Sunday, January 30, 2022

Bronze Clipper Barber Shop -அரை நூற்றாண்டு அனுபவம்

 முடி வெட்டிக்கொள்வது என்பது  நினைவு தெரிந்த நாளில் இருந்தே இருக்கும் ஒரு அருமையான  அனுபவம் . பெரும்பாலும் வீட்டில் இருந்து நடக்கும் தூரம் இருக்கும் கடைக்கே கூட்டிப்போவார்கள் என்றாலும் அப்பாவுடன் பேசிக்கொண்டே நானும் எனது தம்பியும் போன நாட்கள் சுகமானவை .  


கடையின் பெஞ்சுகளில் இறைந்து கிடைக்கும் நாளிதழ்களும் , அதன் பக்கங்களை தேடித்  தேடி சேர்த்து படிப்பதும்  , இவை நடுவே  நிற்காது ஒலிக்கும் இளையராஜா பாடல்களும் , எங்கு திரும்பினாலும் சுவரில் நிறைந்து இருக்கும் கண்ணாடிகளும் , தரையில் இருக்கும் முடிகளில் கால் படமால் குதித்து, சுத்தும் நாற்காலியில் உட்காரும் சிறிய சாதனையும் , முடிக்கு தண்ணீர் தெளிக்கும் போது வரும் சிலிர்ப்பும் , சீப்பும் , கத்திரிக்கோலும் காதருகே உரசுவதால் வரும் சத்தத்தில் உண்டாகும் சிலிர்ப்பை தாண்டிய கிறக்க நிலையும்,  முடிவெட்டிக் கொள்ளும்போது மட்டுமே கிடைக்கும் அரிய அனுபவம் .


நாட்கள் செல்ல செல்ல அனைத்தும் உருமாறிப் போனதில்  , முடி வெட்டுவதும் மாறிப்போனது , அமெரிக்கா வந்தபின் (இப்போது இந்தியாவிலும் ) கத்திரிக்கோல் சத்தமே கேட்க முடியாமல் போனது  .முடி வெட்டும்போது  "கிர் ,கிர், கிர்" என  கேட்கும் இயந்திர சத்தம்  தொடங்கிய  வேகத்திலேயே  முடிந்து விடும் .


முடி வெட்டிய திருப்தியே இருக்காது . "இப்பத்தாண்டா உட்கார்ந்தேன்,  அதுக்குள்ள எந்திரிக்க சொல்லறீங்க "என்று கேட்டால் , பிறகு தலையில் முடி வளரும் வரை கண்ணாடியில்  பார்க்க முடியாது ,போட்டு கரண்டி விடுவார்கள் .மொட்டை அடித்து ஒருவாரம் ஆன அளவுதான் முடி இருக்கும் .


பழைய அனுபவம் திரும்பவும் கிடைக்க  நானும்  மாற்றி மாற்றி கடைகளுக்கு சென்று பார்த்து விட்டேன் . மத்திய கிழக்கு  நாட்டினர் வைத்திருக்கும் கடைகளில் சிறிது இந்த அனுபவம் கிடைக்கும் ஆனால் அதற்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தேடிச் செல்ல வேண்டும் . நான் வசிக்கும் இடத்தில இருந்தும் குறைந்தது ஒரு மணிநேரமாவது காரில் சென்றால் அங்கு போகலாம் .போக வர , அங்கு செலவிடும் நேரம் என குறைந்தது  மூன்று மணிநேரமாவது ஆகும் என்பதால்  "கிர் கிர் கிர் " சத்ததுடன் ஐந்து நிமிடம் செலவிட்டு வந்தேன் .





இந்த நிலையில்  " Barber shop " என்று மட்டுமே பெயர் கொண்ட ஒரு கடையை  காண நேர்ந்தது . விதவிதமாய் முடிவெட்டும் கடைகளுக்கு  பெயர்கள் உள்ள அமெரிக்காவில் இப்படி ஒரு இடமா ? என்னதான் இருக்கும் என்று உள்ளே போனால்   ஒரு அறுபது வருடம் பின்னால் போன அனுபவம்  , காலச்சக்கரம் அந்த கடைக்குள் சுழலவே இல்லை . 1960  களில் அமெரிக்க முடிவெட்டும் கடைகள் இப்படித்தான் இருந்திருக்கும் , இப்பொழுதும் அந்த கடை அப்படியே உள்ளது .








                                             



கடை முழுவதும் மர சுவர்கள் , வருபவர்கள் அமருவதற்காக மர நாற்காலிகள் , நல்ல எஃகில்  நகர்த்த முடியாத அளவு  சுழலும் நாற்காலிகள் முடி வெட்டுவதற்கு , இடைவெளிவிட்டு நாற்காலிகளுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிகள் , அவைகளுக்கு  இடையே விளக்குகள் , முன்பு  அதனில் எண்ணெய்  ஊற்றி வைத்திருந்து விளக்கு எரிப்பார்களாம்  , இப்பொழுது அலங்காரமாய் இருக்கிறது. 


சுவரில் ஆங்காங்கே மாட்டப்பட்டிருக்கும் பல்வேறு சமயங்களில் கொடுத்த பட்டயங்கள் , கோல்ப் குச்சிகள் என அது ஒரு  சிறு உலகம் .இந்தக்கடை பழமை மாறாமல் இருப்பது மட்டும் இல்லாமல் மெருகு குறையாமல் இருக்கிறது . எந்த அளவு பராமரித்தால் இப்படி இருக்கும் என வியப்பாக இருந்தது .


இதை கடையின் ஈர்ப்பு அங்கு உள்ள தொலைக்காட்சியில் ஓடும் கருப்பு வண்ண பழைய படங்கள் .


இரண்டு இளைஞர்கள்  கடையில் இருக்கிறார்கள்  . வயது குறைந்த Orie  இதன் உரிமையாளர் இவருடன்   சற்றே வயது அதிகமான john  . Orie யின் வயது அதிகமில்லை 86 தான். John னின் வயது 68 . நான் தான் வயது குறைவனானவன் என்று சொல்லி சிரிக்கிறார் Orie .


முழுக்கை சட்டையுடன் கழுத்து வரை பட்டன் போட்டிருக்க , அதை டக்கின் செய்து , பெல்ட் , வாட்ச் , லெதர் காலனி என  போர்டு மீட்டிங்கிற்கு போவது போல முடி வெட்ட வரும் வாடிக்கையாளர்களை இங்குதான் பார்க்க முடியும் . நான் பார்த்த வரை இந்த கடைக்கு வருபர்கள் அனைவருமே இப்படித்தான் வருகிறார்கள் .குறைந்தபட்சம் 60  வயது இருக்கும் அமெரிக்கர்கள் .


என்ன மாதிரி வெட்ட வேண்டும் என்று  கேட்டு,நாற்காலியில் அமரச் செய்து  , பிளாஸ்டிக் குடுவையில் உள்ள தண்ணீரை பீச்சுகிறார் ஜான் . சிறுவயதில் ஏற்பட்ட அதே சிலிர்ப்பு .


"scissor or machine"  என  அவர் கேட்டதும் , "scissor, scissor, scissor  " என்று மூன்று முறை கூறி விட்டேன் .


காதருகே சீப்புடன் , கத்திரிக்கோல் உரசும் சத்தம் , முடி வெட்ட வெட்ட தலையை சீப்பால் அவர் சீவ ,நினைவுகள் பின்னோக்கி போக  பத்து வயது சிறுவனாக அமர்ந்திருந்தேன் .


அவர்கள் இருவருடன் உரையாடல் ஆரம்பித்தது , எதிர் இருந்த தொலைக்காட்சியில்  1950 களின் கருப்பு வண்ண படம் ஓடிகொண்டுஇருந்தது . இரண்டு காவலர்கள் இடிந்திருந்த வீட்டில் இருந்து ஒரு சிறுமியை   எடுத்து வந்து காரில் போனார்கள் , அவர்களில் ஒருவர் கதாநாயகன் .குழந்தையின் பெற்றோரை காணவில்லை , எதுவோ இழுத்துக்கொண்டு போயிருந்தது , சிறுமிக்கு  சொல்லத் தெரியவில்லை , பிரமை பிடித்து  பேச்சு போய்விட்டிருந்தது .




நான் இப்படி ஒரு கடையை அமெரிக்காவில் பார்த்தது இல்லை  என்று  சொன்னதும் , இதே இடத்தில் நான் 51  வருடங்களாக கடை நடத்துகிறேன் என்றார் ஓரி .


மிச்சிகனில் இந்த வருடம் அடிக்கும் குளிர் , கடந்த வருடங்களில் வந்த பனிப்புயல்கள்    என  பேச்சு கொடுத்துக்கொண்டே  பொறுமையாக ஒவ்வொரு  முடியாக எடுத்து வெட்டிக்கொண்டிருந்தார் ஜான்.


படத்தில் , சிறுமியின் பெற்றோரை எதுவோ ஒரு விலங்கு இழுத்து போய்விட்டிருக்கிறது என காலடித் தடத்தின் மூலம் கண்டு பிடித்தார்கள் . அது புது மாதிரியாக இருக்கவே , நாட்டின் மூத்த அறிவியல் அறிஞர் வந்து பார்த்து அவருக்கும் பிடிபடாமல் போக , ஆப்பிரிக்காவில் விலங்குகளை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் அவரின் மகளை அழைக்கிறார்  ஹீரோயின் அறிமுகம் .


அடுத்தது என்ன என்று பார்க்கையில் ,தொலைக்காட்சியை  மறைத்துக்கொண்டு இரண்டு அடி முன் சென்று  என் தலை வரை குனிந்து , சீப்பை வைத்து அளவு பார்க்கிறார் ஜான் . திருப்தி அடையாமல் மறுபடியும் வெட்ட ஆரம்பித்தார் .


நான் 1984 இல் தான் பிறந்தேன் என்பதை  கேட்டு அறிந்ததும் , 80 கள் தான்  அமெரிக்காவின் , அமெரிக்க படங்களின், அமெரிக்காவில் வெளிவந்த பாடல்களின்  பொற்காலம்  என்று ஓரியும் , ஜானும் ஒருமித்த கருத்தில் சொன்னார்கள்,   . நமது தமிழ் படத்தை போல இங்கயும் ஒரு இளையராஜா இருந்திருப்பார் போல .


படத்தில் கதாநாயகி புயலாக வேலை செய்து , அந்த விலங்கு ஏதோ ஒரு காரணத்தால் மிகப்பெரிதாக வளர்ந்த எறும்பு என்று கண்டுபிடிக்கிறார் , அது மனிதர்களை சிப்ஸ் சாப்பிடுவதை போல தின்று எலும்புகளாக துப்புகிறது , அதன் கூட்டை கண்டுபிடித்து அழித்து விட்டு  பிரச்னை இல்லை என்று நினைக்கையில் , முட்டை ஓடுகளை வைத்து  இன்னும் நிறைய எறும்புகள்  இருக்கின்றன அன்று கண்டு பிடிக்கிறார் கதாநாயகி .

 அதுவும் பிறந்தவை ராணி எறும்புகள் என்று அவர் கண்டு பிடித்ததும் உயர்மட்ட ராணுவ கூட்டம் கூட்டப்படுகிறது .


மறுபடியும் தொலைக்காட்சியை மறைத்துக்கொண்டு ஜான் . இந்த முறை அளவு பார்த்ததில் அவருக்கு முழு திருப்தி .


"எப்படி ? " என்று அவர்  கைக்கண்ணாடியை   கொண்டு வந்து காண்பிக்க எனக்கு எந்திரிக்கவே மனசு இல்லை . அருமையாக உள்ளது என்று சொல்லிவிட்டு ."முகச்சவரம் செய்வதாக போட்டிருக்கிறதே செய்வீர்களா ?" என்று கேட்டேன் .


எனக்கு கை நடுங்கும் அதனால் ஓரி தான் செய்வார் என்றார் ஜான் .


86  வயது மனிதர் கத்தி பிடித்து முகச்சவரம் செய்கிறாரா ? என்று  ஆச்சிரியமும் கூடவே  சிறிது  பயமும்  இருந்தாலும் ஓரியிடம் சென்று அமர்ந்தேன் .


சுழலும் நாற்காலியை அப்படியே மடக்கி மல்லாக்க போட்டு , மிகவும் சூடான துண்டை முகத்தில் போட்டு ஐந்து நிமிடம் விட்டு விட்டார் . வெளிய அடிக்கும் குளிருக்கு மிக இதமாக இருந்தாலும் படத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியவில்லை என ஒரு சிறு கவலை .


அந்த கவலையை போக்கும் வண்ணம் , படத்தில் வரும் வசனங்களை மாறி மாறி சொல்லிக்கொண்டு இருந்தனர் ஓரியும் , ஜானும் . எத்தனை தடவை பார்த்திருப்பார்களோ தெரியவில்லை . தற்போதைய படங்களில் வரும் கதாநாயகியின் பாத்திர படைப்பு பழைய காலங்கள் போல  வலிமை வாய்ந்ததாக இல்லை என்ற கருத்தையும் பதிவு செய்தனர் .


பின்  சோப்பை தேய்த்து அவர் சவரம் செய்ய, அவர்  கையில் துளி நடுக்கம் இல்லை . கத்தியை வைத்ததும் தெரியவில்லை எடுத்ததும் தெரிய வில்லை . மிகவும் மென்மையாக சவரம் செய்வதே  தெரியாமல் செய்து முடித்தார் .அப்படி ஒரு தொழில் நேர்த்தி  .


                                                         Mr. Orie 



                                                        Mr,John




நாற்காலியில் இருந்து எழுந்து படத்தை பார்க்க , ராட்சச எறும்புகள்  ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தன . படத்தை  மீறி  எப்படி இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என்ற ஆவல் உந்தித்தள்ள , அவரிடமே கேட்டேன் ,  "உங்கள் இளைமையின் ரகசியம் என்ன " ?  என்று . 


அவர்கள் சொன்ன பதிலின் தொகுப்பு .


1. எங்கள் வேலையில் அழுத்தம் என்பது இல்லை .

2.ஒரு நாளின் குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலை செய்வோம் , நேரம், காலம் தெரியாமல் நாங்கள் உழைப்பது  இல்லை 

3.எங்கள் வேலையின் நடுவே மீட்டிங் என்பது  இல்லவே இல்லை .

4 . எங்கள் வேலை நாங்கள் எப்போது முடிந்தது என்று சொல்கிறோமோ அப்பொழுதுதான்  முடியும் (There is no Deadline .)

5 . எங்கள் தொழிலை நாங்கள் விரும்புகிறோம் ஆனால் கடையை அந்த நாளில் மூடிவிட்டால் , பின் அதைப் பற்றி கவலை பட மாட்டோம் , மீதி நேரத்தில் எங்களுக்கு பிடித்த செயல்களை செய்வோம் . .

6 . நாங்கள் நிறைய நேரம் நின்று கொண்டு இருப்போம் , நிற்பதோடு இல்லாமல் அசைந்து கொண்டு இருப்போம், எங்கள் வேலையின் தன்மை அப்படி . அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் .


நான் டென்ஷனாக இருக்கும் ஒரே நேரம் ,நான் இந்த கடைக்கு வாடகை கொடுப்பது தள்ளிப்போகும் போதுதான் , அது எப்போவாவது நடக்கும் என்று சொல்லிச்  சிரிக்கிறார் ஓரி .


நீங்கள்  மிச்சிகனில் இருந்தால் ஒரு எட்டு  Farmington Hills இல் உள்ள இந்த கடைக்கு போய் வாருங்கள் . அவர்கள் இருவரது வயதையும் சேர்த்து 154  வருடங்களுக்கான உலக அனுபவங்களின் தொகுப்பும் கூடவே போனசாக முடி வெட்டுவதும் நடக்கும்.

தொழிலை வைத்து மனிதர் இல்லை , உயரிய ஆளுமைகள் நம்மிடம் எங்கேயும் இருக்கலாம் , நாம் தான் அதை பல சமயங்களில் உணருவதில்லை .


சொல்ல மறந்து விட்டேனே நன் பார்த்த அந்த படம் 1954 ல் வெளிவந்த  Science  fiction Horror திரைப்படம் "Them ". 








2 comments:

  1. நல்ல அனுபவப்பகிர்வு. அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றிங்க

    ReplyDelete

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...