Sunday, January 14, 2018

நினைவில் காடுள்ள மிருகங்கள் !!! (The Common Sense இதழில் வெளிவந்த எனது கட்டுரை )







https://drive.google.com/open?id=11ItjHDvPRhseyKgw95IQsJLSqQzxpUy4-- 
முழு இதழையும் இணைத்துள்ளேன்


  பாரம்பரியம் , கலாசாரம் பேசும் தமிழ் சமூகத்தில் காலம் காலமாக  இருக்கிறது  ஆணவக் கொலைகள்.கணியன் கூத்திலும் , வில்லுப்பாட்டிலும் இதற்கான சான்றுகள் இருக்கின்றன .

கன்னிச்சாவு என்னும்  நாட்டுப்புற இலக்கியத்தில் , இவை தீட்டுச் சடங்கு கொலை என விவரிக்கப்ப்டுவதாக கூறுகிறார் ஆய்வாளர் எ .கே பெருமாள் . கி பி பதினாறாம் நூற்றாண்டு காலம் முதல்  சான்றுகள் இருப்பதாக கூறும் அவர் , இது தொடர்பான ஐம்பது கதைகளையும் சேகரித்து உள்ளார் .  சாதியால் கட்டமைக்கப்பட்ட காட்டுச் சமூகமாக நாம் இருந்துள்ளோம் .

இருந்தோம் இல்லை ,இன்னும்  அப்டித்தான் இருக்கின்றோம் என்பதை அதிர, அதிர பறை அடித்துச் சொல்கிறார் கௌசல்யா .

நவீனமயமாக்கலும், உலகமயமாக்கலும் , தொழில்நுட்ப முன்னேற்றங்களும்  கண்களை மறைக்க எல்லாவிடத்திலும் எளிதாக கேட்கப்படும் கேள்வி- இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குறா ?

நினைவில் காடுள்ள மிருகங்கள் நம்மில் பரவலாக உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன .இந்த ஐந்தறிவுவாதிகள் பண்பாடு ,பாரம்பரியம் என்று பேசி ,சாதியை மட்டும் காத்து , சாதி சங்கங்களின் கிளைகளை இணையத்தில் , கைபேசியில் நடத்தி ,  அதனை வீரமாகவும் , பெருமையாகவும் பேசித் திரிகின்றனர் .

வெறுப்பினை மட்டுமே மூலதனமாக கொண்டு அதனைக்  குறையாமல் காக்க மிருகத்தனம் முற்றிப்போய்  சங்கர்களை இரையாக்கிக்  கொள்கின்றனர் .

யார் சாதி பார்க்கிறார்கள் என்பதற்கு கவுசல்யாவின் முன் வைக்கப்படும் விமர்சனங்களும், தீர்ப்பை விமர்சித்து இடப்பட்ட பதிவுகளும் பதில்களாக கொட்டிக் கிடக்கின்றன . பிறப்பில் இருந்து இறப்பு வரை சாதி தன் விகாரத்தை காட்டிக்கொண்டே இருக்கிறது . பிரித்துப் பார்ப்பதால் பலன் அடைபவர்கள் தொடர்ந்து அதற்கு தீனி போடுகிறார்கள் .

வாழ்க்கைத்தரம் , உடை , பாவனை , நுகர்பொருட்கள் என அனைத்தும் நவீனமடைந்தாலும்  இந்த ஐந்தறிவுவாதிகளின் மனம்  அப்படியே இருக்கின்றது .பாவம் ஐந்தறிவுதானே !!!

காதல், கல்யாணம் ,கண் முன் கணவனின் கொலை , தானும் தாக்கப்பட்ட அதிர்ச்சி  ,மன அழுத்தம், தற்கொலை முயற்சி, ஏற்றுக் கொள்ள முடியாத இழப்பு , இத்தனையையும்  எதிர்கொண்ட பின்பும்    , மனதிடம் குறையாமல்  சாதி மறுப்பு போராளியாக களத்தில்  நிற்கிறார் கவுசல்யா . அதுவும் நேர்மறையான போராட்டக் களத்தில்.

சாதி மறுப்பு மேடைகளிலும் , திருமணங்களிலும்  அடையாளமாக மாறிவிட்ட கவுசல்யா தொடர்ந்து தன் எதிர்ப்பை தன் செயல்களால் இடைவிடாது பதிவு செய்கிறார் . தன் மீது தொடுக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததோடு மட்டுமில்லாமல் , 58 தடவை குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்களுக்கு உறுதியாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் .

இவரின் வழக்கும் அதன் தீர்ப்பும் , மனதில் காடுள்ள மிருகங்களுக்கு கடிவாளம் போட்டிருக்கிறது .

தனது  அம்மா உட்பட விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு   எதிராக முறையீடு செய்வேன் என்று நீதிமன்ற வளாகத்தில் இருந்து உறுதியாக சொன்னதெல்லாம் வேற லெவல் . இது பழிவாங்கும் செயல் அல்ல , தன்னை விட , தன்  குடும்பத்தை விட சமூக நீதி முக்கியம் என்ற உறுதி .

ஒரே வருடத்தில் இந்த மாற்றம் எப்படிச் சாத்தியம் ?  இந்த  தீர்க்கமும் , தெளிவும்  எங்கிருந்து வந்தது ?  சங்கர் கொலைக்கு நீதி கேட்டு தொடங்கிய பயணம் , சாதி ஒழிப்பாகவும் , சமூக நீதியாகவும் எப்படி  மேம்பட  முடிந்தது ?   கவுசல்யாவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் "இப்போது இருக்கும் நான் பெரியாரால் பெற்றெடுக்கப்பட்டவள்" .

தந்தை பெரியார் - இறந்து 44  ஆண்டுகளுககு பிறகும் இந்த மனிதரால்  , சாதியால் பாதிக்கப்பட்ட , கணவனை இழந்த கவுசல்யாவை முடங்கிப் போக விடாமல் ,ஒரே வருடத்தில்  போராளியாக மாற்ற 
 முடிகிறது . பிறப்பு , இறப்பு என்று ஒரு சகாப்தத்தை அளவிட முடியுமா ?  படிக்கும் ஒவ்வொரு முறையும் மனிதன் பண்படும் விதையை அல்லவா எழுத்துக்களாக விதைத்து சென்று இருக்கிறார் ? 

சமூக நீதிக்கு எதிராக எங்கெல்லாம் அடக்குமுறைகள்  கட்டவிழ்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் கவுசல்யாக்கள் முளைத்து வருவார்கள் . ஏனெனில் இது  "பெரியார் மண்" .

 கவுசல்யாவின்  பலம்   என்பது  பகுத்தறிவின் ,  சித்தாந்தத்தின் பலம் , உங்களாலும் முடியும் ஜாதியவாதிகளே பெரியரைப்  படியுங்கள்  , துருப்பிடித்த சிந்தனைகளில் இருந்து வெளியே வருவது கடினம் தான் . முயற்சி செய்யுங்கள் ,மனநோயில் இருந்து விடுபட்டு ,அதிகபட்சம்  மனிதர்கள் ஆகலாம்.

அறிவூட்டு , உணர்வூட்டு , அணிதிரட்டு -  என்று நீங்கள் தொடங்கிய  "சங்கர் தனிப்பயிற்சி  மையம் " விருட்சமாக வளரவும் , ஆணவக் கொலைக்கு   எதிராக தனிச் சட்டம்  என்ற கோரிக்கை வெற்றி பெற்று , மேலும் பல பரிணாமங்களில் சாதி  எதிர்ப்பை வாழ்வியலாக கொண்டுள்ள   தங்களின் பயணம் தொடரவும் வாழ்த்துக்கள் சகோதிரி !!!

இது கௌசல்யாவின் போராட்டம் மட்டும் அல்ல !  நமது பங்காக ,சங்கர்களும்-கௌசல்யாக்களும் தாங்கள் விரும்பிய வாழ்க்கை வாழ,  சாதி கடந்த சமத்துவமும் , மதம்  கடந்த மனிதநேயமும் நம் சமூகத்தின்  அங்கமாய் மாற , ஆணவக் கொலை என்னும் வார்தையையே தமிழகத்தின் வரலாற்றில் இருந்து அகற்ற ,   நாம்   தவிர்ப்பதோடு  மட்டும் இல்லாமல் நமது பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்  "சாதி என்பது கெட்டவார்த்தை"
                                                                                                                                                                                           -பாவி

No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...