Thursday, September 28, 2017

மறைக்கப்படும் மனிதர்களின் நம்பிக்கைக் குரல் - (ஆசியாவின் நோபல் பரிசான Ramon Magsaysay விருது பெற்ற Mr .Besweda Wilson அவர்களின் உரை )

செப்டம்பர் 23 2017 - திரு வில்சன் அவர்கள் மிச்சிகன் யூனிவெர்சிட்டியில்  இந்தியாவில்  தீண்டாமையின் உண்மை நிலையை விளக்கி  Manual Scavenging in India - The Stark reality of Untouchability - எனும் தலைப்பில் உரையாற்றினார் .   

யார் இந்த வில்சன் என்று கேட்பவர்களுக்கு  - https://en.wikipedia.org/wiki/Bezwada_vilson .

இதில் கலந்து கொள்ளும் வரை   - மனிதக் கழிவை மனிதன் அள்ளும் கொடுமை இந்தியாவில் அவ்வளவு பரவலாக இல்லை , தொழில்நுட்பம் பெருகி விட்டது இப்போது  இந்த முறை வழக்கொழிந்து விட்டது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன் . 

இந்தியாவில் இன்றும் லட்சம் குடும்பங்களுக்கு மேல் இதில் இன்னமும் கட்டாயத்தால் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதும் , இதனை தடுக்க 1993 ஆம் ஆண்டே சட்டம் இருந்தாலும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்பதும் , இந்தியா அரசாங்கம் தொடர்ந்து  உலக அரங்கில் மறுத்தும் , உள்ளூரில் மறைத்தும் வருகிறது என்பது அதிர்ச்சியாக இருந்தது .

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான்   வில்சன் என்னும் மாமனிதர்  குடும்பம் மறந்து , தூக்கம் மறந்து மக்களின் மேம்பாட்டிற்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாது    போராடி வருகிறார் . 

சந்தித்து உரையாடும் போது  கருப்புச் சட்டைகாரர்கள் தானே நீங்கள்?  உங்கள் அமைப்பு (  பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம் அமெரிக்கா ) பற்றி  வந்தவுடன் அறிந்து கொண்டேன் என்று தமிழில் பேசி ஆச்சிரியப்படுத்தினார் .  எங்கெல்லாம் வேலை செய்தாரோ அங்கே இருந்த மொழிகளை பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை பின்பு கேட்டு அறிந்து கொண்டேன் .  

மிகவும் தன்மையான மனிதர் , தன்னம்பிக்கை தரும் கம்பீரம் , தீர்க்கமான வாதங்கள் ,  தான் எடுத்த நிலையில் தெளிவு , அநீதிக்கு எதிராக கண்களில் தெரியும் கோவம் , அது வார்த்தைகளில் வெளிப்படாமல் கோர்வையாக பேசும் பக்குவம் .     இப்படி  ஒரு மனிதரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு   மிச்சிகன் யூனிவெர்சிடியின் உளவியல் துறை பேராசிரியர் திரு.ராம் மஹாலிங்கம் அவர்களுக்கு   நன்றி சொல்ல வேண்டும் .

அவர் உரை முழுவதும் சுட்டெரிக்கும் கேள்விகள் , அரசாங்கங்களையும் , அதிகாரங்களையும் கேட்டு கேட்டு பதில் வராமல் போனதால் இன்னும் வேகமாக வந்து விழுகின்றன அவர் கேள்விகள் .   அவர் கேட்கும் கேள்விகள் மூலம்  உரையின் சாராம்சத்தை விளக்கலாம் என்று முயற்சித்திருக்கிறேன்.

 புறவாசல் வழியே வந்து , அதன் வழியே போகும் முகம் அறியாத  , நீங்கள்   அறிந்து கொள்ள விரும்பாத மனிதர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?   - Safai Karmachari Andolan அமைப்பை   நான் தொடங்கவில்லை , தான் இந்த நிலையில் இருப்பதை ஏற்றுக் கொள்ளாத நாராயண அம்மா , சரோஜினி போன்றோர் தான் இதற்கு முன்னோடிகள் . 

 ஒரு மனிதனை , அவன் மனிதத்தன்மையை அழிக்க  எவரோ ஒருவரின்  கழிவை  வெறும் கைகளால் சுத்தம் செய்ய சொன்னால் போதும் இதுதான் இந்த சமூகம் விரும்புகிறதா ?

 தீண்டத்தகாதவன் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது , நான் இதுதான்   செய்ய வேண்டும் என்று என் பிறப்பை கொண்டு முத்திரை குத்துவதற்கு நீங்கள் யார் ?

சட்டம் இயற்றி 23  ஆண்டுகளாகியும் ஒருவர் கூட கைது  செய்யப்படவில்லை . ஒருவர்இ மீது கூட வழக்கு பதிவு இல்லை ,தற்கான சட்டம் இருப்பதாவது அனைவர்க்கும் தெரியுமா ?

உலகின் அனைத்து   நாடுகளுக்கும் சென்று உரையாற்றும் பிரதமர் , இந்தியா நாடளுமன்றத்தில் இந்தியாவில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது என்பதையும் , சமூகம் தன் கொடூர கரங்களால் இந்த மனிதர்களை வதைக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள தயாராக உள்ளாரா ? 

தூய்மை இந்தியா , ஊழல் இல்லாத இந்தியா , கறுப்புப்பணம் இல்லாத இந்தியா , புல்லட்  , மெட்ரோ ட்ரெயின் என்று அனைத்துக்கும் தேதி குறித்து  செயல்படுத்தும் இந்தியா அரசாங்கத்திடம்      இந்த முறை எப்போது ஒழியும் என்பதற்கு பதில் உள்ளதா ? 

இதற்கு பதில் இல்லாமல் வளர்ச்சி பற்றி பேசுவது உண்மையான வளர்ச்சியா ?

ஒரு  ராக்கெட்டில் 104 செயற்கைகோள் செலுத்தும் இந்தியாவிடம் , மனித கழிவை மனிதன் தான்  அள்ள  வேண்டும் என்ற நிலையை மாற்ற ஒரு கண்டுபிடிப்பு கூட ஏன்  இல்லை ?

நாங்கள் கணக்கு எடுத்த  வரையில் எங்களுக்கு தெரிந்து 1470  பேர் இந்த வேலையில் விஷவாயு தாக்கி இறந்திருக்கிறார்கள் , தெரியாமல் எத்தனை   பேர் ?

இது இயற்கை    மரணமா  ? இல்லை அரசியில் படுகொலை .

2017 இல் - 54  பேர் தீவிரவாதத்துக்கு பலியாகி உள்ளனர் , ஆனால் 117  பேர் கழிவு அள்ளும்போது பலியாகி உள்ளனர் . அரசாங்கம் இதனை மறுக்கிறது . 10  மாடு செத்தால் தேசிய ஒற்றுமையும் , தலைப்பு செய்தியும் ஆகிறது , மனிதர்கள் இறந்தால் செய்தி வருகிறதா ??

எத்தனை பேர் கைகளால் மலம் அள்ளுகிறார்கள் என்ற கணக்கு   இல்லாத  ஒரு அரசாங்கம் , நாட்டில் உள்ள மாடுகளை கணக்கு எடுக்கிறது ?

100 % தலித்துகள் மட்டுமே இதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் , இது எந்த வகையில் நியாயமாக  படுகிறது ? 

படிப்பறிவு இல்லை , பணம் இல்லை அதனால் செய்கிறீர்கள் என்று நீங்கள் வாதிக்கலாம் ,  40  சதவீத மக்களுக்கு இந்தியாவில் படிப்பறிவு இல்லை , 50  சதவீதத்துக்கும் மேல்  உள்ள மக்களுக்கு பணம் இல்லை அனாலும் அவர்கள் அனைவரும் இதனை    செய்வதில்லை ஏன் ? 

தூய்மை இந்தியா என்று சொல்லும் அரசியல்வாதிகள் ,  man hole இல் இறங்கி ஒரு முறை சுத்தம் செய்ய தயாரா ?  ஆள் வைத்து குப்பையை கொட்டி , புகைப்படம் எடுக்க சுத்தம் செய்வதுதான் தூய்மை இந்தியாவா ?

நாட்டிலேயே இந்திய ரயில்வேதான் மனித கழிவை அள்ளுவதற்கு   நிறைய மக்களை நிர்பந்திக்கிறது    ஆனால் மத்திய அரசாங்கம் அதனை தொடர்ந்து மறுக்கிறது .

நீங்கள் வாழும் சமூகத்தில் மனிதனை மிருகத்தை விடவும் கேவலமாக நடத்துவதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா ?

இறுதியில் ஒரு தகவலை சொல்லி உரையை முடிக்கிறேன் .   காந்தி  அடுத்த பிறப்பில் தலித்தாக பிறக்க ஆசைப்பட்டாராம் , கோயம்பத்தூரில் உள்ள மணி , தான் வாழ்நாள் முழுவதும் மலம் அள்ளி ஜூலை முப்பது 2017 இல் ஓய்வு பெற்றார் அவர் சொன்னது நான் செய்ததை இந்த பிறப்பில் ஏன் தலைமுறை செய்யக் கூடாது .

எனக்கு காந்தி    சொன்னதைவிட  மணி சொன்னதுதான் முக்கியம் .

உரைக்கு பின் பெரியார் -அம்பேத்கர்  படிப்பு வட்ட நண்பர்கள் எங்களால் என்ன உதவி செய்ய முடியும் என்று  திரு வில்சன் உடன் ஆலோசித்தோம் ,  பண உதவி பெற்று சிலரை மீட்பதை விட  இதில்ஒ ஈடுபட்டுள்ள ஒரு  லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களை மீட்க வேண்டும் என்று தீர்க்கமாய் சொன்னார் .

தன் அமைப்பு மூலம்  அவர்  திரட்டிய கோப்புகளில் உள்ள தகவல்களை கணினி மயமாக்கவும் ,  இந்த முறையை    ஒழிப்பதற்கு  தொழில்    நுட்பம் தொடர்பான தகவல்களை பரிமாறுவதற்கும்  அவரிடம் பேசி உள்ளோம் . 

மிச்சிகனில் உள்ள சில நண்பர்களும் உதவி செய்வதாக இணைந்து உள்ளனர் . முதற் கட்டமாக எங்கள் மின்னஞ்சல்களை அவரிடம் பகிர்ந்து உள்ளோம் . ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்க   வேண்டும் அல்லவா ? 

நரகலின் கறை அழியாமல் படிந்திருக்கும் மனிதர்கள் நம்மை சுற்றி இருக்கும் சமூகத்தில் இருந்துகொண்டு , வல்லரசு என்றும் ,தூய்மை இந்தியா என்றும் எப்படி பெருமை பேச முடிகிறது  ???  (இது so called 56 inch மனிதர்களுக்கும் பொருந்தும் ). 



                                                                                                                                                                  -பாவி 
                                                                                                                                         paavib.blogspot.com

Tuesday, September 19, 2017

பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம் -மிச்சிகனில் நடத்திய பெரியார் பேச்சுப் போட்டி - தோற்றமும் , நிறைவும் கட்டுரையாக .

 பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் பெரியாரின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு ,இளையோருக்கான பேச்சுப் போட்டியை  நடத்தினோம் , மிகச் சிறப்பாக நடை பெற்ற நிகழ்ச்சியின்  கட்டுரை.

பெரியாரின் கருத்துக்களை அடுத்த தலை முறைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்ற கேள்வி படிப்பு வட்டத்தின் கலந்துரையாடலில் அதிகமாக கேட்க்கப்பட்டது . அதனை பற்றி உரையாடும்தபோது  தோழர் நிர்மல் பேச்சுப் போட்டி என்ற   யோசனையை முன் வைத்தார் . இது நல்ல கருத்தாக பட செய்யலாம் என்று முடிவெடுத்தோம் ,  பின் மிச்சிகன் மாகாணத்தின் உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கேட்கலாம் என்று முதல் புள்ளி உருவானது .

இதற்கான முதல் கூட்டம் , நம்புங்கள் - மிச்சிகனில் உள்ள ஒரு  பூங்காவின்  மரத்தடியில்  அமர்ந்து   விவாதித்தோம் .  பரிசுப் பணம் , எப்படி நடத்துவது , சில தலைப்புகள் , என்னென்ன முன்னேற்பாடுகளை செய்வது என்று அந்த கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது .

ஆனால் அனைவர்க்கும் இருந்த கேள்வி பெரியாரைப் பற்றிய பேச்சுப் போட்டி என்றால் ,  யாரேனும் பேச வருவார்களா என்பதுதான்  .  மிகுந்த யோசனைக்கு பிறகு  யாரும் பேச வரவில்லை என்றால் எங்கள் குழந்தைகளை வாழ்க பெரியார் என்ற அளவிலாவது பேச செய்வது , ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் வந்தால் கூட வெற்றி தான்  , என்ன   நடந்தாலும் நடத்துவது என்று முடிவு செய்தோம் .

அரங்கம் வேறு பதிவு செய்ய வேண்டும் , சரி   ,அதனை தள்ளிப்    போட   முடியாதென்று  மிகுந்த மன  தைரியத்துடன்  50 பேர் அமரும் அளவு ஒரு அரங்கத்தை பதிவு செய்தோம் .

என்ன என்ன தலைப்புகள் கொடுக்கலாம் என்று படிப்பு வட்டத்தில் பல்வேறு மாகாணங்களில் உள்ள தோழர்களை கலந்தோசித்து ஒரு வழியாக தலைப்புகள் முடிவாயின .

இனி மார்க்கெட்டிங் எப்படி செய்வது என்று யோசித்தோம் -  தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் விளம்பரங்ககளை தயார் செய்து  , படிப்பிய வட்டத்தினர் வசிக்கும்  மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் , இந்தியன் மளிகை கடைகள் , உணவகங்கள் என்று ஒவ்வன்றிலும் பேசி அனுமதி வாங்கி விளம்பரங்களை ஒட்டினோம் , எங்கள் படிப்பு வட்டத்தினரில் குழந்தைகள் கூட ஆர்வமாக இதில் பங்கேற்றனர் .இது  எங்களுக்கும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது  .

அனைத்து இடங்களிலும் விளம்பரங்களை வைத்தாயிற்று . மிச்சிகன்  தமிழ் சங்கத்தை தொடர்புகொண்டு , சங்கத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் மின்-அஞ்சலும் அனுப்ப ஏற்பாடு செய்தோம் .

இத்தனை   செய்தும் முதல் இரண்டு வாரங்கள் கனத்த மவுனம் . நாங்கள் எங்களுக்குள் தொலைபேசியில் அழைத்து அழைப்பு வந்ததா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டோமே தவிர ஒரு அழைப்பும்   வரவில்லை.
காலியான இருக்கைகளை வைத்து பிரம்மாண்ட வெற்றி என சில கட்சிகளை  போல நடிக்கவும் தெரியாது .

என்ன செய்யலாம்  என்று இருக்கையில் , வந்தன அழைப்புகள் (தோழர் திருமலை ஞானம் நண்பர்களிடம் பேசி முதலில் பதிவு செய்ய வைத்தார் ) . கொஞ்சம் கொஞ்சமாக , அழைப்புகள் வர  22 குழந்தைகள் வரை பதிவு செய்தனர் .

அரங்கம் நிரம்புமா என்ற நிலை மாறி  , அரங்கம்  போதுமா?  என்ற நிலை வந்தது . சமாளிப்போம் என செப்டம்பர் 16 ம் தேதிக்கு காத்திருந்தோம் .

அன்றைய தினம் , நிற்பதற்கு இடம் இல்லை , அத்தனை கூட்டம்  80 கும் அதிகமானோர் வந்திருந்தனர் . மிச்சிகன் தமிழ் சங்கத்தினர் ஆதரவு அளித்து , நிகழ்ச்சி முடியும் வரை உடன் இருந்தனர் .

முதல் நிலை , இரண்டாம் நிலை என்று இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 20 குழந்தைகள் பெரியாரின் கருத்துக்களை சுற்றி சுற்றி பிரித்து மேய்ந்தார்கள் . இளங்கன்று பயமறியாது அல்லவா ? பெரியவர்களை பேச சொன்னால்  தயங்கி சில கருத்துக்களை சொல்லி இருக்க மாட்டார்கள் , ஆனால் குழந்தைகள் எந்த வித தயக்கமும் இல்லாமல் பொட்டில் அடித்தாற்போல பேச பேச அருகில் இருந்த எங்களுக்கு  மகிழ்ச்சி சிறுது சிறிதாக ஊற்றெடுத்து கரை புரண்டு ஓட ஆரம்பித்தது . எதற்காக ஆரம்பித்தோமோ அது சேரும் இடத்தில் சேர்ந்து விட்டதாகவே நினைக்கிறோம் .

மூன்று நடுவர்களை அழைத்திருந்தோம் , மதிப்பெண்களை அவர்கள் வழங்க சிறு குழந்தைகளுக்கான பிரிவில் , புள்ளி அடிப்படையில்   தான் வேறுபாடு  , அதனால் இரன்டு சிறப்பு பரிசுகளையும் சேர்த்தி கொடுத்தோம் .

தோழர் நிர்மல் வரவேற்பு உரை நிகழ்த்தினார் , தோழர் பிரேம்  தமிழக விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கவும் , நீட் தேர்வை மாநிலப்   பட்டியலுக்கு மாற்றவும் , கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதலை கண்டித்தும்  ,நவோதய பள்ளிகளின் மூலம்  நடக்கும்    இந்தி  திணிப்பை எதிர்த்தும் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினார் . தோழர் பிரபாகர்   நிகழ்ச்சி முழுவதும் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்தார்.  தோழர் திருமலை ஞானம்  பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் தொடங்குவதற்கான தேவையையும் , செயல்பாடுகளையும் விளக்கினார் . தோழர் அன்பு நிகழ்ச்சியை படம் பிடித்தார் .

 பின் நடுவர்களையும் , நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரையும் பெரியார் பற்றிய அவர்களின் பார்வையை பேச அழைத்தோம் , மிகவும் சுவாரசியமாக அவர்களின் பேச்சு இருந்தது . அவர்கள்   தொடர்ந்து சிறப்பாக செயல்பட பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டத்தினரை கேட்டுக்  கொண்டனர்   இந்த மாதிரி படிப்பு வட்டங்கள் இன்றைய சூழலில் அவசியம் என்றும் கூறினர் .  நடுவர்களில் ஒருவர் தன் சொந்த வாழ்க்கையில் பெரியார் ஏற்படுத்திய மாற்றங்களை  பகிர்ந்து கொண்ட போது நிறைய பேரின்  கண்கள்  குளமானது .  பெரியார் என்ற மனிதனை பின்பற்றுவதற்காக பெருமையாக உணர்ந்த தருணம் அது .  அவர் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை எழுத அவரிடம் அனுமதி கேட்டிருக்கிறேன் , அவர் அனுமதித்தால் எழுதுகிறேன் .

 இறுதியாக என் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது .

அனைவரும் குழந்தைகள் என்பதால்   பேசின அனைத்து   குழந்தைகளுக்கும்  பரிசும் , சான்றிதழும் , நினைவுப் பதக்கமும் கொடுத்தோம் . அவர்கள் வாழ்க்கையின் என்றேனும் ஒருநாள் , தானாக தேடி பெரியாரைப் படிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது . இப்பொது நாங்கள் தேடி படிக்கிறோமே அதைப் போல , பெரியாரின் கருத்துக்கள் ஒரு தலைமுறையுடன் முடிந்து விடுவதில்லை , இது தமிழர்களிடையே தலைமுறை தலைமுறையாக தொடரும்  ஏனெனில் அவரின் கருத்துகளுக்காக தேவை எல்லா காலங்களிலும் உள்ளது .

Monday, September 11, 2017

முகம் தெரியாதவர்களுக்காக நான் ஏன் Neet ஐ எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் ?

செப்-1  அனிதாவின் மரணச்  செய்தி கேட்டதும்   வருத்தமே   மேலோங்கி இருந்தது , பின் வருத்தம் கோவமாக மாற  இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தோன்றியது . ஒத்த கருத்துள்ள நண்பர்கள் சேர அமெரிக்காவின் மிச்சிகன் - நோவி நகரில் இரங்கல் கூட்டம் செப்-2  இல் நடத்தினோம் . செப் -10  இல் ரோசெஸ்டர் நகரில் இரண்டாவது கூட்டம் நடத்தினோம்

இரங்கல் கூட்டமாக மட்டும் இல்லாமல் , நீட் என்றால் என்ன ? அதன் பாதிப்புகள் முதலியவற்றை விளக்கும் நிகழ்வாகவும்  இருந்தது  .  தொடர்ந்து நண்பர்கள் நீட் பற்றிய விளக்கங்களை  கொண்டு செல்வதற்காகவும்   அதன்  பாதிப்புகளை விளக்கவும்  , கல்வியாளர்கள் , நீதிபதிகள் , சமூக அக்கறை உள்ளவர்கள் , நீட் ஐ எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள்  ஆகியோரை பல்வழி அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டு விளக்க கூட்டங்களை நடத்துகிறார்கள் .  அடுத்த கட்டமாக அமெரிக்காவில் 40   இடங்களுக்கு மேலாக  நடந்த இரங்கல் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கையெழுத்துக்களை சேகரித்து , இந்தியன் consulate  கு பெட்டிஷன் ஆக கொடுக்கவும்  முடிவு  செய்துள்ளார்கள் .

இந்த இரண்டு வாரங்களுக்குள் whatsup  இல் ஆதரித்தும் எதிர்த்தும் நிறைய தரவுகள் . எதிர்த்து வந்தவை அதிகம் .

நீட் ஐ எதிர்க்கும் அனைவரும் , கட்சி சார்பானவர்கள் , நாமக்கல்லில் பள்ளிக்கூடம் நடத்துபவர்கள் , பிண அரசியில் செய்பவர்கள் , தனியார் மருத்துவ கல்லூரிகளினால் பயன் அடைபவர்கள் , அதனால் பாதிக்கப்பட்டு இடம் கிடைக்காமல் போனவர்கள் அல்லது தன் சுற்றி உள்ள நெருங்கிய உறவினர்கள் பாதிப்படைந்ததால் சுயநலத்துக்காக குரல் கொடுப்பவர்கள் என நிறைய சித்தரிப்புகள் நடந்தன , நடக்கின்றன .

நான் நீட் ஐ எதிர்க்க மேல சொன்ன எந்த காரணமும் இல்லை .

நீட் போராட்டங்கள் தமிழகத்தில் திட்டமிட்டு முடக்கப்படும் நிலையில் , தொலைக்காட்சிகள் , பத்திரிகைகள் சிலவற்றை தவிர்த்து பெரும்பாலும்     இச் செய்திகளை ஒளிபரப்பாத தருணத்தில் , பரபரப்புக்கு எல்லாரும் எழுதும் போது  நாமும்    எழுதலாம் என்று இரண்டு வாரங்களுக்கு முன்   எழுதாமல் இப்போது எதற்கு    எழுத வேண்டும்  ?   ஒரே காரணம் - தமிழகதில் இது அடக்குமுறைக்கு உள்ளாகும் போது
புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுக்க  வேண்டும் என்பதால் ,  இது நீர்த்து போகக்கூடாது
 என்பதால் எழுதுகிறேன்  .

மேல சொன்ன எந்த   காரணமும்  இல்லை என்றால் நீட் ஐ எதிர்த்து முகம் தெரியாத அனிதா போன்றோருக்காக நான் என் குரல் கொடுக்க வேண்டும்  ?? என்ன அவசியம் ?

முகம் தெரியாத யாரோ போராடியதன் பலனாகத்தான்  அரசாங்க பள்ளிகள் வந்தன - நான் படிக்க முடிந்தது .
முகம் தெரியாத யார், யாரோ  கொடுத்த நன்கொடையால்தான் - என் பள்ளி கட்டிடம் உருவானது .

முகம் தெரியாத எவரோ எடுத்த முடிவில்தான் - முதன் முறையாக , அரசாங்கப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் சேர்க்கப்பட்டது .

முகம் தெரியாத வேலை வெட்டி இல்லா யாரோ  செயல்படுத்தியதன் விளைவாக - கல்லூரியில் முதல் தலைமுறை பட்டதாரிக்கான ஊக்கத்தொகை கிடைத்து படிக்க முடிந்தது .

முகம் தெரியாத எனக்காக -  அவ்வளவு பழக்கம் இல்லாத  என் கல்லூரி சீனியர்கள்  CIT கல்லுரி     என்று பெயர் கேட்டதும்    எடுத்த இரண்டு மணிநேர நேர்முகத் தேர்வு வகுப்பால்தான் என்னால் IT  நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடிந்தது .

நான் மட்டும் இல்லை  , முகம் தெரியதா எவர் எவரோ , செய்த செயல்களால்தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம் நண்பர்களே . அவர்களுக்கு நாம் திருப்பிச்  செய்ய முடியுமா ? நம்மை தெரிந்துதான் குல கல்வி முறை வேண்டாம் என்று எதிர்த்தார்களா?  பிறப்பால் மட்டுமே கல்வி என்று இருந்திருந்தால் ஒரு சமூகத்தை தவிர நாம் எல்லாம் படித்திருப்போமா ?

இதனால் நான் நீட் ஐ முகம்  தெரியாத என் தம்பி தங்கைகளுக்காக , என் தமிழ் மாணவர்களுக்காக , பொருளாதார வசதி அற்ற என் சமூகம் ஆரம்ப சுகாதார நிலையங்களை இழந்து விடக் கூடாது என்பதற்காக , என் கிராமங்களில் மருத்துவ வசதி இல்லாமல் போய்  விடக்கூடாது என்பதற்காக , நான் , நாம் நீட் ஐ எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் .

நம் முகம் தெரிவதோ , யாருக்காக நாம் எதிர்கிறோமோ அவர்கள் முகம் நமக்கு தெரிவதோ முக்கியம் இல்லை , நம் எதிர்ப்புக் குரல் தொடர்ந்து கேட்பதுதான் முக்கியம் .

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களே , வாருங்கள் பதாகை தாங்கி உரக்கச் சொல்வோம் நீட் எங்களுக்கு வேண்டாம் !!!!!!!!!!!!!!!!!

                                                                                                                          -பாவி

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...