"பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுபட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்  "
பாட்டுகளால்   பல்வேறு காலங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின்  பகிர்வு இது  .
விளையாட்டுகளின்  மேல் இருந்த அளவுக்கு  பாட்டின் மேல் ஒரு பிடிப்பில்லாமல்  இருந்த  காலம் , விடுமுறை நாட்களின் மாலை வேளைகளில் , தனக்கு பிடித்த பாடல்களை பாடி பகிர்ந்துகொள்ள , சிறு சிறு திண்ணை கூட்டங்கள் நடக்கும் பகுதி  எங்களுது .
"நான் வெண்மேகமாக
விடிவெள்ளியாக
வானத்தில் போரந்திருப்பேன்
என்ன அடையாளம் கண்டு
நீ தேடி வந்தா
அப்போது நான் சிரிப்பேன்"
என உணர்ச்சி கரமாக  பாடி , "கொன்னுட்டான் போ " என்று  விமர்சனம் செய்வார்கள் ,
 அப்போது பெரிதாக தெரிந்த விளையாட்டுடன்  இந்த பாடல்களை தொடர்புபடுத்தி பார்க்க  முடியாததும் , என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியாததாலும் பெரிதாக ஈர்க்கவில்லை  .
இப்படி இருக்கையில் , முதன் முதலில்  ஒரு பாட்டு அதில் உள்ள வார்த்தைகளுக்காக   கொஞ்சம் பிடித்தது , பெரிய இசையோ , சந்தமோ அதில் இல்லை  , அந்த பாட்டு
"தொட்டபெட்டா ரோட்டு  மேல முட்ட பரோட்டா , நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா "
இந்த பாட்டை என்னால்   தொடர்பு படுத்தி பார்க்க  முடிந்ததால் , கேட்டதில் இருந்து பரோட்டா , சிக்கனுடன் சாப்பிட வேண்டும் என்று ஆசை , தொட்டபெட்டா தூரம் என்பதால் , அருகில் இருந்த ஊத்துக்குளி ரோட்டில் போய் சாப்பிட்டுவிட்டு வந்தேன் , போகும்போதும், வரும்போதும் எனக்கு தெரிந்த  இந்த இரண்டு வரிகளை மட்டுமே பாடிக்கொண்டு இருந்தேன் .
பாட்டு.  நமக்கு புது அனுபவங்களை  கொடுக்கும் .
"பிரம்மனின் மணிமுடி எங்கே
பரமனின் திருவடி எங்கே
மந்திர தேடல் ஓ ஓ மந்திர வாசல் "
என்ற  மந்திரவாசல் பாட்டு ஆகட்டும் .
" கண்ணின் மணி , கண்ணின் மணி நிஜம் கேளம்மா
கங்கை நதி , வைகை நதி பெண் தானம்மா "
என்று தமிழ்நாடே  "சித்தி  " என்று அலறிய பாட்டாகட்டும் ,சினிமா  பாட்டுக்களை விட அப்போதெல்லாம்   தொலைக்காட்சி நாடகத்தின் பாட்டுகள்தான் பிரபலம் .
இப்படி இருக்கையில்  , என்னுடன் படிச்ச பசங்க திடுதிப்பென்று ஒரு பாட்டு புத்தகத்தை  வாங்கி உருக்கமாக பாடிக்கொண்டு இருந்தார்கள் , அந்த படம் உயிரே .
என் நண்பன் ஒரு முறை அந்த  பாட்டை கேட்டுருப்பதாகவும் , வா நாமும் பார்த்து பாடலாம் என்று கூப்பிட்டான்  , அந்த புத்தகத்தை  எடுத்து நான் இப்படி படித்தேன்
 த   க
தையா
தையா
தையா
 தையா
என் நண்பன் உடனே ,"டேய் ,மச்சான் வேகமா பாடணும் டா , நீ மெதுவா பாடுற "  என்றான்
"ஓ சரி இப்ப பாரு "
 "தக ,  தை தை , தை  தை  , தையா  "
இப்போது அவனுக்கும் பாட்டு மறந்து விட சரி நல்ல பாட்டு இல்லையாட்ட இருக்கிறது என்று  விட்டுவிட்டோம் .
பாட்டு.  நமக்கு புது அனுபவங்களை  கொடுக்கும், பாட்டு நம்மை படிக்கவும் வைக்கும் ,
பின்  நான்கு நாட்கள் வந்த ஒரு விடுமுறையில் , ஊருக்கு போய் விழாவை சிறப்பித்து வந்து பார்த்தால் , நான் படித்த  நஞ்சப்பா   ஆண்கள் மேல்நிலைப்  பள்ளியில் அவனவன்  விட்டத்தை பார்த்து  ஏதோ பாடிக்கொண்டுஇருந்தார்கள் .  என்னவென்று தெரியவில்லை என்றல் தலை வெடித்து  விடும் என்பதால்
அருகில்  விட்டது பார்த்து கொண்டு இருந்தவிடம் " என்ன பாட்டுடா"  என்று கேட்டேன் , அவகாசம் கூட கொடுக்காமல்
" வசீகரா ரா ரா ரா ரா  என்  "நெஞ்சினிக்க்க்க்க்க்க "
உன் " பொன் மடியில்ல்ல்ல்ல்ல் "   "தூ ஊ ஊ ஊ ஊ  ங்கினால் "    "போ  ஓ ஓ ஓ தும் "
என்று அவன் பாட  ,ஏதோ கொடூரமான பாட்டா இருக்கும் போல என்று  நடுங்கிப் போனேன் .
பாட்டு.  நமக்கு புது அனுபவங்களை  கொடுத்து ...... படிக்க வைத்து ...... பயப்படவும்  வைக்கும் ,
அதன் பின் கல்லூரி நாட்கள் , ரேடியோ அப்படியே அழிந்து விடும் அன்று  நினைத்துக்கொண்டிருக்கையில் , புயலென வந்து , இளையராஜா பாட்டுக்களை  மறுபடியும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது சூரியன் FM  .  
விடிய விடிய , ரம்மி விளையாட்டும் , இளையராஜா பாட்டுமாக  கழிந்த பொழுதுகள்  , காலை பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் , சின்னத்தம்பி  , பெரியதம்பி  நிகழ்ச்சிதான் அப்போதெல்லாம் அலாரம் .
அப்படி இருந்த  ஒரு நாளின், ஒரு  இரவு வேளை , தனிமையில்  கேட்ட பாட்டு  ,
"துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது  பூங்கொடியே பூங்கொடியே "
வைத்திருந்த  அரியர்கள் எல்லாம்  நினைவு வர ,  வாழ்க்கையை பற்றி சிந்திக்க வைத்த பாட்டு இது .
பாட்டு....... நமக்கு புது அனுபவங்களை  கொடுத்து........ படிக்க வைத்து ....... பயப்பட வைத்து  ..........நிதர்சனத்தையும்  உணர்த்தும் .
பின் பெங்களூரு  வேலை நாட்கள் , என்னை போலவே , இளையராஜா பாட்டு பிடித்த தெலுங்கு பேசும் நண்பனுடன் , மொழி தாண்டி இசைக்காக பாட்டுக்களை  கேட்க ஆரம்பித்த நேரம்  . இளையராஜா பாடல்களை  தமிழில் தான் முதலில் போடுவார் , அதற்கு பிறகுதான்   தான் உங்களுக்கு தெலுங்கில் வரும் என்ற சண்டை எல்லாம் நடக்கும் .
இப்படி இருக்கையில்  , இந்தியில் முதன் முதலில் ஒரு இளையராஜா  பாட்டு நாங்கள் இரண்டு பேரும் கேட்கிறோம்   , வார்த்தை புரியாவிட்டாலும் , இசை  மிகவும்  பிடிக்க , இது தமிழில் , தெலுங்கில் இருக்கணுமே நாம் கேட்டதே  இல்லையே  என்று தோணியது  , அடுத்த நாள் காலை ஆபிஸ்ல வேலையே ஓட மாட்டேங்குது
அது எப்படி தமிழில் , தெலுங்கில் இல்லாமல்  இந்திக்கு போயிருக்கும் என்று  குழப்பம் .  வெறிகொண்டு தேடுறோம் கிடைக்க மாட்டேங்குது ,
இசை இப்படி வருது
"லா லா லா
லா லால ல ல ல ல
லா லா லா
லா . ல ல ல "
வார்த்தை தெரியாது , இதை யூடூப்பில போட்டு தேடவா முடியும் ?
 என் நண்பன்  வனுக்கு தெரிந்தவர் களுக்குகெல்லாம்  பேசி தெலுங்கில்  கண்டுபிடித்து விட்டான்
"ஆகாசம்   , ஏ- நாட்டிடோ .. அநுராகம்  ஆணாதிடி  " - இது தெலுங்கு
அவன் கண்டு பிடித்த மகிழ்ச்சியில் குதிக்க , பக்கத்தில் இருந்த , கேரளா நண்பர்  என்ன பாட்டு டா   என்று  கேட்டார்   , நாங்கள் லா லா  பாடியதும் 40 வயதுகளில் இருந்த அவர்  கண்டுபிடித்து விட்டார்
 "தும்பி வா,  தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்  "  - இது மலையாளம்
தமிழின் நிலைமை தான் பரிதாபம் ஆகிவிட்டது , யார்கிட்ட கேட்டும் தெரியலை
ஓசூரில் , கச்சேரியில் பாட்டு படும் ஒருத்தர் வீடு பக்கத்தில் இருக்கார்னு , ஒரு நண்பர் சொல்ல , நானும் என் தெலுங்கு நண்பனும் அவனுடைய காரில்  , பெங்களூர் எலக்ட்ரானிக்  சிட்டில இருந்து மாலை    ஓசூருக்கு கிளம்பிட்டோம் .மானப்   பிரச்னையாச்சே விட முடியுமா ??
அவர்கிட்ட போய் பாடி காட்டினா ,  " கேட்ட மாதிரி தான் இருக்கு சரியாய் தெரியலை  , நான்  "மைக் மோகன் " பாட்டுதான் நிறைய பாடுவேன் ,
சேலத்தில இளையராஜா பாட்டு மட்டுமே பாடுற மியூசிக் ட்ரூப் இருக்கு , அட்ரஸ் தரேன் போன் நம்பர் எல்லாம் இல்லை போய் பாருங்க  என்றார்
அங்கிருந்து  அப்படியே சேலம் , அவர் சொன்ன இடத்துக்கு  போனா நாமக்கல் பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்தில கச்சேரிக்கு போயிருக்காங்கனு சொல்றாங்க ,
அங்கிருந்து நாமக்கல் - போறப்ப கச்சேரி நடந்துட்டு இருக்கு , நள்ளிரவு தாண்டி முடியுது , ட்ரூப் கு ஒரு குடோன் தூங்க கொடுத்திருந்தார்கள் , அங்கே போய்ட்டோம்
ஒரு பாட்ட தேடி வந்திருக்கோம் னு சொன்னதும் அவங்களுக்கு அவ்வளவு உற்சாகம் ,  எங்கே பாடு , தமிழில் இருந்தா நிச்சயமா கண்டு பிடிச்சிடலாம்
"லா லா லா
லா லால ல ல ல ல
லா லா லா
லா . ல ல ல "
உடனே பக்கத்தில இருந்தவர்
"தம் தம் தம்
தம் தம் தம்த தன நன
தம் தம் தம்
தம் தம் தன "
என்றதும்  நங்கள் தேடி போனவர் படுறார்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
லா லா  லலலல  லலலல  லலலல  லலலல லா லா  லலலல  லலலலா
சந்தத்தில் மாறாத நடையோடு
என் முன்னே யார் வந்தது
லலலல  லலலல  லலலல  லலலல  லலலல  லலலல  லலலல லா
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
எனக்கும் , என் நண்பனுக்கும் ஆனந்த கணீர் வரும் நிலையில் , எங்களுக்கே எங்களுக்கான ஒரு சிறிய இசை கச்சேரி அன்று இரவு நடந்தது .
பாட்டு....... நமக்கு புது அனுபவங்களை  கொடுத்து........ படிக்க வைத்து ....... பயப்பட வைத்து  ..........நிதர்சனத்தையும்  உணர்த்தி , மொழி தாண்டிய  நட்புகளையும் , பயணங்களையும் , எளிய மனிதர்களின் அறிமுகங்களையும்  கொடுக்கும்  .
இது மட்டுமா தரும்  ????
"ஏதோ ………… ஒரு பாட்டு ………நம்  காதில் கேட்கும்  , கேட்கும் பொழுதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும் "
நான்கு மொழிகளிலும் உள்ள அந்த இளையராஜா பாட்டின்  youtube links
https://www.youtube.com/watch?v=ESQJh7dFmc8    - Hindi
https://www.youtube.com/watch?v=xAl7_PiZV9I    - Malayalam
https://www.youtube.com/watch?v=NiUIXXAfZOY    - Telugu
https://www.youtube.com/watch?v=X_vTebE4fFY   - Tamil