திரைகடல் ஓடி திரவியம் தேடிய தமிழ் இனத்தின் முதல் குடியேற்றம் வாணிபத்தால் வந்தது ,சீனத்துடனும், கிரேக்கத்துடனும் நமக்கு முன் தோன்றிய மூத்த குடி வணிக தொடர்ப்பு கொண்டிருந்தனர் .
பின் காலனி ஆதிக்கத்தின் நிர்பந்தத்தால் கடின வேலை செய்வதற்காக மலேஷியா , சிங்கப்பூர் , மியான்மர் , மொரிசியஸ் , தென் ஆப்பிரிக்கா , பிஜி போன்ற ன்டுகளிலும் , தீவுகளிலும் குடி அமர்த்தப்பட்டோம் . உலகமயமாக்கலின் தாக்கத்தால் இரண்டாம் பெருங் குடியேற்றம் நமது கல்வியால் வந்தது , தமிழ் என்னும் இனத்தின் அறிவும் , கல்வியும் , இன்று உலகம் முழுவதும் நாம் பரந்து விரிய காரணமாய் இருந்தது .
வாணிபத்தால் பயணிக்க ஆரம்பித்து , கல்வியால் நாம் பரவியுள்ளோம் , நாம் இப்படி இருக்க இது மட்டும் தான் காரணமா ? இல்லை இதற்கு மூல காரணம் நமது மொழி , அது கற்றுக்கொடுத்த பண்பாடு , நம் இலக்கியங்களில் உள்ள வாழ்வியல் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை நாம் வாழ்ந்தல்லவா காட்டி உள்ளோம் .
எப்படி வாழ்வது என்பதை அறியாமல் அறிவியல் படித்து , உயிரியில் படித்து , கணிதம் படித்து அல்லது கணினி தான் படித்து என்ன பயன் , திருக்குறளை படித்தால் தானே வாழ்க்கைக்கான படிப்பு கிடைக்கும் ?
நாம் பள்ளியில் பாடமாக படித்தது , நம்மில் பலருக்கு பள்ளிப்படிப்பு முடிந்ததும் தமிழ் படிப்பதும் முடிந்து விடுகிறது அல்லது கணினி , கைபேசியில் உள்ள செயலிகலில் வரும் தரவுகளை படிப்பது என்று சுருங்கி விடுகிறது .
அது மட்டும் தான் தமிழ் ஆ ? தமிழா ?
எழுத்தசை , சீர்தளை , அடி தொடை என வரைமுறை கொண்டு , எழுத்துக்கும் , சொல்லுக்கும் , பொருளுக்கும் , மட்டுமல்லாது ஒரு பாடலை எழுதுவதற்கு யாப்பு , அதில் சுவையை சேர்ப்பதற்கு அணி என இலக்கணம் கொண்டு, ஒரு சிறு புள்ளிக்கும் மாத்திரை அளவு கொண்டு உள்ளது நமது தமிழ் . இந்த அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இம்மை அளவும் பிசகாமல் படைக்கப்பற்ற சங்க இலக்கிய நூல்கள் நமது மொழியில் உள்ளன . நேரம் எடுத்து எந்த பாடலை வேண்டுமானாலும் அளவிட்டு பாருங்கள் . வியப்பில் இருந்து மீள வெகு நேரம் பிடிக்கும் .
இதனை நாம் கற்கவும் அதற்கும் பெருமை செய்யவும் வேண்டாமா .???
காலங்கள் மாற மாற நமது மொழியும் மாறுதலுக்கு உட்பட்டுள்ளது , பிராமிய எழுத்து , வட்டெழுத்தாக மற்றம் பெற்றது , பின் வட்டெழுத்தாக இருந்தது பல்லவர் காலத்தில் மாறுதலுக்கு உடப்பட்டு கிரந்த எழுத்துக்களை சேர்த்துக் கொண்டது அவை எழுத்து சீர்திருத்தம் பெற்று தற்கால தமிழ் எழுத்துக்களாகின , இப்படி தலை முறை தலை முறையாக தமிழ் மாற்றம் பெற்று , பல்வேறு பரிமாணங்களை அடைந்துள்ளது .
கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் காகிதத்தில் இருந்து கணினிக்கு வந்து இப்போது சங்க இலக்கியமும் கணினியில் கற்கிறோம்.
தமிழின் மீது நமக்கு முன்னாள் இருந்த தமிழர்களின் தேடல் , ஆர்வம் , வேட்கை நம்மை இங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது . இது அடுத்த பரிணாமத்துக்கு கொண்டு செல்லும் கடமை இப்போது நமக்கு உள்ளது. .
புலம் பெயர்ந்து , பல காலம் ஆயிற்று , எனது பிள்ளைகள் தமிழ்நாட்டையே வரைபடத்தில் தான் பார்த்திருக்கின்றனர் , எதுக்கு அடுத்த பரிமாணம் , அவர்கள் தமிழை படிப்பார்களா என்றெல்லாம் கவலை நமக்கு வேண்டியவதில்ல்லை ,
ஏனெனில் ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ் நமக்கு வசப்படுகிறதோ இல்லையோ , தமிழர்களாகிய நாம் தமிழுக்கு வசப்படுகிறோம் , நம் அடுத்த தலைமுறையில் மட்டும் அது நிற்கவா போகிறது ? நாம் அல்லவா மேலும் செம்மையாக அவர்கள் கற்க அடித்தளம் அமைக்க வேண்டும் ?
தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று சொல்லும் நிலை மாறி தமிழ் படி எப்படி வாழ்வது என்று தெரியும் , தமிழ் படி உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றலாம் , தமிழ் படி பிற நாட்டு மக்கள் தமிழை விருப்ப பாடமாக படிக்கின்றனர் , தமிழ் படி , கற்ற கல்வியும் , பெற்ற செல்வமும் , சுற்றமும் , சூழலும் மேம்படும் என்று சொல்லும் நிலை வர வேண்டுமல்லவா ?
இதனை நோக்கி நம் தமிழ் சமூகம் பயணப்பட பாதை அமைத்து கொடுக்கும் ஹார்வர்ட் பல்கலை கழகத்தின் தமிழ் இருக்கை பற்றி அறிந்து கொள்ளவும் , அதற்கு மிச்சிகன் வாழ் தமிழர்களின் , மிச்சிகன் தமிழ் சங்கத்தின் முயற்சியையும் வாருங்கள் நண்பர்களே தெரிந்து கொள்ளுவோம் .