Tuesday, July 4, 2017

தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ ? -Fetna 2017 கவியரங்கத்துக்கு தேர்வான கவிதை !!!



ஐம்பெரும் காப்பியங்கள் பெற்று
சீரான இலக்கணங்கள் கொண்டு
இயல் இசை நாடகமாய்
உச்சம் தொட்டு
வாழ்வியலை அகம் புறம்
எனப் பிரித்து
பொதுமறை தன்னை வழங்கி
எண்ணிலடங்கா
செறிவான  ஆன்றோர்
இயற்றிய தரமான நூல்கள்
கொண்டு ஆர்ப்பரித்த
நம்மொழி  சற்றே  அயர்ந்துள்ளது !!

கவலை வேண்டாம் !
காலம் கடந்து விடவில்லை
தமிழை நம் தலைமுறை
முற்றிலும் தொலைத்து விடவில்லை
பேச்சுத் தமிழ்
மறைந்து விடவில்லை
தமிழும் சடைந்து விடவில்லை
தமிழரும் தன் மொழியை
விட்டு விடவில்லை !!!

கடந்த காலங்களில்
தமிழர்தம் கிறுக்கல்களை
கையேட்டில் எழுதி வைப்பர்
பின்
பெட்டகத்தில் பூட்டி வைப்பர்
நினைவுப் பயணம்
முன்னும் பின்னும்
அலையாட அவை
வாழ்க்கை   ஓட்டத்தில்
மறைந்து போகும்
அல்லது
மறந்து போகும் !!!

இன்றைய தமிழின்
களம் வேறு !!!
காகிதத்தில் இருந்து
கணினிக்கு வந்து
ஆகிவிட்டது
ஆண்டுகள் பல !!!
இனி
கணினி
இருக்கும் வரை
தமிழ்  இருக்கும் !!!

இணையத்தில்
முன் எப்போதும்
 இல்லா வண்ணம்
எழுதிக் குவிக்கின்றனர்
எனினும்
தலைப்புக்கள் போதவில்லை
அதன் கருத்துக்கள்
தலைக்குள்ளும் போகவில்லை !!
இது
தமிழின் பயணத்தில்
மற்றுமொரு இளைப்பாறல்
அவ்வளவே !!!
தமிழரும் -
தமிழை உறங்கப் போடவில்லை
உறைக்குப் போட்டிருக்கிறார்கள்
கெட்டுவிடாது!!
 தமிழ்
நம்மைச்  சற்றும் விடாது !!!

கிறுக்கல்கள் ஓவியமாகும்
அவை வரும்காலத்தில்
தமிழர்க்கு நவீன
காவியமாகும்     !!!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
தன்னை தானே புதுப்பித்துக்கொண்டு
நிலை கொண்டிருக்கும்
நிகரில்லாத நம் மொழி
தலைமுறைக்கு  தலைமுறை
தமிழர்களை ஈர்த்துக்கொள்ளும்
அவர்களுக்கு
மொழி வசப்படுமோ என அறியேன்
ஆனால் மொழிக்கு வசப்படுவர்!!!
ஆரம்பமும் முடிவும் இல்லாத
முடிவிலி இது !!
                                                                                         -  பாவி 

No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...