Friday, April 12, 2019

டெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடம்

டெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடம்





பறை தமிழர்களின் ஆதி இசை .  அனைத்து காலங்களிலும் இது மக்களுக்கான  இசையாக மட்டுமே இருந்துள்ளது .   திணை வாரியாக தமிழர் வாழ்ந்த சங்க காலத்தில் இருந்தே தமிழரின் தனி அடையாளம் பறை . ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளாக ஒவ்வொரு பறையை கூறுகிறது   தொல்காப்பியம் .  

முல்லை - ஏறுகோட்பறை 
குறிஞ்சி - தொண்டகப்பறை
மருதம் - மணமுழவுப் பறை  ,நெல்லரிப்பறை
நெய்தல் - நாவாய்ப்பறை 
பாலை - எறிப்பறை , ஆறலைப்பறை

இது மட்டுமில்லாமல் அரிப்பறை , உவகைப்பறை ,  கொடு கட்டி , குரவைப் பறை என   60 க்கும்  மேலான பறை வகைகள் நம்மிடையே  இருந்துள்ளன.  

பறை இல்லை என்றால் அது ஊரே இல்லை என்கிறது இந்த புறநானூற்று பாடல் 

"துடியன் , பாணன் , பறையன்
கடம்பன் என்று இந்நான்கல்லது
குடியும் இல்லை "

இந்த பாடல் வாசிப்பவரை குறிக்கிறது , சாதியை குறிக்கவில்லை . ஆதித்தமிழர் வாழ்வியலில்  போர் , விலங்கு , உழவு , விதைப்பு , அறுப்பு , இறப்பு , கூத்து , விழா , வழிபாடு , அரசுச் செய்தி என  எதை அறிவிக்கவும் பறை தான் .   

பறை எவ்வளவு தூரம் வாழ்க்கையோடு  பிணைந்திருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள சங்க பாடல்களில் எண்ணற்ற குறிப்புகள் இருக்கின்றன 

ஆண் யானையின் காலடிப் பாதத்தைப் போல்  வட்டவடிமாக  பறை உள்ளதாக கூறுகிறது இந்த அகநானூற்றுப்  பாடல் 

 "மராஅம்
பறைகண் டன்ன பாவடி நோன்தாள்” (அகநா. 211: 2-3 ) " 

பறை என்றாலே  வன்மை தானா ? மென்மையும் இருக்கிறது என்கிறது இந்த மதுரைக்காஞ்சி பாடல் 

"முழவொடு  ஒன்றி 
நுண்நீர் ஆகுளி  இரட்ட "

சூலுற்ற மகளிர் வீட்டில் வழிபடும்போது போடு மென்மையான இயல்புடைய "ஆகுளி " என்ற சிறு பறையை ஒலித்தனர் . 

இதுமட்டும் இல்லை , கிளி விரட்ட ஒரு பறை , களையெடுக்க ஒரு பறை , கதிர் அறுக்க ஒரு பறை ,வெள்ள நீர் வருவதை தெரிவிக்க , வெற்றியை அறிவிக்க  , மணவிழாவை கொண்டாட     என வகை வகையாக பறை வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் நீக்கமற நிறைந்து இருந்திருக்கிறது .

கலைஞன் என்ன உணர்வை வெளிப்படுத்த விரும்புகிறானோ அந்த உணர்வை வெளியிடவல்லது பறை. அதுமட்டுமல்ல; பறை இசையைக் கேட்கிறபோது என்ன உணர்விலிருக்கிறோமோ அந்த உணர்வை மிகுவிக்க வல்லதாகவும் பறையிசை திகழ்கிறது. அதுபோல், நின் நெஞ்சம் விரும்பியதே கனவாகக் காண்கிறாய்” என்று தலைவன் தன் நெஞ்சிற்குச்  சொல்லியதாக பறையின் முக்கியதுவத்தை அருமையாக விளக்கும்  கலித்தொகை   பாடல் ஒன்று 

“ஓர்த்தது இசைக்கும் பறைபோல் நின்நெஞ்சத்து
வேட்டதே கண்டாய், கனா” (கலித். 92 : 21-22)


இத்தனை சிறப்பு பெற்ற பறை மெல்ல மெல்ல சாவுக்கு என்று மட்டுமே என மாறி , வெறும்  சாதிய அடையாளமாய் சுருங்கி ,  பறை அடிக்கும் கலைஞர்கள்  வீட்டுற்குள்  வருவதும் தீட்டு என ஆனது .

யார் இசையை யார் விலக்கி வைப்பது ?. கலைக்கு மரணம் எங்குள்ளது ?  நமது நினைவு அடுக்குகளில்  பதிந்துள்ள ஆதித்தாளம் , மறக்குமா நமக்கு ?  அடக்குமுறையை சந்தித்த பறை இசை , புரட்சிக்கு அடையாளமாய் துளிர்த்தெழுந்தது . புரட்சிக் கவிஞர்  பாரதிதாசனின் பாடல் வரிகளைப் போல 

"இன்னும் செல்லாது பிறர் செய்யும் சூழ்ச்சிகள்
என்று சொல்லி புயம் தட்டு –அட 
யானையின் மேல் வள்ளுவா சென்று நீ பறை 
கொட்டு கொட்டு கொட்டு. "

தமிழகத்திலும் , இலங்கையிலும் , ஆந்திராவிலும் ,  விழிப்புணர்வு ஏற்படுத்த  ஒலிக்க ஆரம்பித்த பறை , மெல்ல மெல்ல கடல் தாண்டி ,பறை இசைப்பது என்பது இயக்கமாக உருவெடுத்தது . அமெரிக்காவில்  2014 ஆண்டு பெட்னாவில் மேடை அதிர ஒலித்த பறை , 2016  பெட்னா விழா மேடையின்  விழா ஆரம்பிப்பதற்கான தொடக்க இசையானது .  

இப்படி எட்டுத்திக்கிலும் பறை இசை ஒலிக்க ஆரம்பித்த நேரத்தில்தான் தோழர் பிரபாகர் , மிச்சிகனில் பறை பயிற்சியை ஆரம்பிக்கலாமா என்று தொடர்பு கொண்டார் . அந்த அழைப்பிலேயே யார் யாரை கூப்பிடலாம் என்று ஒரு பட்டியல் தயார் செய்தோம் .விருப்பமுள்ளவர்களை தொடர்பு கொண்டு குழுவில் சேர்க்க  மிச்சிகனில் பிறந்தது "டெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடம் ".  
பறையை எப்படி வாங்குவது , இங்கே எப்படி வரவழைப்பது , எப்படி கற்றுக் கொள்ளவது ,  என ஏகப்பட்ட எப்படிகள் எங்கள் முன் இருந்தன . அவற்றுக்கு எல்லாம்  குழுவில் இருந்தவர்கள் அவர்களுக்கு தெரிந்த  நண்பர்கள் மூலம் தகவல்களை  திரட்ட ,  குழு முயற்சியின் பயனாக   ,மிசிகனுக்கு  வந்து சேர்ந்தன  பறைகள் .

பறை வாங்கியிற்று , எப்படி கற்றுக்கொள்வது என்பதற்கு , விடை கிடைத்தபாடில்லை ,தெரியுதோ , தெரியலையோ பறையை அடித்து பார்க்க வேண்டும் என்று , ஒரு பார்க்கில் கூடினோம் , எப்படி அடித்தாலும் பறை சத்தம் மட்டும் வரவே இல்லை , எப்படி குச்சிகளை பிடிப்பது  என்று கூட தெரியவில்லை .  

கோவையை  சேர்ந்த பறை இசை பயிற்றுனர் சக்தி அவர்கள் , அப்பொழுது அமெரிக்கா சுற்றுப் பயணத்தில் இருந்தார் , அவரைத்  தொடர்பு கொண்டோம் , ஆனால் அவர் இங்கு வருவதற்கோ, நாங்கள் அங்கு போவதற்கோ நேரம் ஒத்துழைக்கவில்லை . என்ன வழி என்று இருக்கையில் , சக்தி அவர்கள் அடிக்கடி சொல்வது போல , பறை பயிற்சி வகுப்புகளின் புதிய வரலாறாக , skype மூலம் மட்டுமே பறை கற்றுக்கொள்வது என்று முடிவானது . இது புதிய முயற்சி , இதுவரை பயிற்றுனர் கூட இருந்து கற்றுத்தருவதுதான் வழக்கம் .

சாவுக்கோ , சாதிக்கோ , சாமிக்கோ பறை அடிப்பதில்லை என்ற உறுதிமொழியுடன் skype  மூலம் வகுப்புகள் தொடங்கின .

புரிபட நேரம் எடுக்கும் என்ற எண்ணத்தில்தான் அடிக்க ஆரம்பித்தோம் , அடிக்க அடிக்க எங்களுக்குள் உற்சாகம் தொற்றிக்கொண்டது .    இதுவரை கற்றுக்கொள்ளாத இசை , பயிற்றுனர் சக்தி கோவையில் இருந்து கற்றுத்தருகிறார் , இந்த முறை  அவருக்கும் , குழுவிற்கும் புதிது , ஆர்வம்  இணைப்புப்  பாலமாய் இருந்து தூரங்களை குறைக்க , மேடை நிகழ்த்துதலை நடத்திக்காட்ட வேண்டும் என்ற உந்துதலில்   வாரம் மூன்று வகுப்புகளில் கூடி , ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று முதல் நான்கு மணி நேரங்கள் பயிற்சி செய்ய ஆரம்பித்தோம் . 

இதன் விளைவாக பறைக்குழு என்பது , நண்பர்கள் குழுவாய் மாறிப் போனது .

குழுவாய் கற்றுக்கொண்டது மட்டும் இல்லாமல் , skype பயிற்சி மட்டும் கொண்டு , பொங்கல் மேடையிலும் பறை இசை நிகழ்ச்சி நடத்தி விட்டோம் .  இப்படி கற்றுக்கொண்டு மேடை நிகழ்ச்சி நடத்திய முதல் குழு நமது "டெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடம்" . இதற்கு மிச்சிகன் வாழ் தமிழ் மக்களிடம் இருந்து அபரிதமான வரவேற்பு .  நிகழ்ச்சி முடிந்து இறங்கியதும் , தொடர்ந்து மக்கள் தங்களது , பாராட்டுகளை , பறை இசை கேட்டபோது தாங்கள் அனுபவித்த உணர்வுகளை வெவ்வேறு  வார்த்தைகளில் பறைக் குழுவில் இருந்த ஒவ்வொருவரிடமும்  தெரிவித்த வண்ணம் இருந்தனர் .

குறிப்பாக குழந்தைகள் பறையை மிகவும் ஆர்வமாய் வாங்கி அடித்துப் பார்த்தார்கள் . அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி . ஆதி இசை அல்லவா ? கேட்டதும்  அவர்களுக்கு  உற்சாகம் பிறக்கிறது  தன்னாலே கால்கள்  தாளமிடுகின்றன.பறையின் அதிர்வில் மகிழாத தமிழர்  எங்கு உள்ளனர் ?  

எங்களுக்கு மிக சிரத்தை  எடுத்து கற்றுக்கொடுத்த பயிற்றுனர் சக்தி இல்லாமல் இது சாத்தியமில்லை . தோழர் சக்தி அவர்களுக்கு "தோழரே , இராவணன் இசை அசுர பலம் கூட்டி ,தொடர்ந்து பயணிக்கட்டும் "

 பறை பயிற்சி தொடர்ந்து செல்வதில் ,அம்பிகா -ஆனந்த் , செல்வா -  கிருஷ்ணவேணி  , புகழ் - நர்மதா  குடும்பங்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது , பறை அடிக்க இடமும் கொடுத்து , அனைத்து வகுப்புகளிலும் சாப்பாடும் கொடுத்து மிச்சிகனில் பறை இசை தொடர்ந்து ஒலிக்க காரணமாய் இருப்பவர்கள் இவர்கள்தான் .  அடுத்த படியாக ஒருங்கிணைப்பாளர் பிரபாகரின் பங்கு . பயிற்சியாளர் சக்தியின்  நேரத்தை வாங்குவது , மீண்டும் மீண்டும் தவறாமல் நினைவுப்படுத்துவது  என்று தொடர்ந்து செயல்படுகிறார் .

இந்த பயணத்தின் அடுத்த கட்டமாக டிராய் நகரில்   இன்னொரு குழு ஆரம்பிக்கப்பட்டு  பயிற்சியும் தொடங்கி விட்டது . Farmington Hills இல் இன்னொரு குழு ஆரம்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது ,


பரவட்டும் பறை இசை !!!     எங்களின் பறைமுழக்கத்தோடு  பறை முழக்கதோடு 

"ஓங்கி ஒலிக்கட்டும் உழைக்கும் மக்களின் விடுதைலைக்காக
எங்கள் பறை முழக்கம் சாவுக்கானதல்ல மக்களின் வாழ்வுக்கானது
பெண்விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை
சாதிதான் சமூகம் என்றால்  வீசும் காற்றில்  விஷம் பரவட்டும்
மனிதம் மறந்து, உயிரை எரிக்கும் , சாதி வன்கொடுமை ஒழியட்டும் !! 
வாழ்க மனிதநேயம்!! வளர்க சமுதாயம்!! முழங்கட்டும் எங்கள் பறை முழக்கம்!!!"

                                                                                                                                               -வினோத்சந்தர் 

No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...