Friday, August 18, 2017

கேள்விக்கென்ன பதில் !!! - முழிகதை

என் அருமை மகள் அவள் அம்மாவின் மூலமும் , கார்ட்டூன்களின்  மூலமும் எண்களை கற்றுக் கொண்டிருக்கிறாள்.

 ஆனால் கேள்வி கேட்டு முழிக்க  வைப்பது மட்டும் என்னிடம் . அறிவாளி என்று நினைத்து கேட்கிறாளோ இல்லை எப்படியும் தெரிய போவதில்லை கேட்டு வைப்போம் என்று கேட்கிறாளோ  தெரியவில்லை .

நங்கள் சென்ற கடையில்  நிறைய lane கலில் எண்கள்  இடம் பெற்று இருந்தன .  அதனை பார்த்துக் கொண்டிருந்த மகளை நானும் சேர்ந்து பார்க்காமல் என்ன  கண்ணு பார்க்கிறாய் என்று கேட்டுவிட்டேன் , அமைதியாக இருந்திருக்கலாம் .

அப்பா 1  , 2, 3  , 9  வரைக்கும் ஒரு நம்பர் போட்டிருக்குது , ஏன் 10 , 11 ரெண்டு நம்பர் போட்டிருக்குது ?

கொஞ்சம் எளிமையான கேள்வி என்று நினைத்து சொன்னேன் , தங்கம் இது  ஒரு digit number 0 to 9 ,  10 , 11 , two digit number . என்று சொல்லி காலரை    தூக்கி வீட்டுக் கொண்டேன்  (பதில் சொல்லி விட்டோம் என்ற பெருமையில் )   . கேள்வியே அதற்கு அப்புறம்   தான்  என்று தெரியாமல் .

இல்லைப்பா , 1 to 9 ஒரு  தடவை தான் சொல்லுறோம் , டென் , elevenum  ஒரு தடவை தான் சொல்லுறோம் , அப்புறம் நம்பர் மட்டும் ஏன் ரெண்டு போடுறோம் சொல்லுப்பா .

அப்போது இருந்து இப்போ வரை முழித்துக் கொண்டிருக்கிறேன் . இது எல்லாம் ஏன் எனக்கு இவ்வளவு வருடமாக தோன்றவில்லை ? இதற்கு என்ன பதில் சொல்வது ?

தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டு அடுத்த கேள்விக்கு  காத்திருந்தேன் . அப்பா சாக்லேட் சாப்பிடலாம் வா என்று அழைத்தாள்   அருமை மகள் . இதற்கு மட்டும் தான் நீ பிரயோஜனம் என்று சொல்லுகிறாளா இல்லை நிஜமாலுமே கூப்பிடுகிறாளா என்று  தெரியவில்லை ,ஆனால்   சாக்லேட் நன்றாக இருந்தது .

திரு. கார்த்திகேய சிவசேனாதிபதி” -அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்

மிச்சிகன்     தமிழ் சங்கத்தின் மூலம் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

இந்த நிகழ்ச்சிக்கு அரங்கம்  நிரம்பிய கூட்டம்.நம்  மக்கள் தம் குழந்தைகளுடன்  வந்து பங்கேற்றனர்.

அவரை இதற்கு முன் சந்தித்து பேசியிருந்தாலும் , மறுபடியும் கலந்து கொள்ளலாம் என்ற ஆவலில் கலந்து கொண்டேன். ஜல்லிக்கட்டு என்றவுடன் , எல்லாரும் போல நாங்களும் ஒரு சிறு போராட்டத்தை மிச்சிகன் aburn hills  பகுதியில் அரங்கேற்றினோம் ஆனால் அதனால்    என்ன பயன் என்று தெரியாமல் இருந்தது . என் புருசனும் சந்தைக்கு போனான் கணக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தேன் . விடை இதில் தெரிய வந்தது.

வெளிநாடு வாழ் தமிழ் மக்கள்  நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு   நன்றி சொல்லி  தொடங்கினார் . ஒவ்வொரு நாளும் மத்திய அரசாங்கத்திடம் உளவுத்துறை அறிக்கை சமர்பிக்குமாம் . அதில் தவறாமல் இடம் பெற்றவை , வெளிநாட்டில்  இருக்கும் தமிழர்கள் நடத்திய போராட்டம் . இது மிகப் பெரிய அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுத்தது என்ற தகவலை கூறினார் . ஏதோ நாமும் ஒரு சிறு பங்களித்தோம் என்று மனதின் ஓரத்தில் ஒரு திருப்தி வந்தது .( வரலாறு முக்கியம் அல்லவா ?  )

 அதன்  மூலம் மத்திய அரசாங்கத்திற்கு  தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தம், தடை நீங்க எடுக்கப்பட்ட முயற்சிகள் , தமிழகத்தின் இன்றைய அரசியில் சூழ்நிலை , அதனால் ஏற்படும் ஆதங்கம் ,மாட்டு அரசியில், தம் அமைப்பின் மூலம் செய்து வரும் பணிகள் , உணவுப் பொருட்களின் மீது நடைபெறும் வணிக வன்முறையை
அவர் விவரிக்கும் போது இனி தொழிற்சாலைகளில்  நாம் உண்ணும் பழவகைகள்   முதற்கொண்டு தயாரிக்கப்படுமோ என்று அச்சமாக இருந்தது .

 வளர்ச்சித் திட்டங்கள்  என்ற பெயரால் விவசாயிகள் சந்திக்கும் அடக்குமுறை , அதனால் ஏற்படும் விளைவுகள் முதலியவற்றை விரிவாகவும்  தெளிவாகவும் விளக்கினார்.

 காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்காமல் விட மாட்டார்கள் போல . உணவை இழந்துவிட்டு , தண்ணீரை மாசுபடுத்தி விட்டு  வளர்ச்சியை வைத்து என்ன செய்வது ?   ஏன் தமிழகத்துக்கு மட்டும் இவை வருகின்றன ? காவிரியில் மீத்தேன் இருந்தால் கங்கையில் இருக்காதா என்ன ? ஏன் அங்கே போகவில்லை என்ற சிந்தனைகள் கிளை பரப்பி என்னுள் ஒடத் தொடங்கின.

#saveTamilnaduFarmer அமைப்பின் மூலம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு செய்து வரும் பணிகள்    எடுத்துரைக்கப்பட்டது.    அந்த குடும்பங்களை  விசாரித்து கண்டறிந்து அவர்களுக்கு தேவையான  வாழ்வாதார பணிகளுக்கும் , அக்குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்கும் இவர்கள் உதவி புரிந்து வருகிறார்கள் .

நடிகர்கள் சித்தார்த் மற்றும் பாலாஜி இவர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவி புரிகின்றனர். நல்ல முயற்சி . நம் மக்கள் ஆர்வமுடன் இந்த அமைப்பிற்கு நன்கொடை வழங்கினர்

பின் கேள்வி பதில் . விவசாயம் செய்ய போகிறேன் . மாடு வளர்த்தலாம் என்று ஆசை என்ன மாடுகளை வளர்த்தலாம்   என ஒரு தம்பதி கேட்ட கேள்விக்கு ,   நான் சும்மா சொல்லிட்டு போயிடலாங்க ஆனா நிலைமை சரியில்லை , இங்கே இருந்தாவது நீங்கள் அங்கே இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம் , அங்கே வந்து விவசாயம் செய்தால் உங்களை காப்பாற்ற நீங்கள் போராட வேண்டி இருக்கும் , தேவைகளை குறைத்து முழுமையாக ஈடுபட்டால் மட்டுமே முடியும் என்று மனதில் இருந்து பதில் கூறினார் .

.தமிழ் சங்கத்தின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

அரசாங்கங்கள் , அதிகாரவர்க்கம் , செயல் இழந்து போன இன்றைய நிலையில்   , தன்னார்வலர்கள்  நமது மொழி, மக்கள் என்று உள்ளுணர்வால் உந்தப்பட்டு செய்யும் சேவைகளே தமிழ்நாட்டை இனி காப்பாற்றும் . நமக்கான அரசியிலை இனி நாம்தான் செய்ய   வேண்டும் போல  . தலைவர்களை , கட்சிகளை நம்பி இருந்தது போதும் .

ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தொடர்ந்து தன்னாலான உதவிகளை செய்கிறார்கள் . இன்னும் ஐந்து அல்லது பத்து வருடத்தில் இவர்கள் சிறிது சிறிதாக உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி பெரிய அமைப்பாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது . பார்க்கலாம் .
                                                                                     -paavi
                                                                                   paavib.blogspot.com

Wednesday, August 9, 2017

இன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் -பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் (அமெரிக்கா )-ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு

பெரியார்- அம்பேத்கர் படிப்பு  வட்டத்தில் (அமெரிக்கா )-  பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள்   "இன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் " என்னும் தலைப்பில்   ஆற்றிய  சிறப்புச் சொற்பொழிவு .

இஃது தமிழகத்தில் இருந்து பல்வழி அழைப்பின் மூலம் பேராசிரியர் தொடர்பு கொள்ள,   july 21 2017  , திருவள்ளுவர் ஆண்டு 2017 ஆடி - 5 இல் நடைபெற்றது .

மதவாதம் அல்லது மதச்சார்பின் வரலாற்றில் இருந்து தொடங்கி , எப்போது மத மோதல்கள் தமிழ்நாட்டுக்கு
 வந்தன , இதில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு , அதற்கான காரணங்கள் , மதவாதம் என்பது எத்தனை  கொடிய  நோய்,  அது பரவுவதனால் ஏற்படும் வீழ்ச்சி , முதலியவைகளை அலசி , கேட்போருக்கு விளங்கச் செய்து , அதனை தடுப்பதற்கான வழிகளை சரளமாக  சொல்லி முடித்து  என  தங்கு தடை இன்றி ஓடும் ஆற்று நீராய் அமைந்தது சொற்பொழிவு .

சொற்பொழிவுக்கு பின் , கேள்வி நேரம் - பங்கேற்றோர் கேட்ட கேள்விகளுக்கு   பொறுமையாகவும் , தெளிவாகவும்  பதில் உரைத்தார் . கேள்வி நேரம் தொடங்கும் முன் , தன் உரையை அனைவரும் கேட்க முடிந்ததா என்பதை ஆர்வமுடன் கேட்டுத்  தெரிந்து கொண்டார் . ஆர்வமும் , தேடலும் தான் இவர் போன்றவர்களை அயராது உழைக்க வைக்கிறது போல .

இனி சொற்பொழிவின் சாரம் : முடிந்த அளவு அனைத்தையும் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன் .

சமய நம்பிக்கை சங்க காலத்திலேயே இருந்தது .முதன் முதலாக ,மதங்களுக்கு இடையே   விவாதங்கள் , கருத்துக் பரிமாற்றங்கள்  நிகழ்ந்ததாக  மணிமேகலை காப்பியத்தில் தான் பார்க்கிறோம் .36 மதங்களைச்  சார்ந்தவர்கள் ஒரே மேடையில் பேசிய காட்சி  மணிமேகலையில்  இருக்கிறது. பின் மதங்களின் அடிப்படையில் இலக்கியங்கள் உருவானதும் , ஒரு மதத்தை ஏற்றும் , எதிர்த்தும் உரையாடல்கள் உருவானதும்  நிகழ்வுகள். ஐம்பெரும் காப்பியங்களில் கூட சிலப்பதிகாரம் வரையில் ஒரு குறிப்பிட்ட
தாக்கத்திற்கு உட்பட்டதாக இல்லை .

மத மோதல்கள் தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் வருகின்றன. அதுவும் கூட இந்து மதத்தின் பிரிவுகளான சைவம் , வைணவம் இதன் இரண்டுக்கும் இடையே தான் தொடங்குகிறது . தேவாரம் , திருவாசகம் போன்றவற்றில் , சமணம் - பௌத்தம்  இரு பிரிவினருக்கும்  நடந்த  மோதல்கள் வருகின்றன , பிற்காலத்தில் மோதல்கள் அரசு சார்ந்து -அரசன் சைவம் என்றால் வைணவத்திற்கு எதிராகவும் , வைணவம் என்றால் சைவத்திற்கு எதிராகவும் கடுமையான மோதல்கள் நடை பெற்றிருக்கின்றன.

ஆதி சங்கரர் காலத்திற்கு பிறகு தான் தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன .
சைவம் , வைணவம் , ஸ்வாதம், க்ராணபத்யம் , கௌமாரம், சவ்ரம் (பெயர்களில் பிழை இருந்தால் பொறுத்தருள்க அவர் சரியாகத்தான் சொன்னார் எனக்குத்தான் இலக்கிய மேற்கோள்களையும் , பெயர்களையும் சரியாக எழுதத் தெரியவில்லை  ) என்ற ஆறு பிரிவுகளையும் ஒன்றிணைக்க முயற்சி செய்தார் . அதனால் அவர் சன்மதஸ்தாபகர் என்று அழைக்கப்பட்டார் . இந்து மதம் இந்த ஆறு உட்பிரிவுகளைக்   கொண்டது (சிவன் , திருமால் , விநாயகர், சக்தி ,குமரன்  , கதிரவன் ஆகியோரை வணங்குபவர்கள் ).பிற்காலத்தில் ஆங்கிலேயர் வந்த பிறகுதான் அந்த இணைப்பு முழுமை அடைந்தது .(Hindu law).

இடைக்கால சோழர்கள் பெரும்பாலும் சைவ மதத்தை பின்பற்றினார்கள் என்றாலும் அவர்கள் ஆட்சிக் காலத்திலேதான் சைவ மடங்கள் இடிக்கப்பட்டன என்பது முரணான செய்தி . காரணம் ராஜ குருக்களாக இருந்த பிராமணர்கள் , சூத்திரர்களால் கட்டப்பட்ட மடங்களை , அரசனுக்கு அறிவுரை கூறி இடித்தார்கள், இது வரலாற்றில் குகைஇடிக் கலகம் என்று அறியப்படுகிறது .(இடிப்பதை அப்போதே செய்திருக்கிறார்கள் - எனது இடைச்சொருகல் ). அப்படியானால் இப்பொது இருக்கும் மடங்கள்? அவை வைணவர்கள் கட்டினார்கள் என்பது இன்னொரு முரண் .இவற்றைத் தாண்டி  இந்து முஸ்லீம் மோதலாக மாற்றம் பெற்றது , கி.பி பதினோராம் நூற்றாண்டு என்று கூற வேண்டும் .(கஜினி முகமது படையெடுப்பு  கி.பி 1026). அப்பொழுது இருந்துதான் ஒரு பகை உணர்ச்சி உருவாகத் தொடங்கியது.

இந்தியாவின்  மதம் சார்ந்த நிலமையில்   , வட மாநிலங்களுக்கும் , தென் மாநிலங்களுக்கும் வேறுபாடுண்டு , குறிப்பாக தமிழகத்தில் வட மாநிலங்களில் நடைபெற்றதைப் போல  இந்து முஸ்லீம் மத மோதல்கள் அதிகம் நடை பெறவில்லை , முகலாய ஆட்சி நூற்றாண்டுகளாக வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் இல்லை என்ற வரலாற்று பின்புலம் இதற்கு காரணம். முகலாய சாம்ராஜியம் கர்நாடகம் வரை வந்தும் தமிழகத்திற்கு வரவில்லை , அந்த காலங்களில் தமிழகத்தில் நாயக்கர்களின் காலம் . இந்துத்துவ , பிராமண கருத்துக்கள் "கொடி கட்டி" பறந்த காலம். பல்லவர் காலத்தில் தொடங்கி , சோழர்கள் காலத்தில் வளர்ந்து , நாயக்கர்களின் காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. பின் ஆங்கிலேயர்கள் வந்தார்கள்.

சிவாஜி இந்துக்களின் காவலன் என்றும் , இஸ்லாமிற்கு எதிரானவர் என்றும் இன்றைக்கும் கூட  ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி தொடர்கிறார்கள் , அது உண்மை அல்ல , சிவாஜி மத நம்பிக்கை கொண்டவர்தான். அனல் மத வெறி கொண்டவர் அல்ல .முகலாய ஆட்சிக்கு எதிராக அவர் தன் மண்ணை மீட்க போராடினார் , இந்து ஆட்சி நடந்திருந்தாலும் அவர் அதைத்தான் செய்திருப்பார் , தன் படைத்தலைவர்களாகவே அவர்  இஸ்லாமியர்களை நியமித்திருந்தார் .(இப்ராஹிம் கான் -பீரங்கிப் படைத்தலைவர் , கப்பற்படை -தவுலத் கான் ) .

அதே போல ஔரங்கசீப்  பற்றி பல தவறான தகவல்கள் சொல்லப் படுகின்றன .அவர் மிக ஆழ்ந்த மதநம்பிக்கை உடையவர் அனாலும் அவர் மத மதங்களை அழித்தார் என்பது மிகையாக சொல்லப்படுகின்ற செய்திதான்.காசி மடம் அமைப்பதற்கு ஔரங்கசீப்  பெரிய பொருளுதவி  செய்தார் என்று குமர குருபரர் குறித்திருக்கின்றார். இந்தியாவில் மத மோதல்கள் திட்டமிட்டு வளர்க்கப்பட்டன .

ஆங்கிலேயர் வந்த பிறகு கிருஸ்துவ சார்பும் எதிர்ப்பும் உருவாயிற்று. தமிழுக்கு அவர்கள் அனைவர்க்கும் கல்வியையும் , நூல்களையும் வழங்கினார்கள் என்ற ஆதரவும் , மதம் மாற்றினார்கள் என்ற எதிர்ப்பும் இருந்தன. வளங்களை  எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மைதான் .

ஆனால் அவர்கள் செய்த மிகப்பெரிய தொண்டு ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட நமக்கு கல்வியின்  கதவுகளை திறந்துவிட்டனர். மெக்காலே கல்வி முறையை இன்றைக்கும்   விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள்  . நம்மை குமாஸ்தாக்களாக ஆகி விட்டார்கள் என்பது குற்றச்சாட்டு . உண்மைதான் . நாம் எதனை நினைவு  கொள்ள வேண்டும் ?

 அது அரசர்களாக இருந்த நம்மை குமாஸ்தாக்களாக மாற்றவில்லை , அடிமைகளாக இருந்த நம்மை குமாஸ்தாக்களாக மாற்றியது .அடிமைகளாக இருப்பதை  விட இது ஒன்றும் இழிவானதில்லை.

பின் இந்திய விடுதலை போராட்டம் தொடங்கிய நிலையில் இந்து முஸ்லீம் மோதல்களும் தொடங்கின. முதன் முதலாக கிலாபத் இயக்கம் பரவியபோதுதான் ஒரு மாற்றம் நிகழ்ந்தது .மேலை நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து துருக்கியை காப்பாற்ற தொடங்கிய இயக்கம் இந்தியாவிற்கு வந்த பின் , காந்தி ஆதரவு அளித்தார் . கிறிஸ்துவத்துக்கு எதிராக இந்து முஸ்லீம் இணைந்து நடத்திய போராட்டமாகவும் இது பார்க்கப்பட்டது.

பின் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது .இதில் இந்திய காங்கிரசும் , கிலாபத் இயக்கத்தினரும் இணைந்தே போராடினர் சிறைக்குச் சென்றனர் . காவலர்கள் எரிக்கபப்ட்டதற்காக காந்தி இதனை நிறுத்தினர் .அதற்குப்பின் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் குறைந்தது .1923-1927 வரை இந்தியாவில் மிக கடுமையான ஹிந்து முஸ்லீம் மோதல்கள் நடைபெற்றன.அந்த நிலையிலும் அவை தமிழகத்தில் பரவவில்லை.நவகாளி கலவரம் ஏற்பட்டு  மிகப்பெரிய கலவரங்கள் ஏற்பட்ட போதும் அமைதியாக இருந்தது தமிழகம் மட்டும்தான்.

எப்படி தமிழகத்தில் இது பரவவில்லை என்பதற்கு முக்கியமான நேர்மையான காரணம் தமிழகத்தில் தான் திராவிட இயக்கம் தோன்றிப்  பரவியது ,அதனாலே தான் இன்று வரையில் மதவாதத்திற்கு தமிழகத்தில் இடமில்லை . இந்துக்களும் , முஸ்லிம்களும் , அண்ணனும் , தம்பியுமாய் , மாமனும் , மச்சானுமாய் தான் இன்று  வரை இருக்கிறன்றனர் . அனாலும் தமிழகத்தில் கூட 1981 இல்  கன்னியாகுமரியை அடுத்த மண்டைக்காட்டில் ஏற்பட்ட மத மோதல் மெல்ல  மெல்ல திட்டமிட்டு பரப்பப்பட்டது .இபபோதும் அது திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியின் போது வீடுகளில் இருக்கும் பிள்ளையார்கள்   வீதிக்கு வந்து ஊர்வலமாக போகும்போது , மத மோதல்களுக்கான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.அவை மசூதிகளுக்கு அருகில் வரும் போது , பெரிய பிளவிற்கான வாசற் கதவுகள் திறந்து விடப்படுமோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது .

 மதவாதம் அன்புக்கு எதிரானது , அமைதிக்கு எதிரானது , ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்ற காரணத்தால் இதனை எதிர்க்க வேண்டிய , தமிழ்நாட்டை விட்டு அகற்ற வேண்டிய கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அதற்குத்தான் பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டங்கள் உதவ வேண்டும் என்று கருதுகிறோம் .

மதத்தை ,வழிபாட்டு முறையை   , அல்லது எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருப்பது என்ற முடிவை எடுப்பது  அவரவர் விருப்பம் , உரிமை . ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை பகையாக , எதிராக பார்ப்பது மதவாதம் .

அது  தமிழ்நாட்டில் துளிர் விட்டிருப்பதை நாம் கவனமாக பார்க்க வேண்டும் . அது வளராமல் தடுக்க கருத்தொற்றுமை உள்ளவர்கள் கட்சி வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டிய கடமை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்றது. அவரவர் வழியில் கருத்துக்களை பரப்பவும் , ஒற்றுமையாக இருக்கவும் , இந்த   அமைதிக்கான போராட்டத்தில்  எங்களோடு தோளோடு தோள் நின்று இணைய வேண்டும் , உதவ வேண்டும் என்று கேட்டு , இந்த அரிய வாய்ப்பை தந்த பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்திற்கு எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி !!!!

கேள்வி நேரம் :
 கேள்வி :  ஐயா வங்கத்தில் நவகாளி  நடந்த கலவரத்தில் இறந்தவர்கள் யார் ?

பதில் : ஒரு  லட்சம் இந்துக்களும் , ஒரு லட்சம்  இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டார்கள் என்று தவறாக படிக்கின்றோம் , உண்மையில் அதில்  இரண்டு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்று  அடுத்த தலைமுறைக்கு சொல்லுங்கள் .  நவகாளி முழுவதும் பயணப்பட்டு காந்தி செய்த அதே தியாகத்தை காந்தியோடு முழுமையாக இருந்த  எல்லைக் காந்தி என்று அழைக்கப்படுகிற    கான் அப்துல் கபார் கான் பற்றி நாம் படிப்பதில்லை, காந்தி  அளவுக்கு அவரின் பெயர் சொல்லப்படுவதில்லை  . அவரின் தியாகமும் அளப்பரியது .

கேள்வி  : ஐயா நவகாளி கலவரத்திற்கு தமிழகத்தில் இருந்து காவல்துறை அழைக்கப்பட்டதற்கும் , மோதல்கள் இல்லாமல் இருந்ததற்கும் , திராவிட    இயக்கம்  தான் என்று எப்படி சொல்லுகிறீர்கள் ? திராவிட இயக்கம் அப்போது முழுதாக வளரவில்லையே ?  ஒற்றுமை தமிழரின் கலாச்சரம் சார்ந்தது என்று நம்புகிறேன் எப்படி திராவிட இயக்கம் காரணமாயிற்று ?

பதில் :கலவரம் தொடங்கியது 1946 நவம்பர் , திராவிட இயக்கம் என்ற பெயரில் தொடங்கியது 1944 நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கான வேர்கள் 1913 இல் நடேசனார் தொடங்கிய திராவிடர் சங்கத்திலேயே ஆரம்பித்து விட்டது , 1914 இல் நீதிக்கட்சி , 1926 இல் சுயமரியாதை இயக்கம் .எனவே முப்பது ஆண்டுகளும்கும் மேலாக திராவிடக் கருத்துக்கள் தமிழ்நாட்டில் பரவிக் கொண்டிருந்தன .

 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் சமயத் துறையும்  இருந்தது , சைவ , வைணவ மோதல்களும் இருந்தன . மோதல்களில் இருந்து ஒற்றுமை வருவதற்கு திராவிட இயக்கம் பெரும் பங்காற்றியது என்பது என் கருத்து. என் கருத்தில் இருந்து வேறு படுவதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது .


கேள்வி : நான் அடிப்படையில் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுகிறேன் , ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு , பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் பங்கேற்பது சாத்தியமா ? சமீபத்தில் உணர்வு ரீதியான தூண்டுதல்கள் நடைபெறுகின்றன , உணர்வுகளுக்கு ஆட்படமால் அறிவுப்பூர்வமாக , சட்டரீதியாக    இதை
எதிர்கொள்வது எப்படி ?

பதில் : இஸ்லாமியர்  அல்ல , யார் வேண்டுமானாலும் , எந்த மதத்தில் இருந்தாலும் , இல்லை  மதமே இல்லை என்றாலும் சேர்ந்து   பணியாற்றலாம். பெரியார் அம்பேத்கர் இருவரையும் இணைக்கும் மையப்புள்ளி அவர்கள் சமூக நீதிப்  போராளிகள் என்பதுதான் .மத சார்போ , எதிர்ப்போ இல்லை. பிறப்பின் அடிப்படையில்  வேறுபாடு கூடாது  என்று நினைக்கும் எவரும் சேர்ந்து பணியாற்றலாம் .

திட்டமிட்டு பரப்பப்படும் மத மோதல்கள் , இந்திய சட்டத்தை எதிர்த்துதான் பன்னப்படுகிறதே தவிர சட்டத்திற்கு உட்பட்டு இல்லை .இந்திய அரசியில் அமைப்புச் சட்டம் எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது இல்லை .
கேள்வி : ஐயா  சமீபகாலமாக இந்துத்தவா குரல்கள் அதிகமாக ஒலிப்பதற்கு என்ன காரணம் .மத்தியில்  இருக்கும் ஆட்சியா  , மாநிலத்தில் இருக்கும் கைப்பாவை அரசா , திராவிடம் தமிழர்க்கு எதிரி என்ற பரப்புரையா?

பதில் : நீங்கள் சொன்ன எல்லாமும் காரணம் , திராவிடம் என்பது சமூக நீதியை வலியுறுத்துவது .திராவிடம் தமிழர்க்கு எதிரி என்பதற்கும் , இந்துத்தவா கருத்துகளுக்கும்    உள்ள நோக்கம் ஒன்றுதான் அது திராவிடத்தை அழிப்பது.

கேள்வி : திராவிடம் என்பது நான்கு மாநிலங்களை சேர்ந்தது ஆனால் அது தமிழ்நாட்டுக்கு மட்டும் சுருங்கி போனது ஏன் ?

பதில் : திராவிடம் தமிழ்நாட்டில் பிறந்து , தமிழ்நாட்டில் வளர்ந்து , தமிழ்நாட்டில் இருக்கும்  இயக்கம் அது என்றைக்கு மற்ற மாநிலங்களில் கிளை பரப்பியது ? பெரியார் தெளிவாக திராவிட நாடு என்று கூறுவது தமிழ்நாட்டைதான் என்று கூறினார் , ஒரு சொல் பல அர்த்தத்தை தருவதிப் போல திராவிடம் என்ற சொல் நான்கு மாநிலத்திற்கான நிலப்பரப்பை குறிக்கும் . ஆனால் நாம் திராவிடம் என்று சொல்வது சமூக  நீதியை வலியுறுத்தும்  நிலைப்பாட்டை   கொண்டவர்களை .

கேள்வி : எழுபது ஆண்டுகளாக இருந்தும் பகுத்தறிவு கருத்துக்கள் மக்களிடையே பரவலாக போய் சேரவில்லையே  இதன் காரணம் என்ன ?

பதில் : உண்மைதான் , ஒரு நூற்றாண்டு காலம் தொண்டாற்றியும்  ஏன் இன்னும் மக்களிடையே சாதி இருக்கிறது , பக்தி இருக்கிறது , மூட நம்பிக்கை   இருக்கிறது திராவிட  இயக்கம் என்ன செய்தது என்று கேட்ப்பீர்களானால்  இவைகள் எல்லாம்  2000 ஆண்டுகளாய் வளர்ந்திருக்கிற மரங்கள் , அவற்றை ஒரு நூற்றாண்டு வாள் கொண்டு அகற்றி விட முடியாது .இது ஒரு தொடர் போராட்டம் .

திராவிட இயக்கம் ஒன்றும் செய்யவில்லை என்பது தவறானது . தன்மானத்தை  கொண்டு வந்தது , சாதி பெயரை போட்டுக் கொள்வதை நிறுத்தத்   செய்தது ,கல்வியிலும் , வேலையிலும் இட   ஒதுக்கீட்டை உருவாக்கியது  (1920 களில் ) அதன் காரணமாகத்தான் நம்மால் கல்வி பெற முடிந்தது என்பதை மறுக்க முடியாது.  பெண் விடுதலை , இவற்றில் திராவிட இயக்கத்தின் பங்கு மிகப் பெரியது என்பதை மறுக்க முடியாது.

கேள்வி : ஐயா  மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வளர்வதற்கு   திரவிடக் காட்சிகள் மாற்றி மாற்றி வைத்துக் கொண்ட கூட்டணியும்  முக்கியமான காரணம் என்று நினைக்கின்றேன் இனிமேலாவது அது நடக்காமல் இருப்பதற்கு  ஏதாவது உத்திரவாதம் இருக்கிறதா ?

பதில் : இயக்கம் கட்சி ஆகும் போது அதன் பலம் மற்றும்  பலவீனங்களும் சேர்ந்தே வரும் . தேர்தல் என்று மக்களிடையே போகும்போது சமரசங்களை செய்து கொள்ள வேண்டி இருக்கும் . தேர்தலில் வெற்றி ஒன்று தான் இலக்கு என்று ஆகிறது . ஆதலால் கட்சிகள் தடம் புரண்ட காட்சிகள் நடந்திருக்கின்றன. இனி மேலும் நடக்காது என்று நான் கூறுவது நேர்மையாகவும் இருக்காது . ஆனாலும் நமக்கான கடமை கட்சிகள் அவ்வாறு போகாமல் பார்த்துக் கொள்வது .

திமுக  விற்கும் பாரதிய ஜனதாவிற்குமான போட்டியாக தமிழ்நாட்டின் களம் போகிறது . இன்றைய அதிமுக  நசிந்து வருகிறது அதை பாரதிய ஜனதா விழுங்குகிறது .ஆதலால் கண்ணுக்கு எட்டிய வரை அது நடக்காது என்பதை உறுதியாக கூற முடியும் .

கேள்வி : இளைய தலைமுறை இணையத்தில் இருந்தாலும் எங்களை போன்றவர்கள் (முந்தைய தலைமுறை ) என்ன செய்ய முடியும் என்று சொல்லுங்கள்.

பதில் : இன்றைய அரசியல் மேடையில் இருந்து இணையத்திற்கு வந்து விட்டது . தமிழ்நாட்டில் கூட பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்கள் வருவதில்லை . அவர்கள் இணையத்தில் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள் எனவே சமூக வலைத்தளங்களில் இணைந்து பெரும் தொண்டாற்ற உங்களால் முடியும் அதனை நீங்கள் செய்ய வேண்டும் .

கேள்வி :தமிழ் தேசியம் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தையும் , பெரியாரை இனத் துரோகி என்றும் கொச்சை படுத்துவதற்கான அடிப்படை காரணம் என்ன ?

பதில் : காரணம் தேடுவதை விட அதனை முறியடிப்பதற்கு நாம் ஒன்றுபடலாம் . இது ஒன்றும் புதிது இல்லை  .என்றைக்கு திராவிட இயக்கம் தொடங்கியதோ அன்றைக்கே அதற்கு எதிரான பரப்புரையும் தொடங்கி விட்டன .ம போ சி அவர்களும் , ஆதித்தனாரும் தமிழகம்    முழுவதும்   எதிர்த்து பரப்புரை செய்திருக்கிறார்கள். பின் இரண்டு பேரும் திமுக கழகத்தில் இணைந்தார்கள் .  இது குறித்து அஞ்ச வேண்டியதில்லை , அதற்காக பணிகளை ஆற்றாமல் இருக்க வேண்டியதும் இல்லை .

கேள்வி  நேரம் முடிந்தது.

                                                                                                                                                                                                                                                                                - பாவி
                                                                                                         paavib.blogspot.com 

Tuesday, August 8, 2017

மிச்சிகன் தமிழ் சங்கம் கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியின் தொகுப்பு

தமிழ் சங்கத்தின் "கோடை கொண்டாட்டம் "  நிகழ்ச்சிக்கு    தமிழ் மக்கள்  பெரும் திரளாக   திரண்டு வந்து சிறப்பித்தனர். அறநூறுக்கும் மேற்ப்பற்றோர் பங்கேற்ற நிகழ்ச்சி maybury state park இல் நடைபெற்றது . பெரும்பாலான வட்டாரத்  தமிழ்ச்சொற்களை கேட்க முடிந்தது  மிக்க மகிழ்ச்சி .

ஒருங்கிணைப்பாளர்கள்   நுழைவாயிலிலேயே   வருபவர்கள் பதிவு செய்யவும் , தமிழ் சங்கத்தின் உறுப்பினர் கால அளவை புதுப்பித்துக் கொள்ளவும் , புதிதாக சேரவும்  அரங்கங்களை அமைத்திருந்தனர். தமிழ் சங்கத்தின் செயல்பாடுகளையும் , உறுப்பினர்களுக்கு தரப்படும் சலுகைகளையும் விளக்கும்   தட்டிகளை வைத்திருந்தது நல்ல உத்தி.

11.30 க்கு தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே கூட்டத்திற்கு குறைவு இல்லை.   வருபவர்கள் தம் கொண்டு வந்த உணவுப் பதார்த்தங்களை அணிவகுத்து வைக்க  தாமதிக்காமல் பந்தியை தொடங்கி விட்டனர் .

அருமையான உணவு வகைகளின் கதம்பம் ,கேழ்வரகுக்கூழ் , கம்மங்கூழ் கூட நெடுநாட்கள் கழித்து சுவைத்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது . உணவுத் திடலில் கூட்டம் சேர்ந்து நீண்ட நேரம் அனைவரும் வரிசையில் நிற்காமல் இருக்க , நிர்வாகிகளும் , தன்னார்வலர்களும் , ஒலி பெருக்கியின்  மூலம் சரிபடுத்திக் கொண்டே இருந்தார்கள் .

நிகழ்ச்சியில் அதிக கவனம் பெற்றவை குழந்தைகளுக்கான விளையாட்டுகள் தான் . பங்கேற்ற குழந்தைகள் விதிமுறைகளுக்கு  சம்பந்தமே இல்லாமல் விளையாடி  ஒருங்கிணைப்பாளர்களை நன்றாக குழப்பி அசத்தினார்கள்.

எடுத்துக்காட்டுக்கள்   சில .

Cup- cake eating - கேக்கை சாப்பிட்டு விட்டு ஓடி இலக்கை தொட வேண்டும் என்பது விதி , சுவை பிடித்ததாலோ என்னவோ , சற்றே பெரிய குழந்தைகள் உண்டுவிட்டு ஓடி   விட , சிறிய குழந்தைகள் நிறுத்தி நிதானமாக அமர்ந்து சுவைத்துக் கொண்டே இருந்தார்கள் . கடைசி வரை நகரவில்லை .

அடுத்து பஞ்சு உருண்டைகளை மூக்கால் ஒரு குவளையில் இருந்து எடுத்து இன்னொரு குவளையில் போட வேண்டும் என்பது விதி . தமிழ்ச்சங்கத்தின் இளையோர் அணியினர் விதிமுறைகளை நீண்ட நேரம் விளக்க , பெற்றோர்கள் அதனை விட பயங்கரமாக தம் குழந்தைகளுக்கு விளக்க , குழந்தைகளோ பஞ்சு உருண்டைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர் . யார் பேச்சையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை .

ஓட்டப் பந்தயம் - நிறைய குழந்தைகள் இருந்ததால் அணி அணியாக ஓட செய்யலாம் என்று முடிவு செய்து , முதல் அணியை ஓடச்  சொன்னால் , அனைத்து   அணியில் இருக்கும்   குழந்தைகளும் ஓடி , பின்னாலயே பெற்றோரும் அவர்களைப்  பிடிக்க ஓடி வெகு சிறப்பாக அமைந்தது .

சிறு விண்ணப்பம் - நம் குழந்தைகளுக்கு தமிழ் மிகவும் சிரமப்பட்டுத்தான் வருகின்றது, அழகு தமிழ் பேச பெற்றோர்கள் நாம்தான் பழக்க வேண்டும்  ( அவர்களின் ஆங்கில சொற்பிரயோகங்கள் எனக்கு பல சமயம் புரியவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன் )

விளையாட வயதில்லைதான் - வாலிபால் , கோ-கோ , எறி  பந்து ? (throw ball ) , நம் பாரம்பரிய விளையாட்டுகளான தாயம் , பல்லாங்குழி ,  பரமபதம் , கபடி  , கயிறு இழுத்தல்  முதலியவற்றை   குழந்தைகள் ஆர்வமுடன் பார்க்க பெரியவர்கள் அதிலேயே மூழ்கிப் போயினர் . பின்னோக்கி  ஒரு நினைவுப் பயணம் செய்திருப்பார்கள் போல .குறிப்பாக கபடியின் விதிமுறைகளை பெரியவர்கள் கூட திரும்ப திரும்ப கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

தன்னார்வலர்கள் , நிர்வாகிகள் மற்றும்  இளையோர்அ ணியினரின்  (youth  committee  :) )  சிறப்பான பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை .

இறுதியில்  தமிழ்ச்சங்கத்தின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது .

முதல் தடவை பங்கேற்கும் பெரும்பாலோனர்க்கு (நான் உட்பட ) மற்றவர் அறிமுகமில்லை எனினும்
தயக்கத்துடன் கூடிய சிறு புன்னகையோ , தலையசைப்புகளோ , சம்பிரதாய பேச்சுக்களோ  நமக்கு நாமே கட்டிக்கொண்ட கூட்டிலிருந்து எடுத்து வைக்கும் முதல் அடி, அவை    இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க பங்கேற்க, புதிய அறிமுகங்களாகவும் , கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் , எதிர் கருத்துக்களை விவாதிக்கவும் , இலக்கிய ஆராய்ச்சி களமாகவும் , ஓர் அணியாக  நின்று சமூகத்துக்கு உதவி செய்யும் வாய்ப்பாகவும் கூட பரிமாணிக்கும் திறன் பெற்றவை .

இந்த நிகழ்ச்சியில் கூட  கடைசி நேரங்களில் , கோடை கொண்டாட்டம் என்ற பொதுக்கூட்டத்தின் உள்ளே , அறிமுகமானவர்களைக் கொண்டு   சிறு  சிறு தனிக்கூட்டங்கள் நடைபெற்றத்தைக் காண முடிந்தது .

தமிழ்  என்னும் தளத்தில் ஒன்றிணைய தமிழ்ச்சங்கம் களம் அமைத்துக் கொடுக்கின்றது , வாருங்கள் நண்பர்களே பயன்படுத்திக்கொள்வோம் .

                                                                                    பாவி
                                                                                   paavib.blogspot.com 

இளையராஜாவின் நிலாப் பாடல்கள் - நிலாக் காயும் நேரம்

The Common Sense  ரேடியோ நிகழ்ச்சிக்காக இளையராஜாவின் பாடல்களை , தொகுதி வழங்கிய   "நிலாக் காயும் நேரம் " நிகழ்ச்சி  https://www.you...