Monday, January 28, 2019

ஜனவரி மாத தி காமன் சென்ஸ் இதழுக்கு எழுதிய ஆசிரியர் தலையங்கம்

ஜனவரி மாத தி காமன் சென்ஸ் இதழுக்கு எழுதிய ஆசிரியர் தலையங்கம்

ஜனவரி மாத  தி காமன்  சென்ஸ்  இதழுக்கு  எழுதிய ஆசிரியர் தலையங்கம்
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா அமைப்பின் “The Common Sense” மாத இதழின் வாசகர்களுக்கு அன்பு வணக்கம். அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கருத்துக்களை அமெரிக்கா வாழ் தமிழர்களிடம் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கும், அமைப்பின் சார்பாக வெளிவரும் இந்த மாத இதழுக்கும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி ! 


போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்கும் நடுவண் அரசு , எந்த வித போராட்டமும் இல்லாமல் அவசர அவசரமாக முன்னேறிய சாதியனருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றியிருக்கிறது .ஆண்டுக்கு எட்டு லட்சம் வருமானம் , ஐந்து ஏக்கர் நிலம் , ஆயிரம் சதுர அடியில் வீடு வைத்திருந்து உயர் சாதியில் பிறந்தால் ஏழை ஆனால் கிராமப்புறங்களில் நாள் ஒன்றுக்கு 27 ரூபாய்க்கு அதிகமாகவும் , நகர்ப்புறங்களில் 33 ரூபாய்க்கு அதிகமாகவும் சம்பாதித்தால் நீங்கள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர் என்ன செய்ய இவர்கள் கணக்கீடுப்பபடி இவர்கள் எல்லாம் உயர்ஜாதியில் பிறக்கவில்லை. 

ரேஷன் அரிசி வாங்குவதற்கு வழியில்லாமல் இருப்பவர்களை அப்படியே விட்டு விட்டு , ஒரு கிலோ நெய் வாங்குவதற்கு சிரமப்படும் ஏழைகளுக்கான கரிசனம் இந்தச் சட்டம் இதற்கு பாகுபாடில்லாமல் அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர் . தமிழகத்தில் திமுக வும் , விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறது .

இந்த ஆண்டிற்கான பெரியார் விருது திராவிடர் இயக்க ஆய்வாளர் நெல்லை செ.திவான், கவிஞர் சீனி.பழனி, இயக்குநர் கவிஞர் குட்டி ரேவதி ,ஓவியர் எஸ்.எஸ்.கார்த்திக் , ஒளிப்பதிவாளர் கே.வி.மணி,இயக்குநர் மீரா கதிரவன்,கவிஞர் நெல்லை ஜெயந்தா மற்றும் கவிஞர் கண்ணிமை ஆகியோர்க்கு பெரியார் திடலில் ஜனவரி 16 ,17 தேதிகளில் தமிழ் புத்தாண்டு -பொங்கல் விழாவில் வழங்கப்பட்டது ,அதேபோல விழாவில் பெரியார் குத்து பாடல் குழுவினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது .அவர்களுக்கு பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பாக எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம் .


பெரியாரும் அண்ணலும் வகுத்துக்கொடுத்த பாதையில் நேர்மையாகவும் , வெளிப்படையாகவும் , தன்னாட்சியுடனும் தொடர்ந்து செயற்பட தங்களின் மேலான ஆதரவையும் ஊக்கத்தையும் 
வழங்கிடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் . தங்கள் படைப்புகள் , கருத்துக்கள் , விமர்சனங்கள் , விளம்பரங்களை மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்துகொண்டால் மேலும் ஊக்கம் பெறுவோம் .



வாழ்க தந்தை ! வாழ்க அண்ணல் !

வளர்க பகுத்தறிவு ! செழிக்க மனிதநேயம் ! 

நன்றி 

ஆசிரியர் குழு

இடஒதுக்கீட்டு உரிமை – நூல் ஆதி அசுரன் -காட்டாறு

இடஒதுக்கீட்டு உரிமை – நூல் ஆதி அசுரன் -காட்டாறு

இடஒதுக்கீட்டு உரிமை – நூல் ஆதி அசுரன் -காட்டாறு
இட ஒதுக்கீட்டின் வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது , இதனை பற்றிய புரிதல்கள் என்ன , எவ்வாறு இது தவறாக பரப்பப்படுகிறது , ஏன் ஜாதி வாரியான இட ஒதுக்கீடு ? பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு எதனால் கூடாது ?

இட ஒதுக்கீட்டினை பற்றிய தவறான புரிதல்களுக்கான விளக்கங்கள் , வறுமை ஒழிப்பு திட்டத்திற்கும் ,இட ஒதுக்கீட்டுக்கும் உள்ள வேறுபாடு ,இட ஒதுக்கீட்டால் கிடைத்த பயன்கள் , இனியும் அது ஏன் தேவை என்பதற்கான புள்ளி விவரங்கள் , முன்னேறிய நாடுகளில் உள்ள இட ஒதுக்கீடு திட்டங்கள் , தனியார் துறையில் இட ஒதுக்கீட்டின் அவசியம் 

ஆகியவற்றை கோர்வையான கேள்வி பதில்களின் தொகுப்பாக விளக்கிச் செல்கிறது இந்த நூல் . " , இட ஒதுக்கீட்டில் படித்து வந்த பிறகு ,அதற்கு எதிராகவும் ,பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஆதரித்தும் வரும் மெத்தப் படித்த மேதாவிகள் பெருகி வரும் காலத்தில் , மிகவும் தேவையான "காட்டாறு " அமைப்பின் நல்ல முயற்சி இந்த தொகுப்பு . ஆதி அசுரன் அவர்கள் இதனை தொகுத்துள்ளார் 

இந்த நூலில் இருந்து சில கேள்வி பதில்கள்


இட ஒதுக்கீடு என்றால் என்ன?

பல ஆயிரம் வருடங்களாக நாம் பிறந்த ஜாதியின் அடிப்படையில் நமக்குக் கல்வி மறுக்கப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சி நடத்திய அனைத்து மன்னர்களும் “சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே” என்ற மனுசாஸ்திர- இந்து மதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டே ஆண்டனர். அதன் விளைவாக நாட்டின் பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்டனர், தாழ்த்தப்பட்டனர். கல்வி மட்டுமல்ல அரசுகளில் அதிகாரப் பதவிகளும் மறுக்கப்பட்டன. 
ஜாதியின் காரணமாக மறுக்கப்பட்ட கல்வியையும் வேலைவாய்ப்பையும் அதே ஜாதியின் அடிப்படையில் - உரிமை பறிக்கப்பட்ட மக்களுக்குத் திரும்ப வழங்குவதே இடஒதுக்கீடு ஆகும்.
வகுப்புவாரி உரிமை என்றால் என்ன?
ஒவ்வொரு ஜாதியினரும் மொத்த மக்கள் தொகையில் அவரவர்கள் வகிக்கும் சதவிகிதத்திற்குத் தக்கவாறு கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, பிரதிநிதித்துவம் போன்றவற்றில் இடங்களை ஒதுக்கி மக்கள் தொகை சதவிகிதப்படி வாய்ப்பு பெறும் உரிமைக்குப் பெயர்தான் வகுப்புவாரி உரிமை. தற்போது இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இருப்பது இடஒதுக்கீட்டு உரிமை தான். வகுப்புவாரி உரிமை என்ற அளவில் அல்ல.

தனியார் நிறுவனங்கள் அவர்களே முதலீடு போட்டுத் தொழில் நடத்தும் போது அவர்களிடம் இடஒதுக்கீடு கேட்பது நியாயமா?

இது தவறான பார்வை. அனைத்துத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களுடைய சொந்த முதலீட்டை மட்டும் முதலாகப் போட்டுத் தொழில் தொடங்குவதில்லை. இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களிடம் கோடிக்கணக்கில் பங்குகளை வெளியிட்டு, பங்குத்தொகை வாங்கித்தான் தொழில் தொடங்கு கின்றன. 
அதுமட்டுமல்லாமல் அரசிடம் இருந்து ( ளுநுஷ் ) சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் அடிமாட்டு விலைக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், கோடிக்கணக்கில் ஏற்றுமதி, இறக்குமதி வரிச்சலுகைகளையும், வருமானவரிச் சலுகை களையும், மின்சாரம், குடிநீர் கட்டணச் சலுகைகளையும் பெற்றுத்தான் தொழில் தொடங்குகின்றன. 
நமது பங்கு முதலீடுகளாலும், நமது வரிப்பணத்தைப் பெறும் அரசினுடைய பெரும் பங்கிலும் தான் தொழில்கள் தொடங்கப்படுகின்றன. எனவே நாம் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு கோருவது எவ்வகையிலும் தவறல்ல. 


பள்ளிகளிலேயே ஜாதிச்சான்றிதழ் கேட்பதால் ஜாதிஉணர்வு வளர்கிறதே?

நாம் பிறக்கும் இடமே குடியான தெரு, பறத்தெரு, பள்ளத்தெரு என்று பிரிந்து கிடக்கிறது. நாம் வாழும் இடம் அக்ரஹாரம், ஊர், சேரி, காலனி எனப் பிரிந்து கிடக்கிறது. ஒரு மாணவனின் முகவரியைக் கேட்ட உடனேயே அவனது ஜாதியைப் புரிந்து கொள்ள முடியும். இங்கெல்லாம் ஜாதிச் சான்றிதழ் பார்த்தா நமக்கு இடம் ஒதுக்குகிறார்கள்? நமது பிறவியே நம்மை அங்கு பிறக்க வைத்து விடுகிறது.
இன்னும் கிராமங்களில், டீக்கடைகளில் பிற்படுத்தப் பட்டவர்களுக்குக் கண்ணாடி டம்ளரிலும், தாழ்த்தப்பட்டவர் களுக்கு ப்ளாஸ்டிக் கப்களிலும் காபி, டீ கொடுக்கும் முறை இருக்கிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி பெஞ்சுகள் இருக்கின்றன. டீக்கடைகளில் ஜாதிச்சான்றிதழைப் பார்த்தா டீ, காபி விற்கிறார்கள்? ஆளைப் பார்த்த உடனேயே ஜாதிக்கேற்பப் பிரித்து விடுகிறார்கள்.
“பள்ளிகளில் ஜாதிச்சான்றிதழ் கேட்பதால்தான் ஜாதி வளர்கிறது” என்று சொல்பவர்கள் அனைவரும் திருமணம் என்று வரும்போது ஜாதக நோட்டைத் தூக்கிக்கொண்டு தன் ஜாதித் தரகர்களிடம்தானே செல்கிறார்கள்? தன் ஜாதி மேட்ரிமோனி யலில்தானே துணை தேவை என விளம்பரம் கொடுக்கிறார்கள்? இந்த மஞ்சப்பை தரகர்களோ, ஆன்லைன் தரகர்களோ ஜாதிச்சான்றிதழ் பார்த்தா பதிவு செய்கிறார்கள்?
நாம் செத்து சுடுகாடு போகும்போதும், சுடுகாட்டில் பிற்படுத்தப்பட்டவர் சுடுகாடு, ஆதிராவிடர் சுடுகாடு என தனித் தனி சுடுகாடுகள் இன்றும் இருக்கின்றன. சுடுகாடுகளில் ஜாதிச்சான்றிதழைப் பார்த்தா நம் பிணத்தை அனுமதிக்கிறார்கள்?
இப்படி நம் பிறப்பிலிருந்து இறப்புவரை எல்லா இடங்களிலும் சான்றிதழ் பார்க்காமலேயே, கேட்காமலேயே ஜாதி இழிவு நம்மீது திணிக்கப்படுகிறது. ஒரு வேளை பள்ளிகளில் ஜாதிச் சான்றிதழ் கேட்கும் முறை வராமல் இருந்திருந்தாலும்கூட மேற்கண்ட ஜாதி - தீண்டாமைக் கொடுமைகள் இப்படியேதானே இருந்திருக்கும்? 

இந்த நூல் முழுவதும் PASC America இணையதளத்தில் இலவசமாக படிக்க கிடைக்கிறது
https://pascamerica.org/representation_qa_kaataatru/ 

பொங்கல் விழா கவிதை - மிச்சிகன் ரோசெஸ்டரில்




பொங்கல் விழா கவிதை - மிச்சிகன் ரோசெஸ்டரில்

பொங்கல் விழா கவிதை - மிச்சிகன் ரோசெஸ்டரில்
மிச்சிகன் ரோசெஸ்டரில் ஜனவரி 27 இல் நடைபெற்ற பொங்கல் விழாவில் படித்த கவிதை 

மார்கழி ஓடி விட 
தையும் வந்து சேர

போகம் விளைச்ச 
மண்ணுக்கும்
கூட உழைச்ச 
மாடுகளுக்கும் 

வானம் பார்த்து 
சூரியனுக்கும் 
நன்றி சொல்ல 
வந்து விடும் 
மகத்தான பண்டிகைங்க !!

உழைச்சவன் அலுப்புபோக 
உறவோடு கொண்டாடுமிது
தமிழரின் திரு-நாளுங்க !!

விடிய விடிய 
கோலமிட்டு 
தோட்டம் ஓடி 
வேப்ப –
மரத்தை தேடி 

பூளைப்பூவும் 
மஞ்சக்கொத்தும்
கட்டாக
கலந்து வைத்து 

காப்பு கட்டி 
அழகு பார்ப்போம் 
சோப்பு கட்டியில் 
எங்க அழக 
சேர்ப்போம் !!!







இருளும் பிரியாது 
தூக்கமும் கலையாது
நாலு மணிக்கே 
மாட்டை பத்தி -
அதுக்கும் ஒரு
பொட்டை போட்டு



செங்களிலே அடுப்பு செய்து 
விறகுகளை ஒடித்து வைத்து 

சூடம் இட்டு எரிய வைத்து 
தோகை கரும்பை கட்டி வைத்து 

அடுப்பெரியத்
தொடங்குமுன்னே 
தொடங்கிவிடும் 
எங்கள் போட்டி
“எந்தப் பக்கம்
பொங்கல் விழும் ?”

பொங்கி வந்த
பொங்கலை
படையல் வைத்து 
கண்மூடி நிக்க !!!

கண்ணு முன்னே 
வந்து வந்து 
போக்கு காட்டும் 
பொங்கலும் , கரும்பும் !

தட்டு நிறைய 
பொங்கல் வைத்தும் 
சில நொடியில் 
தீர்ந்து போக 
கரும்பை- கடித்தபடி 
சுற்றி வருவோம் 
ஊர் முழுதும்!!

காணும் பொங்கலிலே
தட்டில் விழும் 
ஆடும் 
கோழியும் !!!




ஓடியும் ! தேடியும் 
விளை- யாடியதால்- 

இனித்துக் கிடக்கும்
மனமெல்லாம் 
திண்ணையில் இருக்கும்
கரும்பை போல் !


நாலு நாள் -
பண்டிகையெல்லாம் 
ஊரோடு போனதுங்க 
இப்ப -
பொங்கல் வாழ்த்து
சொன்னதோடு 
பண்டிகையும்
முடியுதுங்க !!!

ஊர விட்டு வந்தாலும் 
உறவை விட்டு பிரிஞ்சாலும் 

மரத்தில் உள்ள வேரை போல 
எண்ணமெல்லாம் ஒன்று சேர 

நண்பரெல்லாம் கூடி வந்து 
பொங்கல் வைப்போம் 
வருடா வருடம் 

whatsup ல குழுவை வெச்சு 
பொங்கலுனு 
சொன்ன போதும் 
வந்து விழும் 
முதல் கேள்வி 
வெஜ் ஆ ? non - வெஜ் ஆ ?

என்னவெல்லாம் வேண்டுமென 
வோட்டெடுப்பும் 
வைத்து பார்ப்போம்

தமிழன்- என்று சொல்ல 
இங்கேயும்- வந்து விழும் 
செல்லாத ஓட்டு பல !

கருத்து ஒன்று 
ஒருவர் சொல்ல 
எதிர் கருத்து 
பலரும் சொல்ல 
அடித்துக் கொண்டு 
விளை -யாடுவதால் 
வந்து விழும் 
100 மெசேஜ் !!!

ஆனது ஆகட்டும் 
ஆகவேண்டியதை பார்ப்போம் 
என 


பனி தான் பொழிஞ்சாலும்
கடுங்குளிரு அடிச்சாலும் 
கூடி நிப்போம் 
Rochester இல் 

குழந்தைகளுக்கு 
பரிசை தந்து 
குடும்பங்களுக்குள் 
பரிச்சியம் செய்து 
ஆட்டத்தோடு 
பாட்டையும் சேர்த்து

அதிர அதிர 
பறையை அடித்து
உரக்கச் சொல்வோம் 
நங்கள் இன்று 

பொங்கலோ பொங்கல் !!! பொங்கலோ பொங்கல் !!!








https://www.youtube.com/watch?v=5o97MjcKekg&feature=youtu.be

Monday, January 21, 2019

பரவட்டும் பறை இசை !!!

பறை தமிழர்களின் ஆதி இசை .  அனைத்து காலங்களிலும் இது மக்களுக்கான  இசையாக மட்டுமே இருந்துள்ளது .   திணை வாரியாக தமிழர் வாழ்ந்த சங்க காலத்தில் இருந்தே தமிழரின் தனி அடையாளம் பறை . ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளாக ஒவ்வொரு பறையை கூறுகிறது   தொல்காப்பியம் .  

முல்லை - ஏறுகோட்பறை குறிஞ்சி - தொண்டகப்பறைமருதம் - மணமுழவுப் பறை நெய்தல் - மீன்கோட் பறை பாலை - துடிப்பறை 
இது மட்டுமில்லாமல் அரிப்பறை , உவகைப்பறை ,  கொடு கட்டி , குரவைப் பறை என  60 க்கும்    மேலான பறை வகைகள் நம்மிடையே  இருந்துள்ளன.  

பறை இல்லை என்றால் அது ஊரே இல்லை என்கிறது இந்த புறநானூற்று பாடல் 

"துடியன் , பாணன் , பறையன்கடம்பன் என்று இந்நான்கல்லதுகுடியும் இல்லை "

இந்த பாடல் வாசிப்பவரை குறிக்கிறது , சாதியை குறிக்கவில்லை . ஆதித்தமிழர் வாழ்வியலில்   போர் , விலங்கு , உழவு , விதைப்பு , அறுப்பு , இறப்பு , கூத்து , விழா , வழிபாடு , அரசுச் செய்தி என  எதை அறிவிக்கவும் பறை தான் .

இவ்வளவு சிறப்பு பெற்ற பறையை சாதி அடையாளமாக , அலங்காரப்பொருளாக  பார்க்காமல் , மக்களின் கலையாக மதித்து அதை கற்று மக்களிடம் இசைத்து   மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில்  ஒத்த கருத்துடைய நண்பர்கள் உருவாக்கிய குழு  "டெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடம் " . - இதன் விளக்கம்  உயிர் இல்லாத ஒன்றில் இசை என்ற உயிரை எழுப்புவது .

இது நாள் வரை நேரில் மட்டுமே  கற்பித்து நிகழ்த்தி வந்த   கலையை ஆர்வ மிகுதியால் skype    வழியான கற்றலை மற்றுமே கொண்டு தொடர் பயிற்சியினை மேற்கொண்டு  மேடை  ஏறி இருக்கின்றோம் .   எங்களுக்கு பொறுமையாய்  கற்றுக்கொடுத்த  கோவையை சேர்ந்த பறை பயிற்றுனர்  - சக்தி அவர்களுக்கு இந்த மேடையில்   நன்றி கூறிக் கொள்கிறோம் . .எங்களின் பெருபான்மையோர்க்கு  பறை தான் நாங்கள் கற்றுக் கொண்ட முதல் இசைக்கருவி .

எங்களோடு நீங்களும் வாருங்கள் , உலகம் முழுவதும் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம்  பறை ஒலிக்கட்டும் .  "பறைக் கலைஞராய்  பெருமை கொள்வோம் ." -      இந்த முன்னுரையோடு தொடங்கிய எங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு 

கிட்டத்தட்ட 1000 பேர் இருந்த அரனாகில் நிகழ்ச்சி முடிவில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் .  அன்று முழுவதும் மிதந்து கொண்டே தான் இருந்தேன் .

இந்த நிகழ்ச்சியின் காணொளி  
"Parai Performance at Michigan Tamil சங்கம்"  என்று அடித்தால் youtube  இல் இருக்கிறது .   You tube link below 

Wednesday, January 16, 2019

வரம் !!!

வரமெனப்படுவது யாதனின்
இரண்டு லெக் பீஸ்களுடன்
கிடைக்கும்
பிரியாணி !

               -  (பேச்சுலர் பரிதாபங்கள் ) பாவி 

Wednesday, January 2, 2019

விமானநிலையம்

முத்தமிட்டும்
விலகிச்சென்றும்
இடைவிடாது
பறக்கும்
விமானங்களில்
பயணிகள்
முத்தமிட்டும்
விலகிச்சென்றும்
               
                - பாவி

Tuesday, January 1, 2019

யாதுமாகி -8

தூக்கி எறியவும்
மனமில்லை
வைத்து விளையாடவும்
 தெரியவில்லை
சிதறிக் கிடக்கிறோம்
நானும் பொம்மைகளும் !

                                           -பாவி 

அது ஒரு " கறி"க் காலம் !

 முந்தாநாள் தான் (28 -12 -2018 இந்தியாவில் இருந்து வந்தேன் ) , இந்த இந்தியா பயணத்தில்  போய் இறங்கிய முதல் நாள் காலையில் இட்லி   குடல் குழம்புடன் ஆரம்பித்து , பயணத்துக்கு முந்தைய   தினம்  மாரியம்மன் பொங்கலும் , கறி விருந்தும் என்று முடிந்த காலம் முழுவதும் கறிக்காலமாக இருந்தாலும் ( அதிலும் இந்த பொங்கல் வைத்து குழைந்து போன வெள்ளை சாப்பாட்டில் அப்படியே எலும்புக் குழம்பை பிசைந்து அடிப்பது தனி சுவைத்தான் )  , அதற்கும் மேல்  என்ற அனுபவத்தை தந்த நாள் தான் இந்த கறிக்  காலம் .

அது ஒரு வெள்ளிக்கிழமை ,காலை பத்துமணிக்கெல்லாம் , கதர்சட்டையும் , நெற்றி நிறைய பொட்டுமாக உறவுகள் வந்து விட்டார்கள் . சின்ன மாமனாரின் நண்பர்கள் , ஒரு 2 அடி டிபன் பாக்ஸ் ஐ (நிஜமாலுமே இரண்டு அடிக்கு மேல்  இருக்கும் )  கொண்டு வந்து காரில் திணிக்க , காலையில் நடை பயணம் போகும் போது பார்த்த சேவலை  ,  வாங்கி , கறிக்கடையில் அடித்து, வெட்டிக்கொண்டு வந்துவிட்டார்  மச்சான் .

நல்ல சேவல்  வெடப்பா  இருந்தது பார்த்ததுமே முடிவு பண்ணிட்டேன் என்று சொன்னார் , அவர் சொல்ல சொல்லவே  சிறிது பசி வந்து விட்டது . ஈரோட்டில் இருந்து காஞ்சி கோயிலுக்கு தொடங்கியது  எங்கள் பயணம் .

இவ்வளவு அவசரமாக நாங்கள் புறப்பட்டு போன இடம் , தம்பிக்களை அய்யன் கோயிலுக்கு அடுத்ததாக உள்ள  "ஆயா கடை "  - ஒரு சின்ன பலகை பட்டும் தான் உள்ளது . உள்ளே நுழைந்ததும் கூண்டில்  உள்ளே நாட்டுக்கோழிகளும் , சேவல்களும் , அதன்  எதிர்புறத்தில் அவைகளை  சுத்தம் செய்து கொடுக்கும் கறிக்கடை , அதனை தாண்டி  ஆள் உயரத்துக்கும் மேல் குவிக்கப்பட்டிருக்கும் விறகுகள் , அதற்கு எதிர்புறத்தில் சின்ன தோட்டம் , அதனை தாண்டினால் வருகிறது மண் அடுப்புகளும் ,  உணவு அருந்தும் இடமும் .  சின்ன வெங்காயங்களும் , வர மிளகாய்களும் கொட்டிக் கிடக்கின்றன .

நாம் கொண்டு வந்த கறி அல்லது அங்கே எடுத்த கறியை கொடுத்து  , எவ்வளவு பேருக்கான சாப்பாடு என்று சொல்ல வேண்டும் , நாம் சொன்ன பிறகுதான் சாப்பாட்டிற்கு அரிசியே போடுகிறார்கள் . நல்ல பெரிய  ஈயப்பாத்திரத்தில் கறியை கொட்டி , நல்லெண்ணெய் , சின்ன வெங்காயம் , வர மிளகாய் கொண்டு , விறகு அடுப்பு கொழுந்து விட்டு எரிய ஆரம்பம் ஆகிறது சமையல் . கறியை கிளறுவது கூட  விறகு குச்சியில்  தான் .

 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும் என்பதால் , வெளியே வந்து என்ன செய்வது என்று கேட்டேன் , அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை , காலையிலேயே சொல்லியாயிற்று , நல்ல வாகான இரண்டு ஆட்டுதலைகளை சுத்தம் செய்து வறுத்து , கோபியில் இருந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறான் என் மச்சான் என்றார் சின்ன மாமனார் . கேட்டதுமே எனது கவலை எல்லாம் பறந்தோடி விட்டது . சொல்லி முடிக்கும் முன்னர் அவர் வந்து சேர்ந்தார் .

கறிக்கோழி இரண்டு கிலோ , இரண்டு ஆட்டுத் தலை எப்படியும் இரண்டு கிலோ வந்து விடும் , ஆக நாலு கிலோ கறி சாப்பிட வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு இருப்பதால் , வேலையை தொடங்கவேண்டும் என்று இடம் பாக்க ஆரம்பித்தோம் , எதிர்லயே  இருந்தது சற்று ஒதுக்குபுறமான இடம் .

வேப்ப மரங்கள் சுற்றிலும் இருக்க , அதன் நிழலில் காரை நிறுத்தி , தலைக்கறியை சுவைக்கும் படலம் தொடங்கியது , பாக்குத் தட்டில்  சாப்பிட்டது நல்லதாக போயிற்று ( வாழை இலையில் நம்ம அவசரத்துக்கு சாப்பிட முடியாது பாருங்க , கொஞ்சம் பொறுமையாக சாப்பிட வேண்டும் இல்லையேல் இலை கிழிந்து விடும் , பாக்கு தட்டு அப்படியில்லை , அழுத்தி எடுத்து சாப்பிடலாம் , அதிலும் நீங்கள் மசாலாவை சொரண்டி எடுத்தால் அந்த தட்டில் உள்ள வரிகள் விரல்களுக்கு அழுத்தம் கொடுத்து , இன்னொரு வாய் எடுத்துக்கொள் என்று சொல்லும் ).

வேப்பமரக் காத்து , சுற்றி உள்ள காய்ந்த புல்லிலும் , எருக்களஞ்செடிகளிலும் இருந்து வரும் ஒரு கலவையான வாடை , மணக்க மணக்க காரம் தூக்கலாய் செய்யப்பட்ட தலைக்கறி , அவ்வப்போது எழும் பறவைகளின் சத்தமும் , ஆடு களின் சத்தமும் தவிர , நாமளும் , நம்ம தலைக்கறியும் தான் .

பேசிக்கொண்டே   சாப்பிட்டதில் நேரம் போனது தெரியவில்லை , கோழி வாங்கி வேண்டிய நேரம் வந்து விட்டது ( இதில்  இருந்து நாலு பேருக்குள்  கண்ணா முழி சாப்பிடுவதற்காக நடந்த சண்டை எல்லாம் தனி வரலாறு ).

திரும்பவும் ஆயா கடை - கறி  (மனம்) மணம்  நேரே அடுப்பில் கொண்டு போய் நிறுத்துகிறது , அவர்கள் கிளறி , கிளறி கொட்டும்போதே மறுபடியும் பசிக்கிறது ,சுட சுட  சாப்பாடு , கறி , இவற்றோடு கிடைக்கிறது , பச்சை புளி ரசமும் , தக்காளி ரசமும் , அதிலும் இந்த பச்சை புளி ரசம் இருக்கிறதே அது ரசங்களின் அரசன் . தண்ணி , நுணுக்கமாக நறுக்கிய சின்ன வெங்காயம் , புளி , கொத்துமல்லி தளை ,  இவற்றை போட்டு பக்குவமாக கலந்தால் தயாராகிவிடும் . வேக வைப்பதெல்லாம் கிடையாது , கலக்கு வதில் இருக்கிறது இதன் சுவை . மொண்டு மொண்டு டிபன் பாக்ஸில் ஊற்றும்போதே நாவு ஊறுகிறது.

பின் அதனோடே கிடைக்கிறது நல்ல கெட்டியான எருமை தயிர். அவர்களே எருமை வளர்த்துவதால் அதிகமாவே தருகிறார்கள் . சாப்பாடு பத்துமா என்ற சந்தேகம் எழுந்ததால் ஓரியாடி  ஒரு அரை சாப்பாடு அதிகமாக வாங்கினோம் . நமக்கும் அதிகமாக வாங்கினோம் என்று இருக்கும் அவர்களுக்கும் வியாபாரம் செய்த மாதிரி இருக்கும் அல்லவா ?  அதிலும் நான் , சின்ன வெங்காயம் உரித்துக்கொண்டிருந்த ஆயாவிடம் , கடையை பற்றி எழுதுவதாக சொல்லி ஒரு கை நிறைய வெங்காயங்களை தயிருக்கு கடித்துக்கொள்ள வாங்கினேன் , சும்மா கேட்டாலே கொடுப்பார்கள் என்றாலும் , நானும் ஒரு எழுத்தாளன் என்று பதிவு செய்வது முக்கியம் அல்லவா ?

அனைத்தும் வாங்கிவிட்டதால்  , சாப்பிடுவதற்கான அடுத்த இடத்திற்காக கோபி நோக்கி பயணம் , சுற்றி சுற்றி  பவானி ஆற்றின் கிளை நதிக்கான ஒரு வாய்க்காலின் ஓரம் கொண்டு போய் நிறுத்தினார்கள் .  பாதையே இல்லாத இடத்தில காரை ஓட்டுவதற்கெல்லாம் தனித்திறமை தேவை .

அமைதியாய் ஓடும் வாய்க்கால் , அதன் ஒரு கரையில் தோட்டங்கள் , மறுகரை ஏனோ வெறும் காய்ந்த புற்களும் , மரங்களுமாய் இருக்கிறது , மரங்களுக்கு இடையே  தார்பாயை விரித்து அமர்ந்ததும்  தொடங்கியது அடுத்த வேட்டை ,   கோழிக்கறி மற்றும் தலை கறி .

சாப்பாடு சாப்பிட்டால் வயிற்றில் இடம் இருக்காது என்பதால் வெறும் கறியாக சாப்பிட்டு , அது செரிக்க பச்சை புளி ரசமாக குடித்துக்கொண்டிருந்தோம் .  நல்ல உச்சி வேளை , வெயில் தகிக்க , மிளகாய் காரமும் சேர , தலையில் இருந்து தண்ணியாய் இறங்கியது . எங்கிருந்தோ வந்து சேர்ந்தன காகங்களும் , நாய்களும் , கறியை ருசித்து நாம் மட்டும் சாப்பிடாமல் , காகங்களுக்கு , நாய்களுக்கும்  சிறிது வைத்து சாப்பிட்டதில்   கூடுதல் சுவை . பகுத்துண்டு வாழுதல் என்பது இதுதான் போல . சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் தொப்பலாக வேர்த்து விட்டது .நிறைய சாப்பிட்டு விட்டதை போல ஒரு உணர்வு .

வேர்வை நீங்க குளிக்கலாம் என்று அடுத்த இடம் நோக்கி சென்றோம் .  வாய்க்காலில் குளிக்கலாம் என்று சொன்னதற்கு வேண்டாம் வாங்க ஒரு அருமையான இடம் கூட்டி போகிறோம் என்று சொன்னார்கள் .

அடுத்த இடம் தேடி  , கோபியில் இருந்து பங்களாபுதூர் சாலை  வழி சென்றோம்  , சாலையின் இரு பக்கங்களிலும்  கண்ணுக்கெட்டிய தூரம் வரை , நெல் வயல்களும் , வாழைமரங்களும்  தான் , ஆங்காங்கே வாத்து முட்டைகளும் , சோளமும் விற்கிறார்கள்   , அதிலும்  அறுவடையான வயல்களில் வெள்ளாடு பட்டியைப் போல வாத்துப்பட்டி போட்டிருக்கிறார்கள் , வாத்தில் இருந்து வந்த சூடு குறையாமல்  முட்டைகள் கிடைக்கிறது .

இந்த சாலையில்  வயல்களை பார்த்த படி சென்று கொண்டிருக்கையில் வருகிறது மத்தாளக்கோப்பு  ஊற்று . வாழைமர தோப்புகள் சுற்றி இருக்க , அருகில் ஊற்றில் இருந்து வரும் தண்ணீர் வாய்க்காலுக்கு செல்ல ரம்மியமாக இருக்கிறது, வருடம் முழுவதும் வற்றாமல் பொங்கி வரும் இந்த ஊற்று . அவ்வளவு தெளிவான தண்ணீர் . ஊற்றுக்குள் இறங்க சுற்றியும் படி கட்டி இருக்கிறார்கள் , ஊற்றுக்குள்  இறங்கினால் நீங்கள் பாதம் வரை துல்லியமாக பார்க்க முடிகிறது . சோப்பு , ஷாம்பு , மது , மாமிசம் அனுமதி இல்லை என்பதால் , மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து , வாய்க்காலில் ஒரு முங்கு முங்கி பின் ஊற்றில் இறங்கினோம். (குளித்து விட்டால் கணக்கு வராது பாருங்க )

உச்சி வெயில் சிறிது சிறிதாக கீழ இறங்க ஒரு வேலையும் செய்யாமல் , ஊற்றில் நாமும் சேர்ந்து ஊறுவது , பின் எழுந்து சென்று சாப்பிடுவது , வாய்க்காலில் முங்குவது , பின் மறுபடியும் ஊற்றில் வந்து  ஊறுவது , பின் சாப்பாடு  என   செய்ததில் மாலை ஆகி விட்டது . மனம் இல்லாமல் ஊற்றில் இருந்து மேலேறினோம் .

வருத்தம் அதிகமாகி விட்டதால் மறுபடியும் சாப்பிட போனோம் , தேடி தேடி பார்த்தும் ஒரு துண்டு  கறி கூட மீதம் இல்லை . மனதை தேற்றிக்கொண்டு அங்கங்கே ஒட்டி இருந்த சாப்பாட்டில் தயிரை நன்கு போட்டு குழைத்து  சின்ன வெங்காயத்தை கடித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தோம் . நல்ல கெட்டி தயிரை போட்டு பிசைந்தால் அதில் இருக்கும் வெண்ணை மாவு மாதிரி கையெல்லாம் ஒட்டிக் கொள்கிறது . அதனூடே சாப்பாடு சாப்பிடுவதும் நன்றாய்தான் இருக்கிறது . டிபன் னை கழுவ  அதிகம் சிரமப்பட தேவை இல்லாமல் கழுவி வைத்ததைப்போலத்தான் இருந்தது .

பின் இரவு  மெல்லச் சூழ , பௌர்ணமி நிலவும் , இளையராஜா பாடலும் தொடர்ந்து வர , திணறத் , திணறத் சாப்பிட்டால் மட்டுமே வரும் ஒரு அரை மயக்க நிலையில் வீடு வந்து சேர்ந்தேன் .

 நாக்கின் அடிப்பகுதியிலும், வாயின் ஓரங்களிலும் வர மிளகாயின் காரம் என்ன செய்தும் போகாமல் ஒட்டிக்கொண்டு  இருக்க ,  மூக்கில் அதன்  காந்தல் அடிக்க அடிக்க தூங்கிப்போன அந்த நாள் இனிய நாள் .
                   
                                                                                                                                                            -                                                                                                                                                         
பாவி

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...