் பெண் என்று கருதி இவரைப் பெண்பால் புலவர் என்று கருதுகின்றனர்.  பேர் எயில் ஒரு ஊரின்  பெயர்.

விளக்கம்

இந்த பாடல்  மடலேறுதல் பற்றியது

இந்த பாட்டுல இருக்கிற கடைசி வார்த்தையை எடுத்து முன்னாடி போட்டுக்குங்க அப்பத்தான்  எளிதாக புரியும்

காமம் காழ்க்கொளினே -காம நோயானது முதிர்வுற்றால் . -, நம்ம தலைவனுக்கு அசையினால பித்தம் வந்து அது முத்தி போயிருச்சு , முத்திப் போனா ஊர் வழக்கமா என்னவெல்லாம் செய்யறாங்கனு   சொல்லி நானும்  அதை செய்வேன் , அதனால தலைவிகிட்ட சொல்லிடுனு  தோழியை மிரட்டுற பாட்டு தான் இது

மா என மடலும் ஊர்ப  -   பனை ஓலையை குதிரையாக நினைச்சிட்டு
மா – குதிரை  ,    மடலும் - பனை ஓலை , ஊர்ப - ஊர்ந்து போவது 

பூவெனக்  குவி முகிழ் எருக்கங் கண்ணியும்  சூடுப  - குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையையும்  - எருக்கம்  இழிவாக பார்க்கப்படுகிறது ,  அப்படிப்பட்ட எருக்கம் பூவில் செய்த மாலையை , பூ மாலையா கெத்தா  தலையில் போட்டுக்கிட்டு 

மறுகின் ஆர்க்கவும் படுப - வீதியில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரிக்கவும் படுவர் ,
ஊரே  கைகொட்டி சிரிச்சாலும்   அத பத்தி கவலை இல்லாம 

பிறிதும் ஆகுப  - தம் கருத்து முற்றாதாயின் சாதலுக்குரிய வரைபாய்தல்  ,
இதையெல்லாம் செஞ்சும்  முத்தழகும் , அவள் குடும்பமும்  ஒதுக்கில்லைன்னா சாகும் வரையில் போகிறதுதான் ஊர் வழக்கம்  , 


 நானும் மடலேறப்போறேன் , நீதான் முடிவு பண்ணனும் னு  தோழிகிட்ட  சொல்கிறான்

Sunday, July 21, 2019

நம்பிக்கை மனிதர்கள் 5 - கவிஞர் சல்மா

அடுக்கு மொழிகளையோ , அலங்கார வார்த்தைகளையோ , அழகுணர்ச்சியையோ கவிதையாக சொல்லப்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, வேறு தளத்தில் , வலி நிறைந்த துயரங்களை எளிய மொழியில் தம் கவிதைகளாய் எழுதியவர். 

தனது 13 ஆம் வயதில் இருந்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு , வெறும் ,ஒற்றை ஜன்னல் மட்டுமே வெளியுலக தொடர்பாக கொண்டு , ரகசியமாக கவிதைகளை எழுதி , எழுதும் காரணத்திற்காகவே அடக்குமுறைகளை சந்தித்த போராட்ட வாழ்க்கையை வாழ்ந்து, அதனை தன் எழுத்தை ,நம்பிக்கையை மட்டுமே கொண்டு வென்று காண்பித்தவர் "போராளி" ," கவிஞர்" , "சாதனைப் பெண்மணி " தோழர் சல்மா அவர்கள் .

கிடைக்கும் துண்டு காகிதங்களில் நடுநிசியிலும் , கிடைக்கும் நேரத்தில் கழிப்பறையில் நின்றுகொண்டும் கவிதைகள் எழுதியவர் இவர் .பெண்களின் சொல்லாத துயர்களை துணிந்து தம் கவிதை மூலம் சொல்லும் இவர் நவீன தமிழ்க் கவிதை உலகத்தின் முன்னணி படைப்பாளி .

இவரது கவிதை தொகுப்புகளான ஒரு மாலையும் இன்னொரு மாலையும் , பச்சை தேவதை , சிறுகதைகளின் தொகுப்பான "சாபம்" நெடுங்கதைகள் " இரண்டாம் ஜாமங்களின் கதை " , "மனமியங்கள் " போன்றவை ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பற்றிருக்கின்றன .


"நம்பிக்கை இன்னும் மீதமிருக்கிறது " - "your hope is Remaining " என்னும் தன்னார்வ அமைப்பை 2010 இல் தொடங்கி சம உரிமைக்காகவும் , பெண்களின் மீதான அடக்கு முறைக்கு எதிராகவும் தொடர்ந்து இயங்கி வருபவர்.இந்த அமைப்பு, பெண் குழந்தைகளுக்கான கல்வி ஆலோசனைகளையும் , சீருடைகளையும் இலவசமாக கொடுத்தல் , விளிம்பு நிலை மக்களுக்காக சுகாதார முகாம்களை நடத்துதல் , குழந்தை திருமணங்களை தடுத்தல் , கல்வி நிறுவனங்களின் மூலமாக பெண்கள் உரிமைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என ஆக்கப்பூர்வமாக செயலாற்றி வருகிறது . இந்த அமைப்பின் பல்வேறு செயல்பாடுகளை yourhopeisremaining என்ற இணையதள முகவரியில் அறியலாம் .மறவாமல் அனைவரும் சென்று பாருங்கள் .

இவரது வாழ்கை "சல்மா " என்ற பெயரிலேயே படமாகவும் வந்திருக்கிறது .இங்கிலாந்தை சார்ந்த "கிம் லாங்-கி-நாட்டோ " அவர்களால் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகெங்கிலும் உள்ள திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும் , அவ்விழாக்களில் பாராட்டுகளும் விருதுகளும் வாங்கிக் குவித்துள்ளது .

இவர் தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் தலைவராகவும் , பொன்னம்பட்டி துவரங்குறிச்சி பேரூராட்சி தலைவராகவும் இருந்துள்ளார் . சமூக சேவைக்காக 2018 ம் ஆண்டிற்கான பெரியார் விருதையும் , 2019 ஆம் ஆண்டிற்கான மகாகவி கன்னையாலால் சேதியா இலக்கிய விருதையும் பெற்றவர் .

மிச்சிகன் தமிழ் சங்கத்தின் சார்பாக நடந்த , கவியரங்கத்திற்கு தலைமை ஏற்று நடத்திய அவரிடம் கவியிரங்கத்திற்கு முன்பும் , பின்பும் , கவிதையை பற்றி , அது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி , தற்கால அரசியில் சூழல் பற்றி , எப்படி ஒரு சித்தாந்தம் கட்டமைக்கப்படுகிறது என்ற சான்றுகளை பற்றி , செயல்பட வேண்டிய அவசியத்தையும் , தமிழகம் எதிர் கொள்ள இருக்கும் பிரச்சனைகளையும் பற்றி என ஒரு நீண்ட உரையாடல் நடத்தும் வாய்ப்பு கிடைத்தது ,

கவிதை ஒரு போராட்ட வடிவம் , கதையோ ,கட்டுரையோ போராட்ட களத்தில் முன்னெடுக்கப் படுவதில்லை . உங்கள் கவிதைகள் அனுபவத்தில் இருந்து வர வேண்டும் , அவை அரசியில் பேச வேண்டும் என்றார் .

Wednesday, July 17, 2019

வானவில்

வேறுபாடுகளின் அழகே
வானவில்
ஒரே நிறம்
தகுமோ நாட்டிற்கு ?

                          -பாவி

Tuesday, July 16, 2019

கவியரங்க அழைப்பு

மிசிகனில்  கவிஞர்  சல்மா  அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் (ஜூலை 20  2019 ) கவியரங்கத்துக்கு , பெண்ணியம்  சார்ந்த கவிதைகளை கேட்டு , மிச்சிகன் மக்களை கலந்து கொள்ள சொல்வதற்காக எழுதியது

மிச்சிகன் வாழ் தமிழர்களே !!!
கோடையின் தகிப்பதனை
தமிழிட்டு குறைத்திடவே !
தமிழ்சங்கம் நடத்திடுதே !
கவியரங்க நிகழ்ச்சி ஒன்று !
"கவிஞர் சல்மா" வின்
தலைமைதனில் !
டிராய் நகரிலே
சூலைத் திங்கள் 20 ம் நாள்
மாலை  5 மணி முதல் 7  மணி வரை
பொங்கி வரும் தமிழை
கேட்டு மகிழ வாருங்கள் !

சிந்தனையை செப்பனிட
செவிகளுக்கு விருந்தளிக்க
கவிப்புலமையை பறைசாற்ற
இதோ
முத்தான மூன்று தலைப்புகள்

1 . நெஞ்சு பொறுக்குதில்லையே !
2 .கர்வம்  ஓங்கி வளருதடி !
3 . அமிழ்தில் இனியதடி!

பெண்ணியம் கருப்பொருள் !
பெண்களுக்கே முன்னுரிமை !
இணைப்பைச் சுட்டி
பதிந்துடுவீர்
தேர்ந்தெடுத்த தலைப்புதனை !
அனைவரும் வாரீர்!
அனுமதி இலவசம்!!!

                                             -பாவி

Monday, July 15, 2019

அரசியல்வாதி

வியாதி என்பர் 
நமைப்பிடித்த சாபம் 
என்பர் 
பங்கேற்கார் 
செயலாற்றார் 
விரல் மையிட்டுக் 
கொள்ளா வரை 
அரசியலின்றி 
இங்கும் எங்கும் 
ஒரு அணுவும் 
அசையாது! 

- பாவி