Monday, January 28, 2019

இடஒதுக்கீட்டு உரிமை – நூல் ஆதி அசுரன் -காட்டாறு

இடஒதுக்கீட்டு உரிமை – நூல் ஆதி அசுரன் -காட்டாறு

இடஒதுக்கீட்டு உரிமை – நூல் ஆதி அசுரன் -காட்டாறு
இட ஒதுக்கீட்டின் வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது , இதனை பற்றிய புரிதல்கள் என்ன , எவ்வாறு இது தவறாக பரப்பப்படுகிறது , ஏன் ஜாதி வாரியான இட ஒதுக்கீடு ? பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு எதனால் கூடாது ?

இட ஒதுக்கீட்டினை பற்றிய தவறான புரிதல்களுக்கான விளக்கங்கள் , வறுமை ஒழிப்பு திட்டத்திற்கும் ,இட ஒதுக்கீட்டுக்கும் உள்ள வேறுபாடு ,இட ஒதுக்கீட்டால் கிடைத்த பயன்கள் , இனியும் அது ஏன் தேவை என்பதற்கான புள்ளி விவரங்கள் , முன்னேறிய நாடுகளில் உள்ள இட ஒதுக்கீடு திட்டங்கள் , தனியார் துறையில் இட ஒதுக்கீட்டின் அவசியம் 

ஆகியவற்றை கோர்வையான கேள்வி பதில்களின் தொகுப்பாக விளக்கிச் செல்கிறது இந்த நூல் . " , இட ஒதுக்கீட்டில் படித்து வந்த பிறகு ,அதற்கு எதிராகவும் ,பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஆதரித்தும் வரும் மெத்தப் படித்த மேதாவிகள் பெருகி வரும் காலத்தில் , மிகவும் தேவையான "காட்டாறு " அமைப்பின் நல்ல முயற்சி இந்த தொகுப்பு . ஆதி அசுரன் அவர்கள் இதனை தொகுத்துள்ளார் 

இந்த நூலில் இருந்து சில கேள்வி பதில்கள்


இட ஒதுக்கீடு என்றால் என்ன?

பல ஆயிரம் வருடங்களாக நாம் பிறந்த ஜாதியின் அடிப்படையில் நமக்குக் கல்வி மறுக்கப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சி நடத்திய அனைத்து மன்னர்களும் “சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே” என்ற மனுசாஸ்திர- இந்து மதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டே ஆண்டனர். அதன் விளைவாக நாட்டின் பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்டனர், தாழ்த்தப்பட்டனர். கல்வி மட்டுமல்ல அரசுகளில் அதிகாரப் பதவிகளும் மறுக்கப்பட்டன. 
ஜாதியின் காரணமாக மறுக்கப்பட்ட கல்வியையும் வேலைவாய்ப்பையும் அதே ஜாதியின் அடிப்படையில் - உரிமை பறிக்கப்பட்ட மக்களுக்குத் திரும்ப வழங்குவதே இடஒதுக்கீடு ஆகும்.
வகுப்புவாரி உரிமை என்றால் என்ன?
ஒவ்வொரு ஜாதியினரும் மொத்த மக்கள் தொகையில் அவரவர்கள் வகிக்கும் சதவிகிதத்திற்குத் தக்கவாறு கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, பிரதிநிதித்துவம் போன்றவற்றில் இடங்களை ஒதுக்கி மக்கள் தொகை சதவிகிதப்படி வாய்ப்பு பெறும் உரிமைக்குப் பெயர்தான் வகுப்புவாரி உரிமை. தற்போது இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இருப்பது இடஒதுக்கீட்டு உரிமை தான். வகுப்புவாரி உரிமை என்ற அளவில் அல்ல.

தனியார் நிறுவனங்கள் அவர்களே முதலீடு போட்டுத் தொழில் நடத்தும் போது அவர்களிடம் இடஒதுக்கீடு கேட்பது நியாயமா?

இது தவறான பார்வை. அனைத்துத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களுடைய சொந்த முதலீட்டை மட்டும் முதலாகப் போட்டுத் தொழில் தொடங்குவதில்லை. இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களிடம் கோடிக்கணக்கில் பங்குகளை வெளியிட்டு, பங்குத்தொகை வாங்கித்தான் தொழில் தொடங்கு கின்றன. 
அதுமட்டுமல்லாமல் அரசிடம் இருந்து ( ளுநுஷ் ) சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் அடிமாட்டு விலைக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், கோடிக்கணக்கில் ஏற்றுமதி, இறக்குமதி வரிச்சலுகைகளையும், வருமானவரிச் சலுகை களையும், மின்சாரம், குடிநீர் கட்டணச் சலுகைகளையும் பெற்றுத்தான் தொழில் தொடங்குகின்றன. 
நமது பங்கு முதலீடுகளாலும், நமது வரிப்பணத்தைப் பெறும் அரசினுடைய பெரும் பங்கிலும் தான் தொழில்கள் தொடங்கப்படுகின்றன. எனவே நாம் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு கோருவது எவ்வகையிலும் தவறல்ல. 


பள்ளிகளிலேயே ஜாதிச்சான்றிதழ் கேட்பதால் ஜாதிஉணர்வு வளர்கிறதே?

நாம் பிறக்கும் இடமே குடியான தெரு, பறத்தெரு, பள்ளத்தெரு என்று பிரிந்து கிடக்கிறது. நாம் வாழும் இடம் அக்ரஹாரம், ஊர், சேரி, காலனி எனப் பிரிந்து கிடக்கிறது. ஒரு மாணவனின் முகவரியைக் கேட்ட உடனேயே அவனது ஜாதியைப் புரிந்து கொள்ள முடியும். இங்கெல்லாம் ஜாதிச் சான்றிதழ் பார்த்தா நமக்கு இடம் ஒதுக்குகிறார்கள்? நமது பிறவியே நம்மை அங்கு பிறக்க வைத்து விடுகிறது.
இன்னும் கிராமங்களில், டீக்கடைகளில் பிற்படுத்தப் பட்டவர்களுக்குக் கண்ணாடி டம்ளரிலும், தாழ்த்தப்பட்டவர் களுக்கு ப்ளாஸ்டிக் கப்களிலும் காபி, டீ கொடுக்கும் முறை இருக்கிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி பெஞ்சுகள் இருக்கின்றன. டீக்கடைகளில் ஜாதிச்சான்றிதழைப் பார்த்தா டீ, காபி விற்கிறார்கள்? ஆளைப் பார்த்த உடனேயே ஜாதிக்கேற்பப் பிரித்து விடுகிறார்கள்.
“பள்ளிகளில் ஜாதிச்சான்றிதழ் கேட்பதால்தான் ஜாதி வளர்கிறது” என்று சொல்பவர்கள் அனைவரும் திருமணம் என்று வரும்போது ஜாதக நோட்டைத் தூக்கிக்கொண்டு தன் ஜாதித் தரகர்களிடம்தானே செல்கிறார்கள்? தன் ஜாதி மேட்ரிமோனி யலில்தானே துணை தேவை என விளம்பரம் கொடுக்கிறார்கள்? இந்த மஞ்சப்பை தரகர்களோ, ஆன்லைன் தரகர்களோ ஜாதிச்சான்றிதழ் பார்த்தா பதிவு செய்கிறார்கள்?
நாம் செத்து சுடுகாடு போகும்போதும், சுடுகாட்டில் பிற்படுத்தப்பட்டவர் சுடுகாடு, ஆதிராவிடர் சுடுகாடு என தனித் தனி சுடுகாடுகள் இன்றும் இருக்கின்றன. சுடுகாடுகளில் ஜாதிச்சான்றிதழைப் பார்த்தா நம் பிணத்தை அனுமதிக்கிறார்கள்?
இப்படி நம் பிறப்பிலிருந்து இறப்புவரை எல்லா இடங்களிலும் சான்றிதழ் பார்க்காமலேயே, கேட்காமலேயே ஜாதி இழிவு நம்மீது திணிக்கப்படுகிறது. ஒரு வேளை பள்ளிகளில் ஜாதிச் சான்றிதழ் கேட்கும் முறை வராமல் இருந்திருந்தாலும்கூட மேற்கண்ட ஜாதி - தீண்டாமைக் கொடுமைகள் இப்படியேதானே இருந்திருக்கும்? 

இந்த நூல் முழுவதும் PASC America இணையதளத்தில் இலவசமாக படிக்க கிடைக்கிறது
https://pascamerica.org/representation_qa_kaataatru/ 

No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...