Thursday, August 2, 2018

ஆரிய மாயை - புத்தகம் பேசலாம் - பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் எனது பேச்சு


வணக்கம் தோழர்களே , இன்று நாம் பேசு பொருளாக எடுத்துக் கொண்டிருக்கும் நூல் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய  ஆரிய மாயை .”

மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய அண்ணாவின் சில நூல்களுள் இதுவும் ஒன்று ,
 இது கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காக அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டணையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

இந்த நூலுக்காக தொடுக்கப்பட்ட வழக்கைப் பற்றி அண்ணாவே ஒரு மேடைப் பேச்சில் இப்படி குறிப்பிடுகிறார்.
ஆரிய மாயை வழக்குக்காக பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். ஆரிய மாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரிய மாயை, இலட்சிய வரலாறு, இராவண காவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி

ஆரிய மாயை  இதனை ஒரு புத்தகம் என்று கூறுவதை விட பல புத்தகங்களின்  தொகுப்பு என்று கூறலாம்   ,   96  பக்கங்களை மட்டுமே உடைய  இந்நூலில்  படிக்க ஆரம்பித்தால் பக்கத்துக்கு பக்கம் விரிவடைகிறது அண்ணா என்ற மனிதரின் அறிவு விசாலம் .  அனைத்து  புத்தங்களையும்  எப்படியும்   படிக்க முடியாது  , எண்ணிப் பார்ப்போம் என பட்டியலிட்டேன் , 30  புத்தகங்களின் மேற்கோள்களை சுட்டிக் காட்டுகிறார் , இவை மட்டுமில்லாமல் , இரண்டு வழக்குகளின் சாரத்தையும் , சமகால பல்வேறு மேடைப் பேச்சுக்களையும் இதனில்  மேற்கோள் காட்டுகிறார் .

இந்த நூல் நான்கு தளங்களை கொண்டுள்ளது

1 . ஆரியம் , திராவிடம் என இரண்டு இனங்களின் இயல்புகள்
2  எவ்வாறு இவை வேறுபடுகிறது  என்பதற்கான  விளக்கங்கள்
3  ஒரு இனம் இன்னொரு இனத்தில் எப்படி ஊடுருவுகிறது என்பதற்கான வரலாற்று நிகழ்வுகள்
4 பின் காலம் காலமாய் எதனைக் கொண்டு அடிமைப் படுத்தி வைத்திருக்கின்றது என்ற ஆய்வுகள்

 இறுதியாக நூலாசிரியர் , தான் சொல்வதை படிப்பதோடு நின்றுவிடாமல் தான் மேற்கோள் காட்டிய அனைத்து நூல்களையும் படித்து , புரிந்து கொண்டு , அறியாமையில் இருந்து  விடுபட்டு , பிறருக்கும் எடுத்துரைக்குமாறு வலியுறுத்துகிறார் . 

இதில் கவனிக்கப்படவேண்டிய அம்சம்  , அண்ணா தன்  கருத்தை எங்கும் திணிக்கவில்லை , தான்  சொல்வது  மட்டும்தான் சரி என்றும் கூறவில்லை , தன் கருத்தை தீவிரமாக வைக்கும் அவர் , நம் முடிவை அவர் சொன்ன  நூல்களைப் படித்து புரிந்து கொள்ளச் சொல்கிறார்.

பெருவாரியாக மேற்கண்ட நான்கு அம்சங்கள் நூல் முழுவதும் பேசப்பட்டிருந்தாலும் , அண்ணா வைக்கும் இரண்டு கோணங்கள்  படிப்பதற்கு  புதுமையாக   இருந்தது.

முதலாவது,
,  இந்நூல் எழுதப்பட்ட காலம் 1943  இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பேச்சுக்கள் பரவலாக  தலைதூக்க தொடங்கியுள்ளது . அண்ணா இப்படி எழுதுகிறார் , ஐரோப்பாவில் இருந்து பயணம் செய்த ஆரிய இனம் ,
அங்கு பூர்வ குடிகளாக இருந்த மற்றொரு இனமான  சால்தியன் இனத்தை (தற்போதைய இஸ்லாம் ) தாண்டி இந்தியாவின் வடபகுதியில் தன் ஆதிக்கத்தை நிறுவுகிறது , ஆதிக்கம் நிறுவியபின் ஒரு பக்கம் தான் தாண்டி வந்த இனம் , இன்னொரு பக்கம் வலிமையான ஊடுருவ முடியாத திராவிட இனம் , இரண்டையும் வெற்றிகொள்ள  திராவிடத்திற்கு , இஸ்லாம் பகை என்று நிறுவிட முயற்சிக்கும் என்கிறார் . ஒரு படி மேல் சென்று திராவிடஸ்தான் என்பதின் வடநாட்டு பதிப்பே பாகிஸ்தான் என்கிறார் . இது நான் இந்த நூலை படிக்கும் முன்பு எங்கும் கேட்டதில்லை .

இரண்டாவது
ஆரிய இனம் , பௌத்த மதத்தை தன் எதிரியாக பாவித்தது , அதனை அழிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என்ற கோணத்தையும் அண்ணா வைக்கின்றார் , அம்பேத்கர் , இந்து மதத்தில் இருந்து பௌத்தம் மாறியதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு  இருக்கிறதா என்று தெரியவில்லை  . ஏன் பௌத்தத்தை ஆரியம் எதிரியாக பார்த்தது என்ற கேள்வி எழுகிறது .இதனைப்   பற்றி அறிந்த தோழர்கள் விளக்கவும்..

நான்கு தளங்களுக்கும் வகைக்கொரு எடுத்துக்காட்டை  நூலில் இருந்து எடுத்து பேசலாம் என இருக்கிறேன் .

முதல் தளம் :

இரண்டு இனங்களின் இயல்புகள் .

இதனை பாட்டாகவே படித்து விட்டார் அண்ணா  , ஆரிய இனத்தின் இயல்பாக 

பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேசநா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே போற்றி போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய், போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஓட்டுவித்தை கற்றோய், போற்றி!
உயர் அநீதி உணர்வோய், போற்றி!
எமதுஇனம் கெடுத்தோய், போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரைஇதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!
இதனை தான்  சொந்தமாக எழுதவில்லை என்று சொல்லும் அண்ணா , ஆரிய இனத்தின் இயல்புகளைப் பற்றி  எழுதப்பற்றிருக்கும்  Hindu Manners  Custom and Ceremonies”  என்ற நூலை மேற்கோள் காட்டுகிறார்.
திராவிட இனத்தின் இயல்பாக , இவ்வினம்  அவதார புருடர்களை நம்பிக்கொண்டோ , அற்புதங்களை , யோகங்களை நம்பிக் கொண்டு வாழ வில்லை  , வேள்விகளால் வெற்றி , பரமன் அருளால் பலம் , மாய அஸ்திரங்களால் எதிரி தோற்பான் என்றெல்லாம் நம்பிக்கொண்டு இருக்க வில்லை
வீரத்தையும் , அறிவையும் மட்டுமே நம்பி இருந்தது என்பதற்கு சிலப்பதிகாரத்தில் இருந்து
“மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்   எனத் தொடங்கும் சிலப்பதிகார பாடலை  குறிப்பிடுகிறார் .
பலவிதமான இயங்கு பொறிகளை கொண்டு தமிழர் போரிட்டனர் என இப்பாடல்  விளக்குகிறது .

இந்த இரு இனங்களும் எவ்வாறு வேறுபடுகின்றன என இந்நூலில் குறிப்பிடபட்டுள்ளவையை  பார்ப்போம்

கி மு 3000 முதல் 1500 வரை  தெய்வ வழிபாடு என்பது புதிய முறையை அடைந்தது . நெருப்பின் மூலம் கடவுளை தொழுதலே அம்முறை , இதை ஒப்புக் கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும் , ஒப்புக்கொள்ளாதவர்கள் திராவிடர்கள் என்றும் ஆனார்கள் .

நான்கு வருண பேதங்கள் - ஆரியம் பரவுவதற்கு முன் இந்தியாவில் இல்லை .  முல்லை , நெய்தல் , மருதம்  , குறிஞ்சி என நால்வகை நிலங்களில் வாழ்ந்தவர்கள்   என்று மக்கள் அறியப்பட்டனரே தவிர வருண பேதங்கள் இல்லை .

பிரேதத்தை எரிக்கும் வழக்கம் ஆரியம் பரவியதற்கு பின் தான் ஏற்படுகிறது .
கிமு 750  முதல் 320 வரை , மதம் மனித வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கிறது , அரசர்களும் வுடிய மடங்களை உருவாக்கி அரசாங்க வருமானத்துக்கு வழி தேடினார்கள் .  ஆரிய இனத்தாரின் மூலம் தான் மோட்சம் கிடைக்கும் என்ற கோட்பாடு உருவாகிறது .  பின் அது விக்கிர வழிபாடாக மாறுகிறது . சமஸ்கிரத மொழி ஆதிக்கம் பெறுகிறது .

இதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சமணமும் , பௌத்தமும் ஆரம்பிக்கிறார்கள் .  பௌத்தர்கள் எழுதிய பாலி மொழியும் , சமணர்களின் அர்த்த மகதி   மொழியும் உண்டாகிறது ,   இத்தகைய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கையில் தென் நாடு தனி நாடாகவே உள்ளது .
 வடநாட்டு அரசர்களும் , மக்களும் ஆரியத்தை பின்பற்றினாலும் , தென் நாடு  எந்த பேரரசாலும் கைப்பற்றப்படாமல்  தனி ஆளுமையாகவே இருந்துள்ளது . ஆரியத்தை பின்பற்றிய பேரரசுகள் பல முறை போர் தொடுத்தாலும் திராவிடத்தை கைப்பற்ற முடியவில்லை . திராவிடம் தனி நாடாகவே இருந்து வந்தது என்பதை சரித்திர இலக்கிய ஆதாரங்களை கொண்டு அண்ணா விளக்குகிறார் .
பின் எப்படி ஆரியம் ஊடுருவிகறது ? என்பதை விளக்க  1923 இல் வெளிவந்த  "இந்திய சரித்திரம் " நூலை மேற்கோள் காட்டுகிறார் அண்ணா
கிமு 320 முதல் 230 வரை :
 தமிழகத்தில் இருந்த மூவேந்தர்களின் ஆட்சியில் தமிழக வாணிபம்  பல்வேறு நாடுகளுடன் தொடர்பு கொள்கிறது , ஆரியமயமாக்கப்பட்ட வட இந்திய  ராஜ்யங்களுடனும் இது நடக்கிறது , அப்போது ஆரிய இனத்தவர் , மன்னருக்கு அறிவுரை    கூறுபவர்களாகவும் , மந்திரிகளாகவும் இருக்கின்றனர் , அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மன்னர்களின் செல்வாக்கு அடைகிறார்கள்.

தமிழ் மன்னர்களுக்கு யாக முறையில் ஆசை பிறந்தவுடன் , அவர்கள் உண்டாக்கிய சந்திர , சூரிய வம்சத்தில் தாங்களும் வர வேண்டும் என்ற வேட்கை பிறந்து ஆரிய கோட்பாட்டில் மயங்குகிறார்கள் ,ஆனாலும் மன்னர்கள் தான்  கடை பிடித்தார்களே தவிர மக்கள்  ஏற்கவில்லை

பல்லவர் ஆட்சி தமிழகத்தில் தொடங்க , கிபி 150 - தமிழகம்  பல்லவர் ஆட்சியில் மாறுகிறது , அவர்கள் வட இந்தியாவில் இருந்த அரசியல் முறையை தமிழ்நாட்டில் புகுத்தினார்கள் . தமிழக மக்களும் யாகத்தை நம்ப ஆரம்பிக்க ராமாயணம் , மஹாபாரதம் , மனுதர்ம சாஸ்திரம் என அனைத்தும் வருகிறது , திராவிடம் மறைக்கப்படுகிறது.

 இப்படி ஊடுருவிய ஆரியம் மந்திரம் , யாகம் , மூட நம்பிக்கைகள் , கடவுள் கதைகள், மேலே ஏழு , கீழே ஏழு என பதினான்கு உலகங்கள் , நாலு தலை சாமி , மூணு தலை சாமி என்ற பலவிதமான புராண அட்டவணைகள் போன்றவற்றை வைத்து  உளவியல் கொண்டு அடிமையாகவே வைத்துள்ளனர்  .
போதை  ஏறியவன் கல் தடுக்கியோ , காற்று அடிப்பதாலோ கீழே விழுவான் . ஆரியரும் திராவிட இனத்தாரிடையே கருத்தில் போதை மூண்டிடச் செய்து விட்டு பிறகு கீழே உருட்டி விட்டனர் . திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆனால் வீழ்ந்தவர்  , வீழ்ந்தவராகவே இருக்கிறார் , அறியாமையை விட்டு மேலே வர வேண்டும் என்று கவலை கொள்கிறார் அண்ணா .

ஆக,
பல்வேறு
அடுக்குகளைக்   கொண்டு , ஒன்றிணைந்து எதிர்ப்பதை  தடுக்கும்  நோக்கத்துடன் , ஒவ்வொரு   அடுக்கிலும் பல பிரிவுகளையும் வகுத்து , உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தி என்னை விட நீ தாழ்ந்தவன் என்ற  எண்ணத்தை விதைக்கும் எதுவும்  " அது மதமானாலும் ,  இனமானாலும் , சாதியானாலும் ,    கொள்கையானாலும்   , கட்சியானாலும்   ஆரியம்தான் , 

இதனை   அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் .   அதனை அறிவின் மூலம் பகுத்தறிந்து , யாரும் எனக்கு மேல் இல்லை , எனக்கு கீழும் எவருமில்லை , அனைவரும் சமம் என்பதே திராவிடம்  .
வாருங்கள் தோழர்களே  , அறிஞர் அண்ணா காட்டிய வழியில் , உளவியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட மாயையில் இருந்து விலகுவோம் , 

. நன்றி வணக்கம்


ஆரிய மாயை - புத்தகம் பேசலாம் - பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் எனது பேச்சு

வணக்கம் தோழர்களே , இன்று நாம் பேசு பொருளாக எடுத்துக் கொண்டிருக்கும் நூல் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய   “ ஆரிய மாயை .” ...