Friday, March 18, 2022

படித்ததில் பிடித்தது

 

   RUDYARD KIPLING   

If you can keep your head when all about you   
    Are losing theirs and blaming it on you,   
If you can trust yourself when all men doubt you,
    But make allowance for their doubting too;   
If you can wait and not be tired by waiting,
    Or being lied about, don’t deal in lies,
Or being hated, don’t give way to hating,
    And yet don’t look too good, nor talk too wise:

If you can dream—and not make dreams your master;   
    If you can think—and not make thoughts your aim;   
If you can meet with Triumph and Disaster
    And treat those two impostors just the same;   
If you can bear to hear the truth you’ve spoken
    Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to, broken,
    And stoop and build ’em up with worn-out tools:

If you can make one heap of all your winnings
    And risk it on one turn of pitch-and-toss,
And lose, and start again at your beginnings
    And never breathe a word about your loss;
If you can force your heart and nerve and sinew
    To serve your turn long after they are gone,   
And so hold on when there is nothing in you
    Except the Will which says to them: ‘Hold on!’

If you can talk with crowds and keep your virtue,   
    Or walk with Kings—nor lose the common touch,
If neither foes nor loving friends can hurt you,
    If all men count with you, but none too much;
If you can fill the unforgiving minute
    With sixty seconds’ worth of distance run,   
Yours is the Earth and everything that’s in it,   
    And—which is more—you’ll be a Man, my son!

Sunday, January 30, 2022

Bronze Clipper Barber Shop -அரை நூற்றாண்டு அனுபவம்

 முடி வெட்டிக்கொள்வது என்பது  நினைவு தெரிந்த நாளில் இருந்தே இருக்கும் ஒரு அருமையான  அனுபவம் . பெரும்பாலும் வீட்டில் இருந்து நடக்கும் தூரம் இருக்கும் கடைக்கே கூட்டிப்போவார்கள் என்றாலும் அப்பாவுடன் பேசிக்கொண்டே நானும் எனது தம்பியும் போன நாட்கள் சுகமானவை .  


கடையின் பெஞ்சுகளில் இறைந்து கிடைக்கும் நாளிதழ்களும் , அதன் பக்கங்களை தேடித்  தேடி சேர்த்து படிப்பதும்  , இவை நடுவே  நிற்காது ஒலிக்கும் இளையராஜா பாடல்களும் , எங்கு திரும்பினாலும் சுவரில் நிறைந்து இருக்கும் கண்ணாடிகளும் , தரையில் இருக்கும் முடிகளில் கால் படமால் குதித்து, சுத்தும் நாற்காலியில் உட்காரும் சிறிய சாதனையும் , முடிக்கு தண்ணீர் தெளிக்கும் போது வரும் சிலிர்ப்பும் , சீப்பும் , கத்திரிக்கோலும் காதருகே உரசுவதால் வரும் சத்தத்தில் உண்டாகும் சிலிர்ப்பை தாண்டிய கிறக்க நிலையும்,  முடிவெட்டிக் கொள்ளும்போது மட்டுமே கிடைக்கும் அரிய அனுபவம் .


நாட்கள் செல்ல செல்ல அனைத்தும் உருமாறிப் போனதில்  , முடி வெட்டுவதும் மாறிப்போனது , அமெரிக்கா வந்தபின் (இப்போது இந்தியாவிலும் ) கத்திரிக்கோல் சத்தமே கேட்க முடியாமல் போனது  .முடி வெட்டும்போது  "கிர் ,கிர், கிர்" என  கேட்கும் இயந்திர சத்தம்  தொடங்கிய  வேகத்திலேயே  முடிந்து விடும் .


முடி வெட்டிய திருப்தியே இருக்காது . "இப்பத்தாண்டா உட்கார்ந்தேன்,  அதுக்குள்ள எந்திரிக்க சொல்லறீங்க "என்று கேட்டால் , பிறகு தலையில் முடி வளரும் வரை கண்ணாடியில்  பார்க்க முடியாது ,போட்டு கரண்டி விடுவார்கள் .மொட்டை அடித்து ஒருவாரம் ஆன அளவுதான் முடி இருக்கும் .


பழைய அனுபவம் திரும்பவும் கிடைக்க  நானும்  மாற்றி மாற்றி கடைகளுக்கு சென்று பார்த்து விட்டேன் . மத்திய கிழக்கு  நாட்டினர் வைத்திருக்கும் கடைகளில் சிறிது இந்த அனுபவம் கிடைக்கும் ஆனால் அதற்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தேடிச் செல்ல வேண்டும் . நான் வசிக்கும் இடத்தில இருந்தும் குறைந்தது ஒரு மணிநேரமாவது காரில் சென்றால் அங்கு போகலாம் .போக வர , அங்கு செலவிடும் நேரம் என குறைந்தது  மூன்று மணிநேரமாவது ஆகும் என்பதால்  "கிர் கிர் கிர் " சத்ததுடன் ஐந்து நிமிடம் செலவிட்டு வந்தேன் .





இந்த நிலையில்  " Barber shop " என்று மட்டுமே பெயர் கொண்ட ஒரு கடையை  காண நேர்ந்தது . விதவிதமாய் முடிவெட்டும் கடைகளுக்கு  பெயர்கள் உள்ள அமெரிக்காவில் இப்படி ஒரு இடமா ? என்னதான் இருக்கும் என்று உள்ளே போனால்   ஒரு அறுபது வருடம் பின்னால் போன அனுபவம்  , காலச்சக்கரம் அந்த கடைக்குள் சுழலவே இல்லை . 1960  களில் அமெரிக்க முடிவெட்டும் கடைகள் இப்படித்தான் இருந்திருக்கும் , இப்பொழுதும் அந்த கடை அப்படியே உள்ளது .








                                             



கடை முழுவதும் மர சுவர்கள் , வருபவர்கள் அமருவதற்காக மர நாற்காலிகள் , நல்ல எஃகில்  நகர்த்த முடியாத அளவு  சுழலும் நாற்காலிகள் முடி வெட்டுவதற்கு , இடைவெளிவிட்டு நாற்காலிகளுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிகள் , அவைகளுக்கு  இடையே விளக்குகள் , முன்பு  அதனில் எண்ணெய்  ஊற்றி வைத்திருந்து விளக்கு எரிப்பார்களாம்  , இப்பொழுது அலங்காரமாய் இருக்கிறது. 


சுவரில் ஆங்காங்கே மாட்டப்பட்டிருக்கும் பல்வேறு சமயங்களில் கொடுத்த பட்டயங்கள் , கோல்ப் குச்சிகள் என அது ஒரு  சிறு உலகம் .இந்தக்கடை பழமை மாறாமல் இருப்பது மட்டும் இல்லாமல் மெருகு குறையாமல் இருக்கிறது . எந்த அளவு பராமரித்தால் இப்படி இருக்கும் என வியப்பாக இருந்தது .


இதை கடையின் ஈர்ப்பு அங்கு உள்ள தொலைக்காட்சியில் ஓடும் கருப்பு வண்ண பழைய படங்கள் .


இரண்டு இளைஞர்கள்  கடையில் இருக்கிறார்கள்  . வயது குறைந்த Orie  இதன் உரிமையாளர் இவருடன்   சற்றே வயது அதிகமான john  . Orie யின் வயது அதிகமில்லை 86 தான். John னின் வயது 68 . நான் தான் வயது குறைவனானவன் என்று சொல்லி சிரிக்கிறார் Orie .


முழுக்கை சட்டையுடன் கழுத்து வரை பட்டன் போட்டிருக்க , அதை டக்கின் செய்து , பெல்ட் , வாட்ச் , லெதர் காலனி என  போர்டு மீட்டிங்கிற்கு போவது போல முடி வெட்ட வரும் வாடிக்கையாளர்களை இங்குதான் பார்க்க முடியும் . நான் பார்த்த வரை இந்த கடைக்கு வருபர்கள் அனைவருமே இப்படித்தான் வருகிறார்கள் .குறைந்தபட்சம் 60  வயது இருக்கும் அமெரிக்கர்கள் .


என்ன மாதிரி வெட்ட வேண்டும் என்று  கேட்டு,நாற்காலியில் அமரச் செய்து  , பிளாஸ்டிக் குடுவையில் உள்ள தண்ணீரை பீச்சுகிறார் ஜான் . சிறுவயதில் ஏற்பட்ட அதே சிலிர்ப்பு .


"scissor or machine"  என  அவர் கேட்டதும் , "scissor, scissor, scissor  " என்று மூன்று முறை கூறி விட்டேன் .


காதருகே சீப்புடன் , கத்திரிக்கோல் உரசும் சத்தம் , முடி வெட்ட வெட்ட தலையை சீப்பால் அவர் சீவ ,நினைவுகள் பின்னோக்கி போக  பத்து வயது சிறுவனாக அமர்ந்திருந்தேன் .


அவர்கள் இருவருடன் உரையாடல் ஆரம்பித்தது , எதிர் இருந்த தொலைக்காட்சியில்  1950 களின் கருப்பு வண்ண படம் ஓடிகொண்டுஇருந்தது . இரண்டு காவலர்கள் இடிந்திருந்த வீட்டில் இருந்து ஒரு சிறுமியை   எடுத்து வந்து காரில் போனார்கள் , அவர்களில் ஒருவர் கதாநாயகன் .குழந்தையின் பெற்றோரை காணவில்லை , எதுவோ இழுத்துக்கொண்டு போயிருந்தது , சிறுமிக்கு  சொல்லத் தெரியவில்லை , பிரமை பிடித்து  பேச்சு போய்விட்டிருந்தது .




நான் இப்படி ஒரு கடையை அமெரிக்காவில் பார்த்தது இல்லை  என்று  சொன்னதும் , இதே இடத்தில் நான் 51  வருடங்களாக கடை நடத்துகிறேன் என்றார் ஓரி .


மிச்சிகனில் இந்த வருடம் அடிக்கும் குளிர் , கடந்த வருடங்களில் வந்த பனிப்புயல்கள்    என  பேச்சு கொடுத்துக்கொண்டே  பொறுமையாக ஒவ்வொரு  முடியாக எடுத்து வெட்டிக்கொண்டிருந்தார் ஜான்.


படத்தில் , சிறுமியின் பெற்றோரை எதுவோ ஒரு விலங்கு இழுத்து போய்விட்டிருக்கிறது என காலடித் தடத்தின் மூலம் கண்டு பிடித்தார்கள் . அது புது மாதிரியாக இருக்கவே , நாட்டின் மூத்த அறிவியல் அறிஞர் வந்து பார்த்து அவருக்கும் பிடிபடாமல் போக , ஆப்பிரிக்காவில் விலங்குகளை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் அவரின் மகளை அழைக்கிறார்  ஹீரோயின் அறிமுகம் .


அடுத்தது என்ன என்று பார்க்கையில் ,தொலைக்காட்சியை  மறைத்துக்கொண்டு இரண்டு அடி முன் சென்று  என் தலை வரை குனிந்து , சீப்பை வைத்து அளவு பார்க்கிறார் ஜான் . திருப்தி அடையாமல் மறுபடியும் வெட்ட ஆரம்பித்தார் .


நான் 1984 இல் தான் பிறந்தேன் என்பதை  கேட்டு அறிந்ததும் , 80 கள் தான்  அமெரிக்காவின் , அமெரிக்க படங்களின், அமெரிக்காவில் வெளிவந்த பாடல்களின்  பொற்காலம்  என்று ஓரியும் , ஜானும் ஒருமித்த கருத்தில் சொன்னார்கள்,   . நமது தமிழ் படத்தை போல இங்கயும் ஒரு இளையராஜா இருந்திருப்பார் போல .


படத்தில் கதாநாயகி புயலாக வேலை செய்து , அந்த விலங்கு ஏதோ ஒரு காரணத்தால் மிகப்பெரிதாக வளர்ந்த எறும்பு என்று கண்டுபிடிக்கிறார் , அது மனிதர்களை சிப்ஸ் சாப்பிடுவதை போல தின்று எலும்புகளாக துப்புகிறது , அதன் கூட்டை கண்டுபிடித்து அழித்து விட்டு  பிரச்னை இல்லை என்று நினைக்கையில் , முட்டை ஓடுகளை வைத்து  இன்னும் நிறைய எறும்புகள்  இருக்கின்றன அன்று கண்டு பிடிக்கிறார் கதாநாயகி .

 அதுவும் பிறந்தவை ராணி எறும்புகள் என்று அவர் கண்டு பிடித்ததும் உயர்மட்ட ராணுவ கூட்டம் கூட்டப்படுகிறது .


மறுபடியும் தொலைக்காட்சியை மறைத்துக்கொண்டு ஜான் . இந்த முறை அளவு பார்த்ததில் அவருக்கு முழு திருப்தி .


"எப்படி ? " என்று அவர்  கைக்கண்ணாடியை   கொண்டு வந்து காண்பிக்க எனக்கு எந்திரிக்கவே மனசு இல்லை . அருமையாக உள்ளது என்று சொல்லிவிட்டு ."முகச்சவரம் செய்வதாக போட்டிருக்கிறதே செய்வீர்களா ?" என்று கேட்டேன் .


எனக்கு கை நடுங்கும் அதனால் ஓரி தான் செய்வார் என்றார் ஜான் .


86  வயது மனிதர் கத்தி பிடித்து முகச்சவரம் செய்கிறாரா ? என்று  ஆச்சிரியமும் கூடவே  சிறிது  பயமும்  இருந்தாலும் ஓரியிடம் சென்று அமர்ந்தேன் .


சுழலும் நாற்காலியை அப்படியே மடக்கி மல்லாக்க போட்டு , மிகவும் சூடான துண்டை முகத்தில் போட்டு ஐந்து நிமிடம் விட்டு விட்டார் . வெளிய அடிக்கும் குளிருக்கு மிக இதமாக இருந்தாலும் படத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியவில்லை என ஒரு சிறு கவலை .


அந்த கவலையை போக்கும் வண்ணம் , படத்தில் வரும் வசனங்களை மாறி மாறி சொல்லிக்கொண்டு இருந்தனர் ஓரியும் , ஜானும் . எத்தனை தடவை பார்த்திருப்பார்களோ தெரியவில்லை . தற்போதைய படங்களில் வரும் கதாநாயகியின் பாத்திர படைப்பு பழைய காலங்கள் போல  வலிமை வாய்ந்ததாக இல்லை என்ற கருத்தையும் பதிவு செய்தனர் .


பின்  சோப்பை தேய்த்து அவர் சவரம் செய்ய, அவர்  கையில் துளி நடுக்கம் இல்லை . கத்தியை வைத்ததும் தெரியவில்லை எடுத்ததும் தெரிய வில்லை . மிகவும் மென்மையாக சவரம் செய்வதே  தெரியாமல் செய்து முடித்தார் .அப்படி ஒரு தொழில் நேர்த்தி  .


                                                         Mr. Orie 



                                                        Mr,John




நாற்காலியில் இருந்து எழுந்து படத்தை பார்க்க , ராட்சச எறும்புகள்  ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தன . படத்தை  மீறி  எப்படி இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என்ற ஆவல் உந்தித்தள்ள , அவரிடமே கேட்டேன் ,  "உங்கள் இளைமையின் ரகசியம் என்ன " ?  என்று . 


அவர்கள் சொன்ன பதிலின் தொகுப்பு .


1. எங்கள் வேலையில் அழுத்தம் என்பது இல்லை .

2.ஒரு நாளின் குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலை செய்வோம் , நேரம், காலம் தெரியாமல் நாங்கள் உழைப்பது  இல்லை 

3.எங்கள் வேலையின் நடுவே மீட்டிங் என்பது  இல்லவே இல்லை .

4 . எங்கள் வேலை நாங்கள் எப்போது முடிந்தது என்று சொல்கிறோமோ அப்பொழுதுதான்  முடியும் (There is no Deadline .)

5 . எங்கள் தொழிலை நாங்கள் விரும்புகிறோம் ஆனால் கடையை அந்த நாளில் மூடிவிட்டால் , பின் அதைப் பற்றி கவலை பட மாட்டோம் , மீதி நேரத்தில் எங்களுக்கு பிடித்த செயல்களை செய்வோம் . .

6 . நாங்கள் நிறைய நேரம் நின்று கொண்டு இருப்போம் , நிற்பதோடு இல்லாமல் அசைந்து கொண்டு இருப்போம், எங்கள் வேலையின் தன்மை அப்படி . அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் .


நான் டென்ஷனாக இருக்கும் ஒரே நேரம் ,நான் இந்த கடைக்கு வாடகை கொடுப்பது தள்ளிப்போகும் போதுதான் , அது எப்போவாவது நடக்கும் என்று சொல்லிச்  சிரிக்கிறார் ஓரி .


நீங்கள்  மிச்சிகனில் இருந்தால் ஒரு எட்டு  Farmington Hills இல் உள்ள இந்த கடைக்கு போய் வாருங்கள் . அவர்கள் இருவரது வயதையும் சேர்த்து 154  வருடங்களுக்கான உலக அனுபவங்களின் தொகுப்பும் கூடவே போனசாக முடி வெட்டுவதும் நடக்கும்.

தொழிலை வைத்து மனிதர் இல்லை , உயரிய ஆளுமைகள் நம்மிடம் எங்கேயும் இருக்கலாம் , நாம் தான் அதை பல சமயங்களில் உணருவதில்லை .


சொல்ல மறந்து விட்டேனே நன் பார்த்த அந்த படம் 1954 ல் வெளிவந்த  Science  fiction Horror திரைப்படம் "Them ". 








Saturday, January 29, 2022

எல்ஜராது - சிங்கை நூலகம்

 




ஜனவரி 2020 - கொரோனா சீனா தாண்டி பரவ ஆரம்பித்திருந்த நேரம் . என்னென்ன மாதிரியான கொள்ளை நோய்கள் உலகில் வந்திருக்கின்றன என தேடிப் பார்க்கும் போது கண்ணில் பட்டது படை வெட்டுக்கிளிகள் . எகிப்தை தாக்கிய 10 பெரும் கொள்ளை நோய்களுள் ஒன்றாக “Book of Exodus” இல் சொல்லப்பட்டிருக்கும் இவை , பைபிளிலும் , குரானிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவு வெவ்வேறு  காலங்களில் வெவ்வேறு பகுதிகளில்  மக்களை தாக்கியிருக்கிறது 


. இந்த படை வெட்டுக்கிளிகள் எப்படி உருவாகிறது , தன்னை எப்படி மாற்றிக் கொள்கிறது ,கூட்டாக எவ்வாறு செயல் படுகிறது என்பதை படித்ததனில் உண்டான வியப்பில் உருவானது இந்த நாவல் .


 "Scientific Thriller "- வகையில், "Mother of Mankind " - நாடுகளை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த கதை 

கோவையில் இருந்து தொடங்கும் இந்த கதை , ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் பயணப்பட்டு , கேரளாவில் முடிகிறது ,  "Scientific Thriller "- வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்த கதை  படிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தையும், அறிந்திராத தகவல்களையும் இந்த நாவல் தரும் என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்டது இந்த  "எல்ஜராது".


இது ஆகஸ்ட் 2020  இல்  அமேசான் தளத்தில் வெளிவந்தது , வெளிவந்து 18  மாதங்களில் கொரோனா, வேலை என்று நான் கிட்டத்தட்ட இதனை மறந்திருந்த நிலையில்  சிங்கை நூலகத்திற்காக (singapore  public  library ) அச்சடிக்கப்பட்ட புத்தகங்களாக வாங்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .


இது அமேசான் இந்தியா 


https://www.amazon.in/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-Tamil-Vinodh-chandar-ebook/dp/B08FMRVSNT/ref=mp_s_a_1_2?crid=2F1NEJ2C1L1OE&keywords=vinodh+chandar&qid=1643471093&sprefix=vinodh+chandar%2Caps%2C344&sr=8-2


 அமேசான்  அமெரிக்கா , 

https://www.amazon.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-Tamil-Vinodh-chandar-ebook/dp/B08FMRVSNT/ref=mp_s_a_1_3?crid=189S89VIEIJLE&keywords=vinodh+chandar&qid=1643471182&sprefix=vinodh+chandar%2Caps%2C221&sr=8-3


மற்றும் அமேசான் புத்தகங்களை வெளியிடும் பல நாடுகளில் kindle  மூலம்  கிடைக்கிறது .

Friday, July 9, 2021

யாதுமாகி -12

 மகள் பிறந்ததும் 

உதயமாகும்  

தந்தையின்  

பிறப்பு 

மகள் வளர்ந்து 

உலகம்  பார்க்க 

பிறந்த கணத்தில் 

உறையும் 

தந்தை  !


   -பாவி 

Tuesday, June 15, 2021

கலைஞரின் எளிய மக்களுக்கான மனிதநேய திட்டங்கள்

 கலைஞர் சாதனைகளின் தலைவர் ,62 ஆண்டுகள் சட்டமன்றப் பணி 50 ஆண்டுகள் கட்சியின் தலைவர் பணி, 5 முறை முதலமைச்சர் பணி, 13 முறை சட்டமன்ற உறுப்பினர் . இத்தனை பணிகளுக்கிடையே . நாடகம், திரைப்படம், இலக்கியம், ஊடகம், சின்னத்திரை, அரசியல் களம் என அவர்  முத்திரை பதிக்காத துறையே இல்லை  . 


இத்தனை செயல்கள் செய்த போதும்   அவர் எளிய மக்களுக்கான மனிதநேய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தினார் , கலைஞர் என்பது கட்டமைக்கப்பட்ட பிம்பம் இல்லை , தமிழகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கான வளர்ச்சியை தனது திட்டங்களால் கட்டமைத்ததனால் உருவான பிம்பம் ,  அவைகளை பற்றிய சிறு குறிப்புகள் 


தனியார் வசம் இருந்த பேருந்து  போக்குவரத்தை 1972ல் அரசுடமையாக்கினார். நாட்டிலேயே முதன்முறையாக அரசு போக்குவரத்து கழகங்களை உருவாக்கினார். கிராமங்களுக்கும் பேருந்துகள்  இயக்கப்பட்டன.


மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார் 


பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம், குடிசை மாற்று வாரியம், , குடிநீர் வடிகால் வாரியம் போன்றவற்றை உருவாக்கியது கலைஞர். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு நல வாரியத்தை உருவாக்கினார் . மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள். வார்த்தைகளை மட்டுமன்றி  அவர்களின் வாழ்க்கையையும் மாற்றியவர்.


1989ல் பெண்களுகள் பொருளாதாரத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது பெண்கள் சுய உதவிக் குழுக்கள். இதன் மூலம் தமிழகத்தில் பெண்களால் சுய தொழில்கள் உருவாகி சமூகமாற்றத்தை ஏற்படுத்தின .


இந்தியாவிலேயே முதல் முதலாகப் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் சமப்பங்கு உரிமை அளிக்கும் சொத்துரிமைச் சட்டத்தை 1989 இல் கொண்டு வந்தவர் கலைஞர். முன்னதாக அம்பேத்கரால் கொண்டு வரப்பட்ட பெண்கள் சொத்துரிமை மசோதா கடந்த 1956 இல் தோற்கடிக்கப்பட்டது. அதை பின்னால் வந்த கலைஞர் நடைமுறைப் படுத்தினார்.


சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கலைஞர் ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.


1996ம் ஆண்டில் நான்காம் முறையாகப்  முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளை அவர்களே சந்தையில் விற்று நேரடியாகப் பலன் பெறும் வகையில் உழவர் சந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்தார்


தொலைக்காட்சியின் மூலமாக ஒரு  சிலர் மட்டுமே அதிக விவரங்களை அறிந்தவர்களாக இருந்தனர் . அவர்கள் சொல்வதை கேட்டும் நம்பியும் வாழும் நிலைமையில் இருந்தனர் ஏழை எளிய மக்கள். இந்த நிலையில் கலைஞர்  அவர்களின் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டியின் மூலமாக ஏழை பணக்காரன் என்கிற பாகுபாட்டை உடைத்து அனைத்து மக்களும் தொலைக்காட்சியினை கண்டு விவரங்களை  அறிய வழிவகை செய்தார்



நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கலைஞர்  தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது


கலைஞர்  செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. 


கலைஞர்  ஆட்சியில்தான் மருத்துவமனைகளுக்கான உயர்ரக உபகரணங்கள் அதிகம் வாங்கப்பட்டன. சி.டி. ஸ்கேன் கருவிகள், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் கருவிகள், ரத்தப் பரிசோதனைகளைத் துல்லியமாக உடனுக்குடன் அறிய உதவும் செமி-ஆட்டோ அனலைசர் (Semi-Auto Analyser) கருவிகள், மருத்துவப் பரிசோதனைக்காக மனித உறுப்புகளை வண்ணத்தில் படம் பிடித்துக் காட்டும் கலர் டோப்லர் (Colour Doppler) கருவிகள் எல்லாம் அரசு மருத்துவமனைகளுக்கு வந்தன.  


மாவட்டம்தோறும் தலைமை மருத்துவமனைகள், தாலுகா அரசு மருத்துவமனைகளை கொண்டு வந்ததும் கலைஞரே. 3,000 க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்களை உருவாக்கினார். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 24 மணிநேர சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.



பள்ளி மாணவர்கள் தங்கள் கல்விக்காகப் பயணம் செய்வது சுமையாக இருக்கக்கூடாது என இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார் . தமிழகத்தில்தான் இப்படி முதல் முறையாக இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு பெரும்பயனாக இருந்தது . 


1971 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.கவின் ஆட்சிக் காலத்தில், மாநிலத்தின் முதல் வேளாண் பல்கலைக்கழகம் கோவையில் தொடங்கப்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கவும் முக்கிய பணிகளை மேற்கொண்டார்.


 அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றியது தலைவர் கலைஞர் அவர்கள். இதற்காக, 1970-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் நாள் தமிழகச் சட்டப் பேரவையில் ‘அர்ச்சகர் சட்டம்’ கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், அர்ச்சகர் தேர்வில் வெற்றி பெறும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கர்ப்பக் கிரகம் சென்று கடவுளுக்குப் பூசை செய்யும் வழங்கப்பட்டது. ஆலயங்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்களில், தாழ்த்தப்பட்டச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்பதை மரபாக மட்டுமே கொண்டிருந்த நிலையை மாற்றி, எந்தவொரு ஆலயத்து அறங்காவலர் குழுவிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் நிச்சயம் இடம்பெற்றாக வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.



ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான நடைமுறைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்ட கலைஞர், அரசு நிர்வாக வழங்கும் சேவைகள், தங்கு தடையின்றி விரைவாகவும், முழுமையாகவும் மக்களைச் சென்று அடைந்திட வேண்டுமென்ற நோக்கத்துடன், அரசுத் துறைகளை கணினிமயமாக்கினார்..


வருமுன் காப்போம் திட்டம்'  பல லட்சம் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ உதவியைப் பெற்றுத்தந்தது. இத்திட்டத்தின் மூலம் 2006 - 2011-ம் ஆண்டுகளில் 14 ஆயிரத்து 594 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன


1966-ம் ஆண்டுத் தமிழ்நாட்டில் 6,993 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. இவற்றில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 967 தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், 2010-ம் ஆண்டுத் தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 515 ஆக உயர்ந்தது. அவற்றில் வேலை பார்த்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 45 ஆயிரத்து 928 ஆக அதிகரித்தது. தி.மு.க அரசு கடைபிடித்த தொழிலாளர் கொள்கையும், தொழில் முனைவோருக்கு அளித்த பல்வேறு ஊக்கமும் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் பெருக காரணமாய் அமைந்தன.


ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் விதமாக, இவரது ஆட்சியில் 2008 செப்., முதல், 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

"The Common Sense” ஜூன் 2021 மாத இதழுக்கு எழுதிய தலையங்கம்

https://pascamerica.org/june2021/  


பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா அமைப்பின் “The Common Sense” மாத  இதழின் வாசகர்களுக்கு அன்பு வணக்கம். அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கருத்துக்களை அமெரிக்காவாழ்  தமிழர்களிடம்  தொடங்கப்பட்ட   இந்த அமைப்புக்கும், அமைப்பின் சார்பாக வெளிவரும் இந்த மாத இதழுக்கும் நீங்கள் தொடர்ந்து  அளித்து வரும் அன்பிற்கும், ஆதரவுக்கும்  நன்றி !  


 முத்தமிழ் அறிஞர்,  ஐந்து முறை தமிழ்நாட்டை ஆட்சி புரிந்தவர்,சமூகநீதி காவலர்  கலைஞர் அவர்களின் 97 வது பிறந்தநாள் சிறப்பு இதழாக இந்த மாத :The common Sense “ வெளிவருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.


பாரம்பரியம் ,கலாச்சாரம்  ஒழுக்கம் , கல்வித்தரம்  ஆகியவற்றில் நாங்கள்தான் முன்னோடி என்று கட்டமைக்கப்பட்ட சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவிகள், அந்தப் பள்ளியின் ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இரையான அதிர்ச்சியான செயல்கள்  வெளிவந்துள்ளது  .  


துறை ரீதியான விசாரணை தொடங்கும் போதே , பாதிப்பு அடைந்தவர்களுக்கு எந்த ஆறுதலும் கூறாமல் , அவர்களின் துணை நிற்காமல் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை சென்று இருப்பது , மாணவிகளை சீரழிக்கும் இந்த பள்ளிகள்  தேவையா என்று மக்களிடத்தில் கேள்விகளை எழுப்புகிறது . தமிழக அரசு இதன் முழு பின்னணியையும்   விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பெரியார் அம்பேத்கர் படிப்பு  வட்டம்  வலியுறுத்துகின்றது .



தமிழ்நாட்டு  அரசின் கொரோன பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் , தொடர்ந்து வரும் சமூகநீதி திட்டங்களுக்கான அறிவிப்புகளும்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  பத்து ஆண்டுகளுக்கு பிறகு  ஓங்கி ஒலிக்கும் மாநில உரிமை குரல்களும்  கலைஞர்  ஆட்சி தமிழ்நாட்டில் தொடர்வதை உறுதிசெய்கின்றது.



பெரியாரும் அண்ணலும் வகுத்துக்கொடுத்த பாதையில் நேர்மையாகவும் , வெளிப்படையாகவும் , தன்னாட்சியுடனும் தொடர்ந்து  செயற்பட தங்களின் மேலான ஆதரவையும் ஊக்கத்தையும் 

வழங்கிடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் . தங்கள் படைப்புகள் , கருத்துக்கள் , விமர்சனங்கள் , விளம்பரங்களை 'thecommonsense.pasc@gmail.com'  மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்துகொண்டால் மேலும் ஊக்கம் பெறுவோம் .



   

                                    வாழ்க தந்தை ! வாழ்க அண்ணல் !


                                      வளர்க பகுத்தறிவு ! செழிக்க மனிதநேயம் ! 

 

                                                                   நன்றி 


                                                                ஆசிரியர் குழு

Wednesday, June 9, 2021

நாத்திகர்கள் !!!

 தடுப்பூசி 

போட்டுக்கொள்ளும் 

ஒவ்வொரு பக்தர்களுக்கு 

உள்ளே 

வெகு பத்திரமாக 

காவல் வைக்கப்படுகிறான் 

ஒரு பகுத்தறிவாளன் 


                -பாவி 

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...