Thursday, July 20, 2017

யாதுமாகி -7

வைகறைப் பொழுது 
நனையும் பூமி 
குடை பிடித்துக்கொண்டே 
நடந்தேன்! 
மகளும் மனைவியும் 
உடன் இருந்திருந்தால் 
மழை பிடித்திருப்போம் !!! 

                                                 -பாவி

Tuesday, July 11, 2017

மனம் சுறுக்கிகள் !!!

மனனம் செய்து 
வாந்தி எடுத்து 
பட்டம் பெற்று 
பண்பை மறந்து 
பணத்தை பெருக்கி
அறிவைத்  தொலைத்து 
திரைகடலோடி 
சாதியம் தேடும் 
மனம்  சுறுக்கிகள் !!!

                                    -பாவி 
                                     paavib.blogspot..com 

Tuesday, July 4, 2017

வட அமெரிக்கத் தமிழ் சங்கப்பேரவை fetna 2017 - ஒரு பார்வை

படிக்கும் முன் முன்னுரை - நான் எந்த விதமான சாரிகளையோ , இசங்களையோ சேர்ந்தவன் இல்லை . 

வட அமெரிக்கத் தமிழ் சங்கப்பேரவை விழா-2017 என்று கேள்விப்பட்டதும் வழக்கம் போல மற்றும் ஒரு விழா , நிறைய போரடிக்கும் இருந்தாலும் பரவாயில்லை புதிய மனிதர்களை சந்திக்கலாம் என்றுதான் போனேன் . 

ஆனால் இந்த விழாவில் நிறைய ஆச்சிரியகரமான இல்லைகள். 

குத்துவிளக்கு இல்லை , கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லை , பரதநாட்டியம் இல்லை , மூன்று நாட்கள் விழாவில் எங்கேயும் கடவுள் படங்கள் இல்லை , எல்லாவற்றுக்கும் மேலாக , புரியாத மொழியில் ராக ஆலாபனைகளும் , கண்ணா , கிருஷ்ணா என்று நீண்ட நேரம் யாரும் கூப்பிடவும் இல்லை . 

முற்றிலும் மாறாக ,திருக்குறள் , நாட்டுப்புற பாடல்கள் , பொய்க்கால் குதிரை , கரகாட்டம் , மயிலாட்டம் , கும்மி , இலக்கிய வினாடி வினா , மழலைகளுக்கான எழுத்து , குறள் போட்டிகள், அதிசியமாக சில ஒப்பாரிப் பாடல்கள், அதிகாரப் பறை முழக்கம் , மருதநாயகம் (மேடை நாடகம் ) என கலந்துகட்டி அசரடித்தது இவ்விழா . 

அது மட்டுமா , ஈழத்து தமிழர்களின் வலியையும் , விளிம்பு நிலை மக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் , தமிழ் நாட்டின் தற்போதைய அரசியல் நிலமையும் , நம் மக்களின் மீதும், வளங்களின் மீதும் , , விவசாயத்தின் மீதும் , திட்டம் போட்டு ஒடுக்க பார்க்கும் நுண்ணிய காழ்ப்புணர்ச்சியை தூண்டும் அரசியலையும் உணர்ந்து கொள்ளும் களமாகவும் அமைந்தது . 

நல்ல துவக்கம் ! இந்தப் போக்கு பரவ வேண்டும் , தொடர வேண்டும் . 

பறை இந்த விழாவின் தேசிய ஒலி என சந்தேகத்துக்கு இடமில்லாமல் குறிப்பிடலாம் !!! அரங்கு அதிரும் வண்ணம் திரும்பத் திரும்ப ஓங்கி ஒலித்தது பறை . 

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒலியாக இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக மாறி அனைவரும் கற்றுக்கொள்ள விரும்பும் வாத்தியமாக இருப்பது பெருமைக்கு உரியது . உடுக்கையையும் கொஞ்சம் சேர்த்து கொண்டீர்களானால் மிக்க மகிழ்ச்சி ! 

விழாவில் பகிரப்பட்ட முத்துக்கள் சில . யார் என்ன சொன்னார் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் . 

தயவு செய்து ரஜினியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அடாதீர்கள் ! ஒருவர் அப்படி என்றால் சினிமா உலகில் அறிவு ஜீவி என்று மதிக்கப் பட்ட இன்னொருவர் அந்தரங்கத்தை நிறைய கேமிரா கொண்டு ஒளிபரப்புகிறார் ! 

தமிழ் இலக்கிய ஆராய்ச்சி கழகத்திற்கு நிதி ஒதுக்கியும் , அதை அரசாங்கம் மறந்தும் வெகு காலம் ஆகிவிட்டது . 

தமிழர்களுக்கு ஆவணப் படுத்துதல் என்றால் என்னவென்றே தெரியவில்லை . 

தமிழ் இலக்கியங்களில் உள்ளவற்றில் பக்தி வேண்டும் என்றால் பக்தியை பாருங்கள் , பக்தி புடிக்கவில்லை 
என்றால் தமிழின் செழுமையை பாருங்கள் , ஆனால் முற்றிலுமாக ஒதுக்கி விடாதீர்கள் . 

மக்களின் வாழ்க்கையையும் , நடந்த உண்மைகளையும் அப்படியே சொல்வதுதான் நாடகம் திரித்துக் கூறுவது இல்லை . 

தமிழின் பெருமையையும் , இலக்கியங்களையும் இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் . 

உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டால் அரசாங்கத்துக்கு செயல்பட்டே ஆக வேண்டிய மிக பெரிய அழுத்தத்தை தரலாம் . 

சில சமயம் எதிர்ப்பாராத தருணத்தில் , பிரபலங்களை விட நம் சந்திக்கும் அசாதாரண மனிதர்கள் எளிதாக நம் பார்வையை முற்றிலுமாக மாற்றிவிடுவார்கள் . இது fetna வில் நான் பங்கேற்ற கலந்துரையாடல்களில் எனக்கு நேர்ந்தது . 

முடிவுரை : 

தமிழர்களாகிய நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம் . 

சாதி , மத வேறுபாடுளையும் . தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு பிளவைத் தூண்டும் பைத்தியக்காரர்களையும் ஒதுக்கிவிட்டு நாம் தமிழ்நாடு அழிந்து போகாமல் இருக்க ஒன்றுபட வேண்டிய நேரமிது !!! 

எந்த தேவதூதனும் நமக்காக குதித்து விடப் போவதில்லை !!! பெரியார் பூமி என்பதை அழுத்தமாக நாம் நமக்கே நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . 

fetna வில் சந்தித்த ஈழத்து சகோதரியின் குரல் இன்னும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது . " ஈழத்து தமிழர்களை தமிழ்நாடு காப்பாற்றும் என்று நம்பி கொண்டிருந்தோம் , ஆனால் இப்போது தமிழ்நாட்டை யார் காப்பாற்றுவது ?" 

                                                                                                                       - பாவி
                                                                                                                paavib.blogspot.com

தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ ? -Fetna 2017 கவியரங்கத்துக்கு தேர்வான கவிதை !!!



ஐம்பெரும் காப்பியங்கள் பெற்று
சீரான இலக்கணங்கள் கொண்டு
இயல் இசை நாடகமாய்
உச்சம் தொட்டு
வாழ்வியலை அகம் புறம்
எனப் பிரித்து
பொதுமறை தன்னை வழங்கி
எண்ணிலடங்கா
செறிவான  ஆன்றோர்
இயற்றிய தரமான நூல்கள்
கொண்டு ஆர்ப்பரித்த
நம்மொழி  சற்றே  அயர்ந்துள்ளது !!

கவலை வேண்டாம் !
காலம் கடந்து விடவில்லை
தமிழை நம் தலைமுறை
முற்றிலும் தொலைத்து விடவில்லை
பேச்சுத் தமிழ்
மறைந்து விடவில்லை
தமிழும் சடைந்து விடவில்லை
தமிழரும் தன் மொழியை
விட்டு விடவில்லை !!!

கடந்த காலங்களில்
தமிழர்தம் கிறுக்கல்களை
கையேட்டில் எழுதி வைப்பர்
பின்
பெட்டகத்தில் பூட்டி வைப்பர்
நினைவுப் பயணம்
முன்னும் பின்னும்
அலையாட அவை
வாழ்க்கை   ஓட்டத்தில்
மறைந்து போகும்
அல்லது
மறந்து போகும் !!!

இன்றைய தமிழின்
களம் வேறு !!!
காகிதத்தில் இருந்து
கணினிக்கு வந்து
ஆகிவிட்டது
ஆண்டுகள் பல !!!
இனி
கணினி
இருக்கும் வரை
தமிழ்  இருக்கும் !!!

இணையத்தில்
முன் எப்போதும்
 இல்லா வண்ணம்
எழுதிக் குவிக்கின்றனர்
எனினும்
தலைப்புக்கள் போதவில்லை
அதன் கருத்துக்கள்
தலைக்குள்ளும் போகவில்லை !!
இது
தமிழின் பயணத்தில்
மற்றுமொரு இளைப்பாறல்
அவ்வளவே !!!
தமிழரும் -
தமிழை உறங்கப் போடவில்லை
உறைக்குப் போட்டிருக்கிறார்கள்
கெட்டுவிடாது!!
 தமிழ்
நம்மைச்  சற்றும் விடாது !!!

கிறுக்கல்கள் ஓவியமாகும்
அவை வரும்காலத்தில்
தமிழர்க்கு நவீன
காவியமாகும்     !!!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
தன்னை தானே புதுப்பித்துக்கொண்டு
நிலை கொண்டிருக்கும்
நிகரில்லாத நம் மொழி
தலைமுறைக்கு  தலைமுறை
தமிழர்களை ஈர்த்துக்கொள்ளும்
அவர்களுக்கு
மொழி வசப்படுமோ என அறியேன்
ஆனால் மொழிக்கு வசப்படுவர்!!!
ஆரம்பமும் முடிவும் இல்லாத
முடிவிலி இது !!
                                                                                         -  பாவி 

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...