2019 ஆண்டின் தீபாவளி நாள் . பேரரசன் நரகாசுரனை வாழ்த்தியும் , தீபாவளி வாழ்த்து சொல்லியும் whatsup செய்திகள்
வந்து கொண்டிருக்க , மதியம் ஒரு மணிக்கு , ஒரு
கார்கள் கூட இல்லாத பார்க்கிங்
லாட்களை பார்த்தபடி , நான்கு நாட்களுக்கு முன் செய்த
"காளிபிளார்"
குழம்பை சாப்பிடலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்கையில் , லட்டு சாப்பிட வேண்டும் என்று கட்டுக்கடங்காமல் ஒரு வெறி வந்தது "கார்த்திக்"
ஆன எனக்கு , கூடவே
வந்தது "கீர்த்தனாவும்"
, லட்டு கசந்த காரணமும் .
லட்டு
- மனிதன் கண்டுபிடித்த அரும்பெரும் சாதனை , சின்ன சின்ன மாநில பூந்திகள் , வேற்றுமையில் ஒற்றுமை என்ற சர்க்கரைப்பாகினால் ஒன்று
சேர்ந்து உருவாகும் கூட்டாட்சி தத்துவம் .
சர்க்கரையை
தண்ணீரில் கலந்தால் பாகாகி விடுமா ? ஒற்றுமை உணர்வு மேலோங்க , திணிக்காமல் , இனிப்பாய் கலந்து வர வேண்டும் , பதமாய்
வந்த பாகுவை தண்ணிரில்
போட்டால் கரையாமலும் , விரல்களில் எடுத்து பிரித்தால் மெல்லிய கயிறாகவும் வருவதை பண்ணி பண்ணி பூரித்துப் போன இளம்பருவ நாட்களில்
இருந்து லட்டின் மேல் தீராக்காதல் .
கல்லூரி
முடிந்து , தெருவுக்கு நூறு என்ஜினீயர்களும் ,எம்பிஎக்களும் இருக்கும்
பெங்களூரு நகரில் , மூன்று நண்பர்களுடன்
இருக்கையிலும் காதல் தீராமல் , ஏன்
இவ்வளவு பெரிய ஊரில் நல்ல லட்டு விற்கும்
கடைகளே இல்லை என்று தேடிக்கொண்டு இருந்த ஒரு
வறட்சி காலம் .
அன்றும்
ஒரு தீபாவளி முடிந்த ஞாயிறுதான் , வேலை காரணமாக ஊருக்கு
போக முடியாமல் நான் இருக்க , நண்பர்கள் போய்விட்டு
வந்து , தத்தம் காதலிகளை சந்தித்து , காதலும் , இனிப்புகளும் ,பரிமாறிக்கொண்டு , வீட்டில் இனிப்புகளை போட்டுவிட்டு , காதலை கையுடன் எடுத்து மாலுக்கோ ,சினிமாவுக்கோ சென்று இருந்தார்கள் .
தூங்கிக்கொண்டிருந்த நான்
,கிராம்பும் , கற்பூர மணமும் வர அரக்க
பறக்க எழுந்து தேட ஆரம்பித்தேன் ,பலனாக
கிடைத்தது , லட்டுகள் அடங்கிய டிபன் பாக்ஸ் . மஞ்சளுடன்
, சிவப்பு கலந்த , நல்ல லட்டுகளுக்கே உண்டான நிறத்தில்
லட்டுகள் . கவனிக்க வேண்டிய விஷயம் , ஒவ்வொரு லட்டுலயும் இரண்டு முந்திரி , இரண்டு திராட்சைகள் , எண்ணி வைத்திருப்பார்கள் போல .
வா வா என்று கூப்பிட
,விட்டு விட்டு போன உங்களுக்கு லட்டு
கிடையாது என்று நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ,அக்கம் பக்கம் யாருமில்லா தனி உலகத்தில் லட்டுகளுடன்
இருக்கையில் அருளின் செய்தி வந்தது , "டேய் கார்த்திக்
லட்டு கீர்த்தனா கொடுத்தது" , கீர்த்தனா - என் நண்பனின் காதலி
.
லட்டு
ஏன் பிடித்தது என்றும்
தெரிந்தது சிறு வயதில் இருந்து
குடித்து வளர்ந்த சிறுவாணி
தண்ணீரில் செய்த லட்டு பிடிக்காமல் இருக்குமா ?
அன்று
முதல் பாலைவனத்தின் பூஞ்சோலையாக , கீர்த்தனா கோயம்பத்தூர் போய்
வரும்போதெல்லாம் லட்டு
கிடைத்தது , கீர்த்தனா மறந்தாலும் , அவளின் அம்மாவையும் , அவள் வீட்டில் லட்டு
செய்யும் சாந்தம்மாவையும் , அழைத்து பேசி லட்டு செய்து
கொடுக்க சொல்லி
விடுவேன் .
வசந்த
காலம் தொடராது
அல்லவா ? ஆறு மாதங்களில் கீர்த்தனா
வேலை மாறி , புனே சென்று விட
, அருளும் பின் சென்று விட்டான்
. நண்பர்களும் காதலிகள் , மனைவிகளாக , "ஒரு அறையில் இருந்த எங்கள்
எல்லோருக்கும் காதல் வந்தது உனக்கு ஏன்டா வரவில்லை " என்று போய்விட்டார்கள் . எப்படியும் அவர்கள்
தொடர்பில் இருப்பார்கள் என்பதால் அவர்கள்
போனதை விட லட்டு போனதில்
தான் எனக்கு அதிக வருத்தம் .
"இன்னும் ஆறே மாசம் தான்
டா , அமெரிக்காக்கு பறந்துட்டே இருப்பேன் , கார் ஓட்ட கூட
கத்துக்க ஆரம்பிச்சுட்டேன் , நீங்க
இப்பபடியே பெங்களூரு
சுத்திட்டே இருங்கடா என்று வாழ்த்தி விட்டேன்"
.(கடைசியில் அனைவரும் வெவ்வேறு நாட்டிற்கு போக நான்
மட்டும் பெங்களூரை வலம் வந்தேன் என்பது
வேற கதை )
அடுத்த
சில மாதங்கள் , எல்லாத்துக்கும்
வேலை இருக்க , லட்டு கிடைக்கா மன அழுத்தத்தில் இருந்த
எனக்கு , கார் ஓட்ட கத்துக்கொடுக்க
வந்த நண்பர்
மூலமாக அறிமுகமானது , பெங்களூருவின் இரவு
நேர கார் பந்தய உலகம்
. வார வாரம் , பந்தயங்களில் வெற்றி பெற்ற கார்களில் அமர்ந்து , போட்டோ எடுத்து
ரசித்து ரசித்து பந்தயங்களை எழுதி முகநூலில் போடுவது பிடித்த பொழுதுபோக்கானது . கார் ஓட்டுவது மட்டும்
வருவேனா என்றது .
இவ்வாறு
சுத்தி விட்டு வந்த ஒரு விடியலில்
, அறைக்கு முன் அமர்ந்து கொண்டு
இருந்தான் அருள் , கூடவே நண்பர்களும் .
"ஏன்டா
போன் பண்ணினா எடுக்க மாட்டியா ? "
"பண்ணுனா
எடுக்கனும்டா ? நான்
ரேஸில் பிசியா இருந்தேன் . காலங்காத்தால எல்லாரும் வந்திருக்கீங்க ? ஏன்டா அருள் வரேன்னு சொல்லி இருக்கலாமல்ல
?"
"அதுக்குதான்டா
போன் பண்ணினேன் , நேத்துல இருந்து நீ எடுக்கல , பிரச்சனை
ஆயிடுச்சு மச்சான் , கீர்த்தனா வீட்டுல தெரிஞ்சுடுச்சு , போன வாரம் ஊருக்கு
போனவ இன்னும் வரலை , காண்டாக்ட் பண்ணக் கூட முடியலை
, கார்த்திக் நீதாண்டா ஹெல்ப் பன்ணனும்."
"என்னை
என்னடா பண்ண சொல்லுற ?"
"நீயும்
அந்த ஊருதான ? அவ
வீட்டிற்கு ஏதாவது கரணம் சொல்லி போய் பார்த்துட்டு வர
முடியுமா ?"
"என்னடா
விளையாடுறீங்களா ? அவங்க
வீட்டிற்கு போயிட்டு எல்லாம் அவ்வளவு ஈஸியா வர
முடியாதுடா , அவங்க அப்பாவோட டிரைவர் சேகர் எனக்கு
பழக்கம் தான் , பேருக்கு தான் அவர் டிரைவர்
, அவருக்கு கீழ 20 பேருக்கு மேல வேலை செய்யுறானுக
, எல்லாமே முரட்டு ஆளுக . கீர்த்தனா உங்கிட்ட சொல்லலியா ? "
ஒருவொருக்கொருவர் திகிலுடன்
பார்த்துக்கொள்ள , அருள் அழுகையுடன் தொடர்ந்தான் , "பார்த்தியா மச்சான் , எங்க யாருக்குமே , ஏன்
கீர்த்தனாக்கே இதெல்லாம் தெரியாது , நீதாண்டா போகணும் . இந்த வாரம் கோயில்
நோம்பினு போறப்ப
சொன்னா ,அதுக்கு வந்துட்டு பார்க்க வந்தேன்னு சொல்லுடா" .
"அவங்க
வீட்டுக்கு நீ பெங்களூர்லதான்
இருக்கேனு தெரியும் , இப்ப எல்லாம் லட்டு கொண்டுபோறது
இல்லையானு கூட கேட்டுருக்காங்க . அதனால நீ
போனா சந்தேகப்பட மாட்டாங்க . "
"நீ
என்ன வேணாலும் சொல்லு நான் போக மாட்டேன்
, இதோ இவனுக தான் குடும்பஸ்தன் ஆயிட்டானுகளே
? குடும்பமா போக சொல்லு , நான்
தனியா போறத விட இது
பெட்டர் ."
"கார்த்திக்
, சொன்னா கேளுடா , நீ போவேங்குற
நம்பிக்கைல, கீர்த்தனா கிட்ட சொல்லி அவங்க
வீட்டுல லட்டு கூட செய்ய சொன்னேன்டா , நீ
என்னடானா இப்படி பேசுற , பிரண்ட்டாடா நீ
? "
"இப்ப தான் காண்டாக்ட்
பண்ண முடியலைன்னு சொன்னா ? இப்ப
லட்டு செய்ய சொன்னேன்னு சொல்லுற ? நிஜமாவே
செய்ய சொன்னியா ? "
கூட
இருந்த மற்ற
சதிகாரங்களும் , அவசரம் அவசரமாக தலையாட்டி சொன்னார்கள்
, "இவன் சொல்லி இருக்கான் மச்சான் , எங்க கிட்ட கூட சொன்னான்".
லட்டின்
ருசியோடு , நட்புன்னா என்னனு தெரியுமா ? என்ற தளபதி வசனமும்
நினைவுக்கு வர " சரி போறேண்டா"
என்றேன் .
"நண்பேன்டா
நீ , இந்த ஊருக்கு போறதுக்கு
டிக்கெட் , காலைல பத்து மணிக்கு பஸ் புக் பண்ணியாச்சு
, நாளைக்கு காலைல அவங்க வீட்டுக்கு போற , எல்லாமே பிளான் பண்ணிட்டோம் கிளம்பு " . என்றான்
அருள்
.
" பெரிய
ரேஸ் பிளான்
, பஸ் டிக்கெட் முன்னாடி புக் பண்ணுறதெல்லாம் பிளானாடா ? " என்றபடி
கிளம்பினேன் .
அடுத்த
நாள் கீர்த்தனா வீடு , அருள் உண்மையைத்தான் சொல்லி இருக்கான் , தட்டு நிறைய லட்டு கீர்த்தனா
அம்மா கொண்டு வந்து "சாப்பிடு
தம்பி , அவங்க அப்பா வந்ததும் பேசிட்டு , மத்தியானம் சாப்பிட்டு
போவியமா " என்றார் .
"லட்டு
மட்டும் போதுங்க வீட்டுக்கு போகணும் ."
"அட
இருப்பா , கோயில் பார்த்துட்டு போவியாமா ", என்றபடி உள்ளே செல்ல .
ரகசிய
குரலில் கீர்த்தனா ஆரம்பித்தாள் , "கார்த்திக் எங்க அப்பா வரது
உங்கிட்ட விசாரிக்கத்தான் . அதுக்கு முன்னாடி நான் வீட்டை வீடு
ஓடிடனும் " என்றாள் .
"கீர்த்தனா
, அத நான் சொல்லணும் , நீயும்
அருளும் என்னமோ பண்ணுங்க , வந்து பார்த்தாச்சு , நீ குத்து கல்லாட்டம்
நல்லா தான் இருக்க , வந்ததுக்கு
லட்டை சாப்பிட்டு போயிட்டே இருக்கேன்" .
"விளையாடாத
கார்த்திக் , நான் வீட்டை வீட்டு
ஓடப்போறேன் , அதுக்குத்தானே நீ வந்திருக்க ,மத்தவங்க
எல்லாம் சொன்ன எடத்துல தான இருக்காங்க ? , நாம
போய் ஜாயின் பண்ணிக்கலாம் ."
"என்னது
வீட்டை விட்டு போறியா ? அடிப்பாவி இதுதான் அவனுக சொன்ன பிளானா , இங்க
பாரு எனக்கொண்ணும் தெரியாது , நீ வேணா ஓடிப்போ
, நான் நடந்து தான் போவேன் , லட்டு
சாப்பிட வந்தது ஒரு குத்தமா ?"
கோவத்துடன்
அருளுக்கு போன் பண்ணினேன் , பய
புள்ள , ஒரே ரிங்கில் எடுத்தான்
, "என்ன
விளையாடுறீங்களாடா ? உன் லவ்வுக்கு நீதான்
ஓடணும் , நான் எதுக்கு டா
ஓடணும் ?"
" மச்சி எல்லாமே பிளான் பண்ணிட்டம்டா , கார் கூட ஏற்பாடு பண்ணியாச்சு , நீ கூட்டிட்டு வந்தது
ரயில்வே ஸ்டேஷன்ல விட்டா போதும் , டிரைன்
டிக்கெட் கூட புக் பண்ணிட்டம்டா
, அவங்க ஏரியால இருந்து , ரயில்வே ஸ்டேஷன்க்கு , மெயின் ரோட்டுல வராம மாத்தி வரதுக்கு உனக்குத்தான் தெரியும் , முன்னாடி சொன்ன ஒத்துக்க மாட்டேன்னுதான் இப்ப சொல்லுறேன் , காப்பாத்துடா"
என்று அழ ஆரம்பிக்க , என்
முன்னால் கீர்த்தனா அழுக ஆரம்பித்தாள் .
போனை
வைத்து விட்டு நிலவரம் கலவரம் ஆவதை உணர்ந்து , பல்லை
கடித்துக்கொண்டே கேட்டேன் , "என்ன பிளான் ?
"நீ
கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு முன்னாடி பஸ் ஸ்டாப்க்கு போ
, அதுக்கு பக்கத்துல இருக்க என் பிரண்ட் வீட்டுல
ஏற்கனவே என் பேக் எல்லாம்
கொண்டு போய்
வெச்சுட்டேன் , அவங்க வீட்டுலயும் எல்லாரும் கோயில்ல இருப்பாங்க , அங்கிருந்து
கார் ஏற்பாடு பண்ணி இருக்கு , போயிரலாம்" என்றாள் கீர்த்தனா . எனக்கு
உதற ஆரம்பித்தது .
எடுத்த லட்டையும் தட்டில் போட்டு விட்டு , எழுந்து
போறதுன்னு நீ தனியா போக
வேண்டியதுதானே என்று
கேக்க நினைக்கையில்
, அவள் அம்மா வந்தார் . நான்
பேந்த பேந்த முழிக்க ,
"கோயிலுக்கு போயிட்டு , அப்படியே
வீட்டுக்கு போறானாம் அம்மா " என்றாள் கீர்த்தனா .
"அப்படியா
தம்பி கோயில்ல தான் அவங்க அப்பா
இருக்காரு , நான் கூப்பிட்டு சொல்லுறேன்
, லட்டு
கொண்டு போவியாமா" என்று ஒரு டிபன் போஸ்
நிறைய போட்டு கொடுத்தார் .
"எப்படியும்
தர்ம அடி வாங்க போறோம்
, லட்டு சாப்பிட்டுட்டே வாங்கலாம் , என்று நினைத்துக்கொண்டு , சீக்கிரம் வா " என்று
கீர்த்தனாவிடம் சொல்லிவிட்டு நடுக்கத்துடன் பைக்கில் பஸ்
ஸ்டாப் வந்தேன் .
கார்
நின்று கொண்டு இருந்தது , இரண்டு தெரு தள்ளி இருக்கும்
பள்ளி முன் வண்டியை நிறுத்திவிட்டு
,மறக்காமல் லட்டு பாக்ஸ்ஸை எடுத்துக்கொண்டு கார்
பக்கம் வர கீர்த்தனா வந்து
சேர்ந்திருக்க வில்லை . கார் சாவி உள்ளே
இருந்தது .
சாவிய
வைத்து விட்டு டிரைவர்
எங்கே போனார் , என்று தேடுகையில் , அவசரம் அவசரமாக பேக் உடன் வந்தால்
கீர்த்தனா .
"எல்லாம்
பிளான் படி நடந்துருச்சு , எங்கம்மா
உள்ள போனதும் ஓடி வந்துட்டேன்
, சீக்கிரம் வண்டி எடு" என்றாள் .
எனக்கு
இதயம் படாரென்று வெடித்தது , "என்னது வண்டி எடுக்கிறதா ? டிரைவர்
எங்க ?"
"டிரைவர்
இருந்தா நீ எதுக்கு , டிரைவர்
எல்லாம் இல்லை ,அவரு நிறுத்திட்டு எப்பவோ
போய்ட்டார் , ரயில்வே ஸ்டேஷன்ல வாங்கிக்குவாங்க
, அதுதானே பிளான் ?"
"உங்க
பிளான்ல தீய வச்சு எரிக்க
, எனக்கு கார் ஓட்ட தெரியாது
கீர்த்தனா."
"தெரியாதா
??? எனக்கு
அழுகை வருது கார்த்திக் , நீதானே ரேஸ் பத்தி எல்லாம்
எழுதி , போட்டோ போட்ட இப்ப தெரியாதுங்குற ? அருள்
உன்கிட்ட முன்னாடி சொல்லாதது தப்புதான் , ரிவென்ஜ் எடுக்கணும்னு பார்க்காத , சீக்கிரம் வேண்டிய எடு ".
"கீர்த்தனா,
நின்னுட்டு இருக்க வண்டில போட்டோ எடுத்துதானே போட்டேன் , ஓட்டுற மாதிரி வீடியோ போட்டனா ? எனக்கு
சத்தியமா கார் ஓட்ட தெரியாது
. இப்பவும்
ஒன்னும் பிரச்சனை இல்லை , நீ வீட்டுக்கு போ
, நாளைக்கு இதே
பிளான் டிரைவர் வெச்சு பண்ணிக்கலாம்" .
"மாட்டுனோம்
கார்த்திக் , நாளைக்கு எல்லாம் போக முடியாது , நான்
லெட்டர் எழுதி வெச்சுட்டு வந்துட்டேன் , இந்நேரம் பார்த்திருப்பாங்க . என்ன பண்ணுறது" என்றாள்
.
"இப்ப
கேளு , இதை முன்னாடி கேட்டிருக்கணும்
, இரு பைக்ல மெயின் ரோட்டுக்கு போய் ஒரு டாக்ஸி
பிடிச்சுக்கலாம் , இங்கயே இரு , பைக் எடுத்துட்டு வந்துறேன்"
.
தெருமுனையை நல்ல
வேளை அவசரமாக திரும்பவில்லை , கிட்டத்தட்ட 150 கிலோ இருக்கும்
உருவம் , மேல உக்காந்திருக்க பாவமாய்
நின்று இருந்தது பைக் . சுத்தி நாலு பேர் , எல்லா
பக்கமும் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தார்கள் . லெட்டரை பார்த்து விட்டார்கள் போல .
திரும்பி
கார் நோக்கி வர ,"சேகர் அண்ணா ,பாருங்க கார்த்திக் கூட வந்துட்டான்"என்று
கேட்டது கீர்த்தனாவின்
உற்சாக குரல் .
பயம்
கண்ணை கட்ட, "டேய் , மாட்டிகிட்டோம் ஒடுங்கடா என்று செய்தி அனுப்பி , டெலீட் செய்து விட்டு , வியர்வை ஊற்றெடுத்து வழிய , மெதுவாய் அருகில் போனேன் .
"கார்த்திக் , சேகர் அண்ணாவை பார்த்ததும் தான் மூச்சே வந்துச்சு , சின்ன
வயசுல இருந்தே அண்ணா , அப்பா வேணான்னு சொன்னாலும் சப்போர்ட் பண்ணி பேசுவார் அண்ணா
ரொம்ப சாப்ட் தெரியுமா ?
"லெட்டரை
அண்ணாதான் பார்த்தாங்கலாம் , அப்பா பார்க்கலையாம் .கொஞ்ச
நாள் போகட்டும் , அப்பா கிட்ட பேசி , புனே அனுப்பி வைக்குறேன்
, அதுக்கப்புறம் கல்யாணத்த பத்தி ஒரு முடிவெடுக்கலாம்னு சொல்லிட்டார் . இன்னைக்கு
தப்பிச்சோம் , நான் எல்லாத்தையும்
சொல்லிட்டேன் நீயும்
எங்க பிளான் தெரியாம சேர்ந்து மாட்டி இருப்ப. "
"அண்ணா சொன்ன மாதிரி நீ அப்பாவை பார்க்காம
போனா சந்தேகம்
வந்திரும் வா வீட்டுக்கு போயிட்டு
போயிரலாம் , அருளுக்கும் , மத்தவங்களுக்கு கூட ஆள் அனுப்பி
புனே போக சொல்றேன்னு சொல்லிட்டார்
என்று பட படவென்று பேசிக்கொண்டே
போனாள் கீர்த்தனா ".
கீர்த்தனா
பெரிய பைத்தியமா , இவளையும் லவ் பண்ணின அருள்
பெரிய பைத்தியமா , இல்லை இவர்கள் காதலுக்காக லட்டிற்கு
ஆசைப்பட்டு தூது வந்த நான்
பெரிய பைத்தியமா , நான்தான்
என்று நொந்துகொண்டு பார்க்க
"அய்யா வீட்டுல இருந்து குடோனுக்கு போய்ட்டார் , பாப்பாவை வீட்டுல விட்டுட்டு , நம்ம குடோனுக்கு போயிரலாம்
என்ன சொல்லறீங்க" என்றார் சேகர் .
ஆகா
, கிடாவெட்டுக்கு குடோன்னு முடிவு பண்ணிட்டானுக , சேர்ந்து மாட்டுனம்னா இன்னைக்கு எல்லாத்துக்கும்
பொங்கல் தான் என்று எண்ணிய
படி கீர்த்தனாவை பார்க்க மரண
சாசனம் எழுதி விட்டு பாப்பா பராக்கு பார்த்து கொண்டு இருந்தது .
கீர்த்தனாவை
விட்டு விட்டு சிறிது தூரம் திரும்பியதும் "அப்புறம் "என்றார் சேகர் .
"அண்ணா
எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கண்ணா , பொண்ணை எல்லாம் தூக்கிட்டு வரலைங்க அண்ணா , நான் தூக்கிட்டு வந்தது
லட்டு மட்டும்தான் , அதுவும் அவங்களா தான் கொடுத்தாங்க .
நீங்க வேணா லட்டை வச்சுக்கோங்க
என்னை விட்டுருங்க" என்று
பரிதாபமாக சொன்னேன் .
"பாப்பா
பேசுனதுல உங்களுக்கு தெரியலைனு
தெரியுது , ஊரை தாண்டி இருந்தா,
பாப்பாவை விட்டுட்டு மத்தவங்களை அறுத்து
போட்டுருங்கனு அய்யா சொல்லி இருந்தார் , சின்ன பசங்களா இருக்கீங்க , பாப்பா தான் வீட்டுக்கு போயிருச்சே , அவங்க
அம்மாக்கு கூட தெரியலை , அதனால்
பிழைச்சீங்க. பைக் நிறுத்திய இடம்
வந்திருச்சு வீட்டுக்கு போங்க , இந்த பக்கம் வராதீங்க
, அந்த
தம்பிககிட்ட ஊரை பார்த்து போக சொல்லிருங்க
" என்றார்
.
தப்பித்தோம்
பிழைத்தோம் ,என்று பைக்கை எடுக்க
, சேகர் அண்ணாவின் குரல் கேட்டது , "லட்டை விட்டுட்டு போறீங்க " .
வாங்க
வில்லையென்றால் , குடோனுக்கு கூட்டிட்டு போய் விடுவாரோ என்று
வாங்கி கொண்டு போகையில் கசக்க ஆரம்பித்தது "லட்டு " .
பின்குறிப்பு
: ஐந்து வருட போராட்டத்திற்கு பிறகு
, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து
அருளும் , கீர்த்தனாவும் இப்போது அமெரிக்கா - நார்த் கரோலினாவில்
.பிறக்கப்போகும் பேத்தியை பார்ப்பதற்கு , கீர்த்தனாவின் அம்மாவும்
, அப்பாவும் , வந்திருக்கிறார்களாம் .
"லட்டு செய்யலாம்னு அத்தை சொன்னாங்க வரியா" என்று அருள் மெசேஜ் அனுப்பினான் . என்னதான் இருந்தாலும் , "லட்டு
................".
No comments:
Post a Comment