செப்டம்பர் 23 2017 - திரு வில்சன் அவர்கள் மிச்சிகன் யூனிவெர்சிட்டியில் இந்தியாவில் தீண்டாமையின் உண்மை நிலையை விளக்கி Manual Scavenging in India - The Stark reality of Untouchability - எனும் தலைப்பில் உரையாற்றினார் .
யார் இந்த வில்சன் என்று கேட்பவர்களுக்கு - https://en.wikipedia.org/wik i/Bezwada_vilson .
இதில் கலந்து கொள்ளும் வரை - மனிதக் கழிவை மனிதன் அள்ளும் கொடுமை இந்தியாவில் அவ்வளவு பரவலாக இல்லை , தொழில்நுட்பம் பெருகி விட்டது இப்போது இந்த முறை வழக்கொழிந்து விட்டது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன் .
இந்தியாவில் இன்றும் லட்சம் குடும்பங்களுக்கு மேல் இதில் இன்னமும் கட்டாயத்தால் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதும் , இதனை தடுக்க 1993 ஆம் ஆண்டே சட்டம் இருந்தாலும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்பதும் , இந்தியா அரசாங்கம் தொடர்ந்து உலக அரங்கில் மறுத்தும் , உள்ளூரில் மறைத்தும் வருகிறது என்பது அதிர்ச்சியாக இருந்தது .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் வில்சன் என்னும் மாமனிதர் குடும்பம் மறந்து , தூக்கம் மறந்து மக்களின் மேம்பாட்டிற்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாது போராடி வருகிறார் .
சந்தித்து உரையாடும் போது கருப்புச் சட்டைகாரர்கள் தானே நீங்கள்? உங்கள் அமைப்பு ( பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம் அமெரிக்கா ) பற்றி வந்தவுடன் அறிந்து கொண்டேன் என்று தமிழில் பேசி ஆச்சிரியப்படுத்தினார் . எங்கெல்லாம் வேலை செய்தாரோ அங்கே இருந்த மொழிகளை பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை பின்பு கேட்டு அறிந்து கொண்டேன் .
மிகவும் தன்மையான மனிதர் , தன்னம்பிக்கை தரும் கம்பீரம் , தீர்க்கமான வாதங்கள் , தான் எடுத்த நிலையில் தெளிவு , அநீதிக்கு எதிராக கண்களில் தெரியும் கோவம் , அது வார்த்தைகளில் வெளிப்படாமல் கோர்வையாக பேசும் பக்குவம் . இப்படி ஒரு மனிதரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு மிச்சிகன் யூனிவெர்சிடியின் உளவியல் துறை பேராசிரியர் திரு.ராம் மஹாலிங்கம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் .
அவர் உரை முழுவதும் சுட்டெரிக்கும் கேள்விகள் , அரசாங்கங்களையும் , அதிகாரங்களையும் கேட்டு கேட்டு பதில் வராமல் போனதால் இன்னும் வேகமாக வந்து விழுகின்றன அவர் கேள்விகள் . அவர் கேட்கும் கேள்விகள் மூலம் உரையின் சாராம்சத்தை விளக்கலாம் என்று முயற்சித்திருக்கிறேன்.
புறவாசல் வழியே வந்து , அதன் வழியே போகும் முகம் அறியாத , நீங்கள் அறிந்து கொள்ள விரும்பாத மனிதர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? - Safai Karmachari Andolan அமைப்பை நான் தொடங்கவில்லை , தான் இந்த நிலையில் இருப்பதை ஏற்றுக் கொள்ளாத நாராயண அம்மா , சரோஜினி போன்றோர் தான் இதற்கு முன்னோடிகள் .
ஒரு மனிதனை , அவன் மனிதத்தன்மையை அழிக்க எவரோ ஒருவரின் கழிவை வெறும் கைகளால் சுத்தம் செய்ய சொன்னால் போதும் இதுதான் இந்த சமூகம் விரும்புகிறதா ?
தீண்டத்தகாதவன் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது , நான் இதுதான் செய்ய வேண்டும் என்று என் பிறப்பை கொண்டு முத்திரை குத்துவதற்கு நீங்கள் யார் ?
சட்டம் இயற்றி 23 ஆண்டுகளாகியும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை . ஒருவர்இ மீது கூட வழக்கு பதிவு இல்லை ,தற்கான சட்டம் இருப்பதாவது அனைவர்க்கும் தெரியுமா ?
உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று உரையாற்றும் பிரதமர் , இந்தியா நாடளுமன்றத்தில் இந்தியாவில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது என்பதையும் , சமூகம் தன் கொடூர கரங்களால் இந்த மனிதர்களை வதைக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள தயாராக உள்ளாரா ?
தூய்மை இந்தியா , ஊழல் இல்லாத இந்தியா , கறுப்புப்பணம் இல்லாத இந்தியா , புல்லட் , மெட்ரோ ட்ரெயின் என்று அனைத்துக்கும் தேதி குறித்து செயல்படுத்தும் இந்தியா அரசாங்கத்திடம் இந்த முறை எப்போது ஒழியும் என்பதற்கு பதில் உள்ளதா ?
இதற்கு பதில் இல்லாமல் வளர்ச்சி பற்றி பேசுவது உண்மையான வளர்ச்சியா ?
ஒரு ராக்கெட்டில் 104 செயற்கைகோள் செலுத்தும் இந்தியாவிடம் , மனித கழிவை மனிதன் தான் அள்ள வேண்டும் என்ற நிலையை மாற்ற ஒரு கண்டுபிடிப்பு கூட ஏன் இல்லை ?
நாங்கள் கணக்கு எடுத்த வரையில் எங்களுக்கு தெரிந்து 1470 பேர் இந்த வேலையில் விஷவாயு தாக்கி இறந்திருக்கிறார்கள் , தெரியாமல் எத்தனை பேர் ?
இது இயற்கை மரணமா ? இல்லை அரசியில் படுகொலை .
2017 இல் - 54 பேர் தீவிரவாதத்துக்கு பலியாகி உள்ளனர் , ஆனால் 117 பேர் கழிவு அள்ளும்போது பலியாகி உள்ளனர் . அரசாங்கம் இதனை மறுக்கிறது . 10 மாடு செத்தால் தேசிய ஒற்றுமையும் , தலைப்பு செய்தியும் ஆகிறது , மனிதர்கள் இறந்தால் செய்தி வருகிறதா ??
எத்தனை பேர் கைகளால் மலம் அள்ளுகிறார்கள் என்ற கணக்கு இல்லாத ஒரு அரசாங்கம் , நாட்டில் உள்ள மாடுகளை கணக்கு எடுக்கிறது ?
100 % தலித்துகள் மட்டுமே இதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் , இது எந்த வகையில் நியாயமாக படுகிறது ?
படிப்பறிவு இல்லை , பணம் இல்லை அதனால் செய்கிறீர்கள் என்று நீங்கள் வாதிக்கலாம் , 40 சதவீத மக்களுக்கு இந்தியாவில் படிப்பறிவு இல்லை , 50 சதவீதத்துக்கும் மேல் உள்ள மக்களுக்கு பணம் இல்லை அனாலும் அவர்கள் அனைவரும் இதனை செய்வதில்லை ஏன் ?
தூய்மை இந்தியா என்று சொல்லும் அரசியல்வாதிகள் , man hole இல் இறங்கி ஒரு முறை சுத்தம் செய்ய தயாரா ? ஆள் வைத்து குப்பையை கொட்டி , புகைப்படம் எடுக்க சுத்தம் செய்வதுதான் தூய்மை இந்தியாவா ?
நாட்டிலேயே இந்திய ரயில்வேதான் மனித கழிவை அள்ளுவதற்கு நிறைய மக்களை நிர்பந்திக்கிறது ஆனால் மத்திய அரசாங்கம் அதனை தொடர்ந்து மறுக்கிறது .
நீங்கள் வாழும் சமூகத்தில் மனிதனை மிருகத்தை விடவும் கேவலமாக நடத்துவதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா ?
இறுதியில் ஒரு தகவலை சொல்லி உரையை முடிக்கிறேன் . காந்தி அடுத்த பிறப்பில் தலித்தாக பிறக்க ஆசைப்பட்டாராம் , கோயம்பத்தூரில் உள்ள மணி , தான் வாழ்நாள் முழுவதும் மலம் அள்ளி ஜூலை முப்பது 2017 இல் ஓய்வு பெற்றார் அவர் சொன்னது நான் செய்ததை இந்த பிறப்பில் ஏன் தலைமுறை செய்யக் கூடாது .
எனக்கு காந்தி சொன்னதைவிட மணி சொன்னதுதான் முக்கியம் .
உரைக்கு பின் பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்ட நண்பர்கள் எங்களால் என்ன உதவி செய்ய முடியும் என்று திரு வில்சன் உடன் ஆலோசித்தோம் , பண உதவி பெற்று சிலரை மீட்பதை விட இதில்ஒ ஈடுபட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களை மீட்க வேண்டும் என்று தீர்க்கமாய் சொன்னார் .
தன் அமைப்பு மூலம் அவர் திரட்டிய கோப்புகளில் உள்ள தகவல்களை கணினி மயமாக்கவும் , இந்த முறையை ஒழிப்பதற்கு தொழில் நுட்பம் தொடர்பான தகவல்களை பரிமாறுவதற்கும் அவரிடம் பேசி உள்ளோம் .
மிச்சிகனில் உள்ள சில நண்பர்களும் உதவி செய்வதாக இணைந்து உள்ளனர் . முதற் கட்டமாக எங்கள் மின்னஞ்சல்களை அவரிடம் பகிர்ந்து உள்ளோம் . ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்க வேண்டும் அல்லவா ?
நரகலின் கறை அழியாமல் படிந்திருக்கும் மனிதர்கள் நம்மை சுற்றி இருக்கும் சமூகத்தில் இருந்துகொண்டு , வல்லரசு என்றும் ,தூய்மை இந்தியா என்றும் எப்படி பெருமை பேச முடிகிறது ??? (இது so called 56 inch மனிதர்களுக்கும் பொருந்தும் ).
-பாவி
Good, I support
ReplyDeleteவாசித்தது டன் மனம் வேதனை பட்டது ஏதாவது நிச்சயம் செய்ய வேண்டும்.
ReplyDelete