கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் (1926 ம் ஆண்டு ) Geroge Samuel Johnson என்பவரால் எழுதப்பட்டது " Richest Man in Babylon " என்ற இந்த சிறிய புத்தகம் . புத்தகம் சிறிதானாலும் இதில் உள்ள கருத்துக்களுக்காக உலகம் முழுவதும் தனி மனித நிதி மேலாண்மைக்கும் , திட்டமிடலுக்கும் மிகச் சிறந்த புத்தகமாக இது பொருளாதார வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது .
அப்படி என்ன சிறப்பு என்பதை தெரிந்துகொள்வதற்கு , ஏறத்தாழ 8000 ஆண்டுகளுக்கு முன் இருந்த பாபிலோன் நகரத்துக்கு நாம் செல்ல வேண்டும் (இன்றைய இராக் தலைநகர் பாக்தாத் நகருக்கு அருகில் உள்ள "ஹில்லா " , அன்றைய பாபிலோன் ) . பாபிலோனின் தொங்கும்தோட்டம் நாம் அறிந்ததே , தோட்டம் மட்டும் இல்லை , வானவியல் , அறிவியல் , கட்டிடக்கலை , பாலைவனத்தில் விவசாயம் ,முக்கியமாக செல்வம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய நகரம் பாபிலோன் .
இத்தனைக்கும் பூகோள ரீதியாகவோ , அரசியல் ரீதியாகவோ , மண்வளத்திலோ , வணிகரீதியாகவோ சிறப்பு பெற்ற நகரம் இல்லை அது , ஆனாலும் செல்வத்தில் கொழித்த நகரம் , எப்படி இது சாத்தியமானது ? ஏன் எனில் , பணத்தை கையாள்வதில் அந்த நகரத்து மக்கள் சிறந்தவர்களாக இருந்துள்ளனர் , பணத்தை என்ன செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது , என்ன சொன்னார்கள் என்பதையும் காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்னே களிமண் தட்டிகளில் எழுதி நூலகமாக வைத்துள்ளனர் . அகழ்வாராய்ச்சியில் ஆயிரக்கணக்கான எழுதப்பட்ட தட்டிகள் எடுக்கப்பட்டு , அதில் இருந்ததை தொகுத்துள்ளதாக கூறுகிறார் நூலாசிரியர் .
பாபிலோனில் உள்ள இரண்டு நண்பர்கள் என்ன செய்தாலும் , எவ்வளவு உழைத்தாலும் பணம் நமக்கு தங்குவது இல்லையே என அவர்களுக்குள் புலம்புகிறார்கள் , பணம் கையில் தங்குவதற்கு என்ன ரகசியம் என தெரிந்துகொள்ள கிளம்புகிறார்கள்
இன்னொரு புறம் பாபிலோனின் அரசன் , மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அமைச்சரவையில் விசாரிக்க , மக்களிடம் பணம் இல்லை என்று பதில் வருகிறது , அரசனுக்கோ அதிர்ச்சி ,சிறிது காலம் முன்புதான் மிகப் பெரிய பொருட்ச்செலவில் அன்றைய உலகின் உயரமான மதில் சுவரை கட்டி முடித்திருந்தான் (நகரத்தை சுற்றி 140 அடி சுற்றுச்சுவர் ) , இதன் மூலமான வேலை வாய்ப்பு , பணப்புழக்கம் என மக்களிடம் பணம் இருக்க வேண்டுமே ஏன் இல்லை என்று கேட்கிறான் .
மக்கள் வந்த பணத்தை செலவழித்து விட்டார்கள் , அவர்களுக்கு சேமிக்க தெரியவில்லை என்று பதில் வருகிறது .
புத்திசாலி அரசனின் அடுத்ததாக , யார் இந்த நகரத்தின் பெரிய செல்வந்தன் நம் ஆர்கத் (Arkad ) தானே எனக் கேட்கிறான் ,ஆம் என்று அமைச்சர்கள் சொல்ல , முதற்கட்டமாக நம் மக்கள் நூறு பேரை தேர்ந்தெடுங்கள், பணத்தை எவ்வாறு கையாளுவது என்பதை பற்றி ஆர்கத்தை படம் எடுக்க சொல்லலாம் , அவன் புத்திசாலி தனக்கு தெரிந்ததை எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பான் என முடிவு செய்கிறான் ,
நாம் முன்பு விட்டுவிட நண்பர்களும் , அவர்களுடைய சிறு வயது நண்பன் , இப்போதைய பெரும் பணக்காரன் ஆர்கத்தை தேடித்தான் வருகிறார்கள் .
அன்றைய பாபிலோனின் பெரும் செல்வந்தனாக இருந்த ஆர்கத் மீது அரசன் முதல் , ஆண்டி வரை அனைவருக்கும் மிக ஆச்சிரியம் , ஆர்கத் செல்வ குடும்பத்தில் பிறக்கவில்லை , நூலகத்தில் மண் தட்டிகளை செய்யும் வேலை தான் செய்தான் , அதில் அப்படி ஒன்றும் பெரிய வருமானம் இல்லை , மிகவும் நாணயமானவனும் கூட , எப்படி பொருள் சேர்த்தான் ?
அர்க்கத் அரசன் சொன்னபடி , 100 பேரை அழைத்து , நண்பர்களே பணம் சேர்ப்பது ஒன்றும் , ரகசியமோ , பெரிய சாதனையோ இல்லை , எனக்கு என்ன செய்வது என்று , பசீர் என்ற முதியவர் சொன்னதை உங்களுக்கு சொல்கிறேன் , அவரும் பெரிய செல்வந்தர் , நூலகத்திற்கு வந்த அவரிடம் நான் எப்படி பணம் சேர்ப்பது என்று கேட்க மூன்று ஆண்டுகள் சொல்லி கொடுத்தார் , நான் அவற்றை உங்களுக்கு சொல்கிறேன் என தனது பாடத்தை ஆரம்பிக்கிறான்
அர்க்கத் பெரும்பாலும் நம்மிடம் இருக்கும் ஒல்லியான பணப்பையை குண்டாக்க சொன்ன ஏழு வழிகள்(இவற்றை கதைகளாக விரிவாக சொல்கிறார் , இந்த கட்டுரை புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இல்லை , சுருக்கம் என்பதால் , சுருங்கிவிட்டது )
>சம்பாதித்த பணத்தில் 10 சதவீதமாவது சேமியுங்கள் .
>செலவழிப்பதை கட்டுப்படுத்துங்கள்
> சேர்த்ததை பெருக்குவதற்கு வழி செய்யுங்கள் (வட்டி குட்டி போடும் , குட்டி வட்டி போடும் , குட்டி மறுபடியும் குட்டி போடும் , அது வட்டி போடும் , குட்டி ... வேண்டாம் முதல் குட்டியில் அனைவருக்கும் புரிந்திருக்கும் )
> சேர்த்த பணத்தை இழக்காதீர்கள் ( நம்ம "warren buffet " தாத்தாவும் இதைத்தான் சொல்கிறார் "Never lose your money " )
> உங்களுக்கு சொந்தமாக ஒரு வீட்டை வைத்துக்கொள்ளுங்கள் , அது தரும் நம்பிக்கை அலாதியானது
> எதிர்கால வாழ்விற்கும் , ஓய்வுக்கும் பணம் தொடர்ந்து வருவதற்கு வழி செய்யங்கள்
> வருமானத்தை பெருக்குங்கள் .
அர்க்கத் சொன்னதை மக்கள் கடைபிடிக்க ஆரம்பிக்கிறார்கள் , சிறிது காலம் சென்று , அர்க்கத்தின் மகன் தனியாக தொழில் தொடங்க வேறு நகரத்துக்கு சென்று , ஒன்றை பத்து ஆக்குகிறேன் என முதலீடு செய்து ( இன்றைய BITCOIN போல ) அனைத்தும் தொலைத்து நிற்கையில் , தனது அப்பா தங்கத்தை ஈர்க்க சொல்லிக் கொடுத்த வழிகளை எண்ணிப் பார்க்கிறான் , அதனை கடைபிடித்து மீண்டு வந்து மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறான் , அந்தப் பாடம் (தங்கத்திற்கு பதில் பணமாக நாம் வைத்துக் கொள்ளலாம் )
> தனது வருமானத்தில் 10 % சேமிப்பவன் கையில் தங்கம் சேரும்
> கையில் உள்ள தங்கத்தை , தனக்காக வேலை வாங்க தெரியும் புத்திசாலியிடம் தங்கம் சேரும்
>பொறுமையாக , நீண்டகாலத்திற்கு , எச்சரிக்கையாக முதலீடு செய்பவனிடம் தங்கம் சேரும்
>தெரியாததை செய்தால் தங்கம் ஓடிவிடும் தனக்கு தெரிந்த முதலீட்டை செய்பவனிடம் தங்கம் சேரும் ( youtube இல் சொன்னதை கேட்டு பங்கு வாங்காதீங்க ,படித்து தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்க என படிக்கவும் )
> ஒரு ரூபாய் போட்டால் நூறு ரூபாய் எடுக்கலாம் என முதலீடு செய்தால் தங்கம் கையை விட்டு ஓடி விடும் (quest coin , ஈமு கோழி , ஒரு லட்சத்திற்கு மாதம் பத்து சதவீத வட்டி பங்குச் சந்தையில் சம்பாதித்து கொடுக்கிறோம் போன்றவைகள் )
பின் பாபிலோனில் காலம் செல்கிறது , மக்கள் பணத்தை கையாள்வதில் புத்திசாலிகளாக மாறுகிறார்கள் , அவர்களில் இருந்து தங்கத்தை வட்டிக்கு விடும் ஒருவர் , "ஐயோ போச்சே!!! என புலம்புவதை விட ,பணத்தில் ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது " என தன் அனுபவங்களை சொல்கிறார் .
பாபிலோனின் 140 அடி சுவர் எப்படியெல்லாம் எதிரிகளிடமிருந்து மக்களை காத்ததோ அதுபோல நாம் நம்மை சுற்றி நமது முதலீடுகளின் மூலம் ஒரு சுவரை கட்டி காத்துக்கொள்ளவேண்டும் என்று விளக்கப்படுகிறது .
நல்ல குடும்பத்தில் பிறந்து , பணத்தை தவறாக கையாண்டதால் அடிமையாக விற்கப்பட்டு , தன் உறுதியான நிலைப்பாட்டால் , கடனை அடைத்து , சுதந்திர மனிதனான ஒட்டக வியாபாரியின் கதை நமக்கு சொல்லப்படுகிறது ( கடன் இருந்தால் வருமானத்தில் 20 % கடனை அடைக்க முதலில் எடுத்து வையுங்கள் , பட்டினி கிடந்தாலும் 70 % பணத்தில் வாழுங்கள் , 10 % சேமியுங்கள் )
இதனோடு புத்தகம் முடிகிறது , பணம் , பணத்தை கையாள்வது எப்படி , எவ்வாறு முதலீடு செய்வது என எந்தப் பள்ளியும் , கல்லூரிகளும் , தொழில் படிப்புகளும் , நாம் வேலை செய்யும் நிறுவனுங்களும் , நமக்கு சொல்லிக் கொடுப்பதில்லை , பணம் இருப்பவன் தொடர்ந்து பணக்காரன் ஆகிறான் , ஏழை மாடு மாதிரி உழைத்தாலும் மேலும் ஏழை ஆகிறான் , உலகம் முழுவதும் இதே நிலைமை தான் . நமக்கு சொல்லி கொடுப்பதற்கு இந்த மாதிரி அரிதாக சில புத்தகங்களே உள்ளன
பொருளாதார மந்த நிலை வரும் என்று உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்த சூழ்நிலையில் , இம்மாதிரி புத்தகங்களை படித்து நம்மையும் , நமது குடும்பத்தையும் ஓரளவேனும் காத்துக் கொள்வது நல்லது, இல்லையென்றால் இருக்கவே இருக்கு " YOLO வழி " .
அது என்னங்க YOLO வழி…
ReplyDeleteYOLO -you only live once . எந்த கவலையுமில்லாமல் செலவு சசெய்து ஜாலியாக இருப்பது :)
Deleteஅருமை பகிர்வுக்கு நன்றி...
ReplyDelete