Tuesday, September 19, 2017

பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம் -மிச்சிகனில் நடத்திய பெரியார் பேச்சுப் போட்டி - தோற்றமும் , நிறைவும் கட்டுரையாக .

 பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் பெரியாரின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு ,இளையோருக்கான பேச்சுப் போட்டியை  நடத்தினோம் , மிகச் சிறப்பாக நடை பெற்ற நிகழ்ச்சியின்  கட்டுரை.

பெரியாரின் கருத்துக்களை அடுத்த தலை முறைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்ற கேள்வி படிப்பு வட்டத்தின் கலந்துரையாடலில் அதிகமாக கேட்க்கப்பட்டது . அதனை பற்றி உரையாடும்தபோது  தோழர் நிர்மல் பேச்சுப் போட்டி என்ற   யோசனையை முன் வைத்தார் . இது நல்ல கருத்தாக பட செய்யலாம் என்று முடிவெடுத்தோம் ,  பின் மிச்சிகன் மாகாணத்தின் உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கேட்கலாம் என்று முதல் புள்ளி உருவானது .

இதற்கான முதல் கூட்டம் , நம்புங்கள் - மிச்சிகனில் உள்ள ஒரு  பூங்காவின்  மரத்தடியில்  அமர்ந்து   விவாதித்தோம் .  பரிசுப் பணம் , எப்படி நடத்துவது , சில தலைப்புகள் , என்னென்ன முன்னேற்பாடுகளை செய்வது என்று அந்த கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது .

ஆனால் அனைவர்க்கும் இருந்த கேள்வி பெரியாரைப் பற்றிய பேச்சுப் போட்டி என்றால் ,  யாரேனும் பேச வருவார்களா என்பதுதான்  .  மிகுந்த யோசனைக்கு பிறகு  யாரும் பேச வரவில்லை என்றால் எங்கள் குழந்தைகளை வாழ்க பெரியார் என்ற அளவிலாவது பேச செய்வது , ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் வந்தால் கூட வெற்றி தான்  , என்ன   நடந்தாலும் நடத்துவது என்று முடிவு செய்தோம் .

அரங்கம் வேறு பதிவு செய்ய வேண்டும் , சரி   ,அதனை தள்ளிப்    போட   முடியாதென்று  மிகுந்த மன  தைரியத்துடன்  50 பேர் அமரும் அளவு ஒரு அரங்கத்தை பதிவு செய்தோம் .

என்ன என்ன தலைப்புகள் கொடுக்கலாம் என்று படிப்பு வட்டத்தில் பல்வேறு மாகாணங்களில் உள்ள தோழர்களை கலந்தோசித்து ஒரு வழியாக தலைப்புகள் முடிவாயின .

இனி மார்க்கெட்டிங் எப்படி செய்வது என்று யோசித்தோம் -  தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் விளம்பரங்ககளை தயார் செய்து  , படிப்பிய வட்டத்தினர் வசிக்கும்  மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் , இந்தியன் மளிகை கடைகள் , உணவகங்கள் என்று ஒவ்வன்றிலும் பேசி அனுமதி வாங்கி விளம்பரங்களை ஒட்டினோம் , எங்கள் படிப்பு வட்டத்தினரில் குழந்தைகள் கூட ஆர்வமாக இதில் பங்கேற்றனர் .இது  எங்களுக்கும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது  .

அனைத்து இடங்களிலும் விளம்பரங்களை வைத்தாயிற்று . மிச்சிகன்  தமிழ் சங்கத்தை தொடர்புகொண்டு , சங்கத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் மின்-அஞ்சலும் அனுப்ப ஏற்பாடு செய்தோம் .

இத்தனை   செய்தும் முதல் இரண்டு வாரங்கள் கனத்த மவுனம் . நாங்கள் எங்களுக்குள் தொலைபேசியில் அழைத்து அழைப்பு வந்ததா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டோமே தவிர ஒரு அழைப்பும்   வரவில்லை.
காலியான இருக்கைகளை வைத்து பிரம்மாண்ட வெற்றி என சில கட்சிகளை  போல நடிக்கவும் தெரியாது .

என்ன செய்யலாம்  என்று இருக்கையில் , வந்தன அழைப்புகள் (தோழர் திருமலை ஞானம் நண்பர்களிடம் பேசி முதலில் பதிவு செய்ய வைத்தார் ) . கொஞ்சம் கொஞ்சமாக , அழைப்புகள் வர  22 குழந்தைகள் வரை பதிவு செய்தனர் .

அரங்கம் நிரம்புமா என்ற நிலை மாறி  , அரங்கம்  போதுமா?  என்ற நிலை வந்தது . சமாளிப்போம் என செப்டம்பர் 16 ம் தேதிக்கு காத்திருந்தோம் .

அன்றைய தினம் , நிற்பதற்கு இடம் இல்லை , அத்தனை கூட்டம்  80 கும் அதிகமானோர் வந்திருந்தனர் . மிச்சிகன் தமிழ் சங்கத்தினர் ஆதரவு அளித்து , நிகழ்ச்சி முடியும் வரை உடன் இருந்தனர் .

முதல் நிலை , இரண்டாம் நிலை என்று இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 20 குழந்தைகள் பெரியாரின் கருத்துக்களை சுற்றி சுற்றி பிரித்து மேய்ந்தார்கள் . இளங்கன்று பயமறியாது அல்லவா ? பெரியவர்களை பேச சொன்னால்  தயங்கி சில கருத்துக்களை சொல்லி இருக்க மாட்டார்கள் , ஆனால் குழந்தைகள் எந்த வித தயக்கமும் இல்லாமல் பொட்டில் அடித்தாற்போல பேச பேச அருகில் இருந்த எங்களுக்கு  மகிழ்ச்சி சிறுது சிறிதாக ஊற்றெடுத்து கரை புரண்டு ஓட ஆரம்பித்தது . எதற்காக ஆரம்பித்தோமோ அது சேரும் இடத்தில் சேர்ந்து விட்டதாகவே நினைக்கிறோம் .

மூன்று நடுவர்களை அழைத்திருந்தோம் , மதிப்பெண்களை அவர்கள் வழங்க சிறு குழந்தைகளுக்கான பிரிவில் , புள்ளி அடிப்படையில்   தான் வேறுபாடு  , அதனால் இரன்டு சிறப்பு பரிசுகளையும் சேர்த்தி கொடுத்தோம் .

தோழர் நிர்மல் வரவேற்பு உரை நிகழ்த்தினார் , தோழர் பிரேம்  தமிழக விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கவும் , நீட் தேர்வை மாநிலப்   பட்டியலுக்கு மாற்றவும் , கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதலை கண்டித்தும்  ,நவோதய பள்ளிகளின் மூலம்  நடக்கும்    இந்தி  திணிப்பை எதிர்த்தும் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினார் . தோழர் பிரபாகர்   நிகழ்ச்சி முழுவதும் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்தார்.  தோழர் திருமலை ஞானம்  பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் தொடங்குவதற்கான தேவையையும் , செயல்பாடுகளையும் விளக்கினார் . தோழர் அன்பு நிகழ்ச்சியை படம் பிடித்தார் .

 பின் நடுவர்களையும் , நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரையும் பெரியார் பற்றிய அவர்களின் பார்வையை பேச அழைத்தோம் , மிகவும் சுவாரசியமாக அவர்களின் பேச்சு இருந்தது . அவர்கள்   தொடர்ந்து சிறப்பாக செயல்பட பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டத்தினரை கேட்டுக்  கொண்டனர்   இந்த மாதிரி படிப்பு வட்டங்கள் இன்றைய சூழலில் அவசியம் என்றும் கூறினர் .  நடுவர்களில் ஒருவர் தன் சொந்த வாழ்க்கையில் பெரியார் ஏற்படுத்திய மாற்றங்களை  பகிர்ந்து கொண்ட போது நிறைய பேரின்  கண்கள்  குளமானது .  பெரியார் என்ற மனிதனை பின்பற்றுவதற்காக பெருமையாக உணர்ந்த தருணம் அது .  அவர் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை எழுத அவரிடம் அனுமதி கேட்டிருக்கிறேன் , அவர் அனுமதித்தால் எழுதுகிறேன் .

 இறுதியாக என் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது .

அனைவரும் குழந்தைகள் என்பதால்   பேசின அனைத்து   குழந்தைகளுக்கும்  பரிசும் , சான்றிதழும் , நினைவுப் பதக்கமும் கொடுத்தோம் . அவர்கள் வாழ்க்கையின் என்றேனும் ஒருநாள் , தானாக தேடி பெரியாரைப் படிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது . இப்பொது நாங்கள் தேடி படிக்கிறோமே அதைப் போல , பெரியாரின் கருத்துக்கள் ஒரு தலைமுறையுடன் முடிந்து விடுவதில்லை , இது தமிழர்களிடையே தலைமுறை தலைமுறையாக தொடரும்  ஏனெனில் அவரின் கருத்துகளுக்காக தேவை எல்லா காலங்களிலும் உள்ளது .

2 comments:

  1. தமிழரே பதிவு படித்து மகிழ்ச்சி.... முடிந்தால் படங்களை தனித்தனியாக சற்று பெரிய அளவில் போடவும்

    ReplyDelete

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...