Sunday, November 3, 2019

“கண்ணா- லட்டு திங்க ஆசையா ?


2019  ஆண்டின் தீபாவளி நாள் . பேரரசன் நரகாசுரனை வாழ்த்தியும் , தீபாவளி வாழ்த்து சொல்லியும்  whatsup செய்திகள் வந்து கொண்டிருக்க , மதியம் ஒரு மணிக்கு , ஒரு கார்கள் கூட இல்லாத பார்க்கிங் லாட்களை பார்த்தபடி , நான்கு நாட்களுக்கு முன் செய்த  "காளிபிளார்" குழம்பை சாப்பிடலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்கையில் , லட்டு சாப்பிட வேண்டும் என்று கட்டுக்கடங்காமல் ஒரு வெறி வந்தது  "கார்த்திக்" ஆன  எனக்கு  , கூடவே வந்தது  "கீர்த்தனாவும்" , லட்டு கசந்த காரணமும் .

லட்டு - மனிதன் கண்டுபிடித்த அரும்பெரும் சாதனை , சின்ன சின்ன மாநில பூந்திகள் , வேற்றுமையில் ஒற்றுமை என்ற சர்க்கரைப்பாகினால்  ஒன்று சேர்ந்து உருவாகும் கூட்டாட்சி தத்துவம் .

சர்க்கரையை தண்ணீரில் கலந்தால் பாகாகி விடுமா ? ஒற்றுமை உணர்வு மேலோங்க , திணிக்காமல் , இனிப்பாய் கலந்து வர வேண்டும் , பதமாய் வந்த  பாகுவை  தண்ணிரில் போட்டால் கரையாமலும் , விரல்களில் எடுத்து பிரித்தால் மெல்லிய கயிறாகவும் வருவதை பண்ணி பண்ணி பூரித்துப் போன இளம்பருவ நாட்களில் இருந்து லட்டின் மேல் தீராக்காதல் .

கல்லூரி முடிந்து , தெருவுக்கு நூறு என்ஜினீயர்களும் ,எம்பிஎக்களும்  இருக்கும் பெங்களூரு நகரில்  , மூன்று  நண்பர்களுடன் இருக்கையிலும் காதல்  தீராமல்  , ஏன் இவ்வளவு பெரிய ஊரில் நல்ல லட்டு விற்கும் கடைகளே இல்லை என்று தேடிக்கொண்டு இருந்த  ஒரு வறட்சி காலம் .

அன்றும் ஒரு தீபாவளி முடிந்த ஞாயிறுதான் , வேலை காரணமாக ஊருக்கு போக முடியாமல் நான் இருக்க , நண்பர்கள்  போய்விட்டு வந்து , தத்தம் காதலிகளை சந்தித்து , காதலும் , இனிப்புகளும் ,பரிமாறிக்கொண்டு , வீட்டில் இனிப்புகளை போட்டுவிட்டு , காதலை கையுடன் எடுத்து மாலுக்கோ ,சினிமாவுக்கோ சென்று இருந்தார்கள் .

தூங்கிக்கொண்டிருந்த  நான் ,கிராம்பும் , கற்பூர மணமும் வர  அரக்க பறக்க எழுந்து தேட ஆரம்பித்தேன் ,பலனாக கிடைத்தது , லட்டுகள் அடங்கிய டிபன் பாக்ஸ் .  மஞ்சளுடன் , சிவப்பு கலந்த , நல்ல லட்டுகளுக்கே உண்டான  நிறத்தில் லட்டுகள் . கவனிக்க வேண்டிய விஷயம் , ஒவ்வொரு லட்டுலயும் இரண்டு முந்திரி , இரண்டு திராட்சைகள் , எண்ணி வைத்திருப்பார்கள் போல .

வா வா என்று கூப்பிட ,விட்டு விட்டு போன உங்களுக்கு லட்டு கிடையாது என்று நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ,அக்கம் பக்கம் யாருமில்லா தனி உலகத்தில் லட்டுகளுடன் இருக்கையில் அருளின் செய்தி வந்தது , "டேய் கார்த்திக்  லட்டு கீர்த்தனா கொடுத்தது" , கீர்த்தனா - என் நண்பனின் காதலி .

லட்டு ஏன் பிடித்தது  என்றும் தெரிந்தது சிறு வயதில் இருந்து குடித்து வளர்ந்த  சிறுவாணி தண்ணீரில் செய்த லட்டு பிடிக்காமல் இருக்குமா ?  

அன்று முதல் பாலைவனத்தின் பூஞ்சோலையாக , கீர்த்தனா கோயம்பத்தூர்  போய் வரும்போதெல்லாம்  லட்டு கிடைத்தது , கீர்த்தனா மறந்தாலும் , அவளின் அம்மாவையும் , அவள் வீட்டில் லட்டு செய்யும் சாந்தம்மாவையும் , அழைத்து பேசி லட்டு செய்து கொடுக்க  சொல்லி விடுவேன் .

வசந்த காலம்  தொடராது அல்லவா ? ஆறு மாதங்களில் கீர்த்தனா வேலை மாறி , புனே சென்று விட , அருளும் பின் சென்று விட்டான் . நண்பர்களும் காதலிகள் , மனைவிகளாக , "ஒரு அறையில் இருந்த  எங்கள் எல்லோருக்கும் காதல் வந்தது உனக்கு ஏன்டா வரவில்லை " என்று போய்விட்டார்கள் .    எப்படியும்  அவர்கள் தொடர்பில் இருப்பார்கள்  என்பதால்  அவர்கள் போனதை விட லட்டு போனதில் தான் எனக்கு அதிக வருத்தம் .

 "இன்னும் ஆறே மாசம் தான் டா , அமெரிக்காக்கு பறந்துட்டே இருப்பேன் , கார் ஓட்ட கூட கத்துக்க ஆரம்பிச்சுட்டேன் ,  நீங்க இப்பபடியே    பெங்களூரு சுத்திட்டே இருங்கடா என்று வாழ்த்தி  விட்டேன்" .(கடைசியில் அனைவரும் வெவ்வேறு நாட்டிற்கு போக  நான் மட்டும் பெங்களூரை வலம் வந்தேன் என்பது வேற கதை )

அடுத்த சில மாதங்கள்  , எல்லாத்துக்கும் வேலை இருக்க , லட்டு கிடைக்கா மன அழுத்தத்தில் இருந்த எனக்கு , கார் ஓட்ட கத்துக்கொடுக்க வந்த  நண்பர் மூலமாக அறிமுகமானது , பெங்களூருவின்  இரவு நேர கார் பந்தய உலகம் . வார வாரம் , பந்தயங்களில் வெற்றி பெற்ற கார்களில் அமர்ந்து , போட்டோ  எடுத்து ரசித்து ரசித்து பந்தயங்களை எழுதி முகநூலில் போடுவது பிடித்த பொழுதுபோக்கானது . கார் ஓட்டுவது மட்டும் வருவேனா என்றது .

இவ்வாறு சுத்தி விட்டு வந்த ஒரு விடியலில் , அறைக்கு முன் அமர்ந்து கொண்டு இருந்தான் அருள் , கூடவே நண்பர்களும் .

"ஏன்டா போன் பண்ணினா எடுக்க மாட்டியா ?  "

"பண்ணுனா எடுக்கனும்டா ?  நான் ரேஸில் பிசியா இருந்தேன் . காலங்காத்தால எல்லாரும் வந்திருக்கீங்க ? ஏன்டா அருள் வரேன்னு சொல்லி  இருக்கலாமல்ல ?"

"அதுக்குதான்டா போன் பண்ணினேன் , நேத்துல இருந்து நீ எடுக்கல , பிரச்சனை ஆயிடுச்சு மச்சான் , கீர்த்தனா வீட்டுல தெரிஞ்சுடுச்சு , போன வாரம் ஊருக்கு போனவ இன்னும் வரலை , காண்டாக்ட் பண்ணக் கூட  முடியலை , கார்த்திக் நீதாண்டா ஹெல்ப் பன்ணனும்."

"என்னை என்னடா பண்ண சொல்லுற ?"

"நீயும் அந்த ஊருதான ?  அவ வீட்டிற்கு ஏதாவது கரணம் சொல்லி போய் பார்த்துட்டு வர முடியுமா ?"

"என்னடா விளையாடுறீங்களா ?  அவங்க வீட்டிற்கு போயிட்டு எல்லாம் அவ்வளவு ஈஸியா  வர முடியாதுடா , அவங்க அப்பாவோட டிரைவர் சேகர்  எனக்கு பழக்கம் தான் , பேருக்கு தான் அவர் டிரைவர் , அவருக்கு கீழ 20 பேருக்கு மேல வேலை செய்யுறானுக , எல்லாமே முரட்டு ஆளுக . கீர்த்தனா உங்கிட்ட சொல்லலியா ? "

ஒருவொருக்கொருவர்  திகிலுடன் பார்த்துக்கொள்ள , அருள் அழுகையுடன் தொடர்ந்தான் , "பார்த்தியா மச்சான் , எங்க யாருக்குமே , ஏன் கீர்த்தனாக்கே இதெல்லாம் தெரியாது , நீதாண்டா போகணும் . இந்த வாரம் கோயில் நோம்பினு  போறப்ப சொன்னா ,அதுக்கு வந்துட்டு பார்க்க வந்தேன்னு சொல்லுடா" .

"அவங்க வீட்டுக்கு நீ பெங்களூர்லதான்  இருக்கேனு தெரியும் , இப்ப எல்லாம் லட்டு  கொண்டுபோறது இல்லையானு கூட கேட்டுருக்காங்க . அதனால நீ போனா சந்தேகப்பட மாட்டாங்க .  "

"நீ என்ன வேணாலும் சொல்லு நான் போக மாட்டேன் , இதோ இவனுக தான் குடும்பஸ்தன் ஆயிட்டானுகளே ? குடும்பமா போக சொல்லு , நான் தனியா போறத விட இது பெட்டர் ."

"கார்த்திக் , சொன்னா கேளுடா , நீ  போவேங்குற நம்பிக்கைல, கீர்த்தனா கிட்ட சொல்லி  அவங்க வீட்டுல லட்டு கூட செய்ய சொன்னேன்டா  , நீ என்னடானா இப்படி பேசுற , பிரண்ட்டாடா  நீ ? "

 "இப்ப தான் காண்டாக்ட் பண்ண முடியலைன்னு சொன்னா ?  இப்ப லட்டு செய்ய சொன்னேன்னு சொல்லுற ?  நிஜமாவே செய்ய சொன்னியா ? "

கூட இருந்த  மற்ற சதிகாரங்களும் , அவசரம் அவசரமாக தலையாட்டி  சொன்னார்கள் , "இவன் சொல்லி இருக்கான் மச்சான் , எங்க கிட்ட கூட  சொன்னான்".

லட்டின் ருசியோடு , நட்புன்னா என்னனு தெரியுமா ? என்ற தளபதி வசனமும் நினைவுக்கு வர " சரி போறேண்டா"  என்றேன் .

"நண்பேன்டா நீ , இந்த ஊருக்கு போறதுக்கு டிக்கெட் , காலைல பத்து மணிக்கு பஸ் புக் பண்ணியாச்சு , நாளைக்கு காலைல அவங்க வீட்டுக்கு போற , எல்லாமே பிளான் பண்ணிட்டோம் கிளம்பு " . என்றான்
அருள் .

" பெரிய ரேஸ்  பிளான் , பஸ் டிக்கெட் முன்னாடி புக் பண்ணுறதெல்லாம் பிளானாடா  ? " என்றபடி கிளம்பினேன் .

அடுத்த நாள் கீர்த்தனா வீடு , அருள் உண்மையைத்தான் சொல்லி இருக்கான் , தட்டு நிறைய லட்டு  கீர்த்தனா அம்மா கொண்டு வந்து  "சாப்பிடு தம்பி , அவங்க அப்பா வந்ததும் பேசிட்டு , மத்தியானம்  சாப்பிட்டு போவியமா " என்றார் .

"லட்டு மட்டும் போதுங்க வீட்டுக்கு போகணும் ."

"அட இருப்பா , கோயில் பார்த்துட்டு போவியாமா ", என்றபடி உள்ளே செல்ல .

ரகசிய குரலில் கீர்த்தனா ஆரம்பித்தாள் , "கார்த்திக் எங்க அப்பா வரது உங்கிட்ட விசாரிக்கத்தான் . அதுக்கு முன்னாடி நான் வீட்டை வீடு ஓடிடனும் " என்றாள் .

"கீர்த்தனா , அத நான் சொல்லணும் , நீயும் அருளும் என்னமோ பண்ணுங்க , வந்து பார்த்தாச்சு , நீ குத்து கல்லாட்டம் நல்லா தான் இருக்க , வந்ததுக்கு லட்டை சாப்பிட்டு போயிட்டே இருக்கேன்" .

"விளையாடாத கார்த்திக் , நான் வீட்டை வீட்டு ஓடப்போறேன் , அதுக்குத்தானே நீ வந்திருக்க ,மத்தவங்க எல்லாம் சொன்ன எடத்துல தான இருக்காங்க ? , நாம போய் ஜாயின் பண்ணிக்கலாம் ."

"என்னது வீட்டை விட்டு போறியா ? அடிப்பாவி இதுதான் அவனுக சொன்ன பிளானா  , இங்க பாரு எனக்கொண்ணும் தெரியாது , நீ வேணா ஓடிப்போ , நான் நடந்து தான் போவேன் , லட்டு சாப்பிட வந்தது ஒரு குத்தமா ?"

கோவத்துடன் அருளுக்கு போன் பண்ணினேன் , பய புள்ள , ஒரே ரிங்கில் எடுத்தான் ,  "என்ன விளையாடுறீங்களாடா ? உன் லவ்வுக்கு நீதான் ஓடணும் , நான் எதுக்கு டா ஓடணும் ?"

 " மச்சி எல்லாமே பிளான் பண்ணிட்டம்டா , கார் கூட  ஏற்பாடு பண்ணியாச்சு , நீ கூட்டிட்டு வந்தது ரயில்வே ஸ்டேஷன்ல விட்டா போதும் ,  டிரைன் டிக்கெட் கூட புக் பண்ணிட்டம்டா , அவங்க ஏரியால இருந்து , ரயில்வே ஸ்டேஷன்க்கு , மெயின் ரோட்டுல வராம மாத்தி  வரதுக்கு உனக்குத்தான் தெரியும் , முன்னாடி சொன்ன ஒத்துக்க மாட்டேன்னுதான் இப்ப சொல்லுறேன் , காப்பாத்துடா" என்று அழ ஆரம்பிக்க , என் முன்னால் கீர்த்தனா அழுக ஆரம்பித்தாள் .

போனை வைத்து விட்டு நிலவரம் கலவரம் ஆவதை உணர்ந்து , பல்லை கடித்துக்கொண்டே கேட்டேன் , "என்ன பிளான் ?

"நீ கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு முன்னாடி பஸ் ஸ்டாப்க்கு போ , அதுக்கு பக்கத்துல இருக்க என் பிரண்ட் வீட்டுல ஏற்கனவே என் பேக் எல்லாம் கொண்டு  போய் வெச்சுட்டேன் , அவங்க வீட்டுலயும் எல்லாரும் கோயில்ல இருப்பாங்க ,  அங்கிருந்து கார் ஏற்பாடு பண்ணி இருக்கு , போயிரலாம்" என்றாள் கீர்த்தனா .  எனக்கு உதற ஆரம்பித்தது . 

 எடுத்த லட்டையும் தட்டில் போட்டு விட்டு  , எழுந்து போறதுன்னு நீ தனியா போக வேண்டியதுதானே  என்று கேக்க  நினைக்கையில் , அவள் அம்மா வந்தார் .  நான் பேந்த பேந்த முழிக்க ,

 "கோயிலுக்கு போயிட்டு  , அப்படியே வீட்டுக்கு போறானாம் அம்மா " என்றாள் கீர்த்தனா .

"அப்படியா தம்பி கோயில்ல தான் அவங்க அப்பா இருக்காரு , நான் கூப்பிட்டு சொல்லுறேன் ,  லட்டு கொண்டு போவியாமா" என்று ஒரு டிபன் போஸ் நிறைய போட்டு கொடுத்தார் .

"எப்படியும் தர்ம அடி வாங்க போறோம் , லட்டு சாப்பிட்டுட்டே வாங்கலாம் , என்று நினைத்துக்கொண்டு , சீக்கிரம் வா "  என்று கீர்த்தனாவிடம் சொல்லிவிட்டு  நடுக்கத்துடன்  பைக்கில்  பஸ் ஸ்டாப் வந்தேன் .

கார் நின்று கொண்டு இருந்தது , இரண்டு தெரு தள்ளி இருக்கும் பள்ளி முன் வண்டியை நிறுத்திவிட்டு ,மறக்காமல் லட்டு பாக்ஸ்ஸை  எடுத்துக்கொண்டு   கார் பக்கம் வர கீர்த்தனா வந்து சேர்ந்திருக்க வில்லை . கார் சாவி உள்ளே இருந்தது .

சாவிய வைத்து விட்டு  டிரைவர் எங்கே போனார் , என்று தேடுகையில் , அவசரம் அவசரமாக பேக் உடன் வந்தால் கீர்த்தனா .

"எல்லாம் பிளான் படி நடந்துருச்சு , எங்கம்மா உள்ள போனதும் ஓடி வந்துட்டேன்  , சீக்கிரம் வண்டி எடு" என்றாள் .

எனக்கு இதயம் படாரென்று வெடித்தது , "என்னது வண்டி எடுக்கிறதா ?  டிரைவர் எங்க ?"

"டிரைவர் இருந்தா நீ எதுக்கு , டிரைவர் எல்லாம் இல்லை ,அவரு நிறுத்திட்டு எப்பவோ போய்ட்டார் , ரயில்வே  ஸ்டேஷன்ல  வாங்கிக்குவாங்க , அதுதானே பிளான் ?"

"உங்க பிளான்ல தீய வச்சு எரிக்க , எனக்கு கார் ஓட்ட தெரியாது கீர்த்தனா."

"தெரியாதா ???  எனக்கு அழுகை வருது கார்த்திக் , நீதானே ரேஸ் பத்தி எல்லாம் எழுதி , போட்டோ போட்ட இப்ப தெரியாதுங்குற ? அருள் உன்கிட்ட முன்னாடி சொல்லாதது தப்புதான் , ரிவென்ஜ் எடுக்கணும்னு பார்க்காத , சீக்கிரம் வேண்டிய எடு ".

"கீர்த்தனா, நின்னுட்டு இருக்க வண்டில போட்டோ எடுத்துதானே போட்டேன் , ஓட்டுற மாதிரி வீடியோ போட்டனா ?  எனக்கு சத்தியமா கார் ஓட்ட தெரியாது .  இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்லை , நீ வீட்டுக்கு போ , நாளைக்கு  இதே பிளான் டிரைவர் வெச்சு பண்ணிக்கலாம்" .

"மாட்டுனோம் கார்த்திக் , நாளைக்கு எல்லாம் போக முடியாது , நான் லெட்டர் எழுதி வெச்சுட்டு வந்துட்டேன் , இந்நேரம் பார்த்திருப்பாங்க . என்ன பண்ணுறது" என்றாள் .

"இப்ப கேளு , இதை முன்னாடி கேட்டிருக்கணும் , இரு பைக்ல மெயின் ரோட்டுக்கு போய் ஒரு டாக்ஸி பிடிச்சுக்கலாம் , இங்கயே இரு , பைக் எடுத்துட்டு வந்துறேன்" .

 தெருமுனையை  நல்ல வேளை அவசரமாக திரும்பவில்லை , கிட்டத்தட்ட 150  கிலோ  இருக்கும் உருவம் , மேல உக்காந்திருக்க பாவமாய் நின்று இருந்தது பைக் . சுத்தி நாலு பேர் , எல்லா பக்கமும் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தார்கள் . லெட்டரை பார்த்து விட்டார்கள் போல .

திரும்பி கார் நோக்கி வர ,"சேகர் அண்ணா ,பாருங்க கார்த்திக் கூட வந்துட்டான்"என்று கேட்டது  கீர்த்தனாவின் உற்சாக குரல்  .

பயம் கண்ணை கட்ட, "டேய் , மாட்டிகிட்டோம் ஒடுங்கடா என்று செய்தி அனுப்பி , டெலீட் செய்து விட்டு , வியர்வை ஊற்றெடுத்து வழிய , மெதுவாய் அருகில் போனேன் .

 "கார்த்திக் , சேகர் அண்ணாவை பார்த்ததும் தான் மூச்சே வந்துச்சு  , சின்ன வயசுல இருந்தே அண்ணா , அப்பா வேணான்னு சொன்னாலும் சப்போர்ட் பண்ணி பேசுவார்  அண்ணா ரொம்ப சாப்ட் தெரியுமா ?

"லெட்டரை அண்ணாதான் பார்த்தாங்கலாம் , அப்பா பார்க்கலையாம்  .கொஞ்ச நாள் போகட்டும் , அப்பா கிட்ட பேசி , புனே அனுப்பி வைக்குறேன் , அதுக்கப்புறம் கல்யாணத்த பத்தி ஒரு முடிவெடுக்கலாம்னு சொல்லிட்டார் . இன்னைக்கு தப்பிச்சோம் , நான்  எல்லாத்தையும் சொல்லிட்டேன்      நீயும் எங்க பிளான் தெரியாம சேர்ந்து மாட்டி இருப்ப.  "

 "அண்ணா சொன்ன மாதிரி நீ அப்பாவை பார்க்காம போனா  சந்தேகம் வந்திரும் வா வீட்டுக்கு போயிட்டு போயிரலாம் , அருளுக்கும் , மத்தவங்களுக்கு கூட ஆள் அனுப்பி புனே போக சொல்றேன்னு சொல்லிட்டார் என்று பட படவென்று பேசிக்கொண்டே போனாள் கீர்த்தனா ".

கீர்த்தனா பெரிய பைத்தியமா , இவளையும் லவ் பண்ணின அருள் பெரிய பைத்தியமா , இல்லை இவர்கள் காதலுக்காக    லட்டிற்கு ஆசைப்பட்டு தூது வந்த நான் பெரிய பைத்தியமா  , நான்தான் என்று நொந்துகொண்டு பார்க்க 

 "அய்யா வீட்டுல இருந்து குடோனுக்கு போய்ட்டார் , பாப்பாவை வீட்டுல விட்டுட்டு , நம்ம குடோனுக்கு போயிரலாம் என்ன சொல்லறீங்க" என்றார் சேகர் .

ஆகா , கிடாவெட்டுக்கு குடோன்னு முடிவு பண்ணிட்டானுக , சேர்ந்து மாட்டுனம்னா  இன்னைக்கு  எல்லாத்துக்கும் பொங்கல் தான் என்று எண்ணிய படி கீர்த்தனாவை பார்க்க  மரண சாசனம் எழுதி விட்டு பாப்பா பராக்கு பார்த்து கொண்டு இருந்தது .

கீர்த்தனாவை விட்டு விட்டு சிறிது தூரம் திரும்பியதும் "அப்புறம் "என்றார் சேகர் . 

"அண்ணா எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கண்ணா , பொண்ணை எல்லாம் தூக்கிட்டு வரலைங்க அண்ணா , நான் தூக்கிட்டு வந்தது லட்டு மட்டும்தான் , அதுவும் அவங்களா தான் கொடுத்தாங்க .  நீங்க வேணா லட்டை வச்சுக்கோங்க என்னை விட்டுருங்க"  என்று பரிதாபமாக சொன்னேன் .

"பாப்பா பேசுனதுல உங்களுக்கு  தெரியலைனு தெரியுது , ஊரை தாண்டி இருந்தா, பாப்பாவை விட்டுட்டு மத்தவங்களை   அறுத்து போட்டுருங்கனு அய்யா சொல்லி இருந்தார் , சின்ன பசங்களா இருக்கீங்க , பாப்பா தான் வீட்டுக்கு போயிருச்சே  , அவங்க அம்மாக்கு கூட தெரியலை , அதனால் பிழைச்சீங்க. பைக் நிறுத்திய இடம் வந்திருச்சு வீட்டுக்கு போங்க , இந்த பக்கம் வராதீங்க , அந்த
 தம்பிககிட்ட ஊரை பார்த்து போக  சொல்லிருங்க "  என்றார் .

தப்பித்தோம் பிழைத்தோம் ,என்று பைக்கை  எடுக்க , சேகர் அண்ணாவின் குரல் கேட்டது , "லட்டை விட்டுட்டு போறீங்க " .

வாங்க வில்லையென்றால் , குடோனுக்கு கூட்டிட்டு போய் விடுவாரோ என்று வாங்கி கொண்டு போகையில் கசக்க ஆரம்பித்தது "லட்டு " .

பின்குறிப்பு : ஐந்து வருட போராட்டத்திற்கு பிறகு , பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்  செய்து அருளும் , கீர்த்தனாவும் இப்போது அமெரிக்கா - நார்த்  கரோலினாவில் .பிறக்கப்போகும் பேத்தியை பார்ப்பதற்கு , கீர்த்தனாவின்  அம்மாவும் , அப்பாவும் , வந்திருக்கிறார்களாம் . "லட்டு செய்யலாம்னு அத்தை சொன்னாங்க வரியா" என்று அருள் மெசேஜ் அனுப்பினான் . என்னதான் இருந்தாலும் ,  "லட்டு ................".

ஆசிரியர் தலையங்கம் - The Common Sense அக்டோபர் 2019 இதழுக்காக எழுதியது

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா அமைப்பின் “The Common Sense” மாத  இதழின் வாசகர்களுக்கு அன்பு வணக்கம். அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கருத்துக்களை அமெரிக்கா வாழ்  தமிழர்களிடம்  கொண்டுசெல்ல   தொடங்கப்பட்ட   இந்த அமைப்புக்கும், அமைப்பின் சார்பாக வெளிவரும் இந்த மாத இதழுக்கும் நீங்கள் தொடர்ந்து  அளித்து வரும் அன்பிற்கும், ஆதரவுக்கும்  நன்றி ! 

தந்தை  பெரியாரின் 141  வது பிறந்தநாள் , பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தோழர்களால் , பாஸ்டன் , சிகாகோ , ஆர்லாண்டோ நகரங்ககளில்  கருத்தரங்கம் , பட்டிமன்றம் என  சமூகநீதித் திருவிழாவாக கொண்டாடப்பட்டது .

தொடர்கதையாகி வருகிறது ஆழ்துளை மரணங்கள் . சுஜித் - தமிழகத்தின் கண்ணீர் துளியாக மாறிவிட்டான் . பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்  தனது ஆழ்ந்த இரங்கல்களை  சுஜித்தின் பெற்றோர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது .

 நிலவுக்குச்  செயற்கைக்கோள் அனுப்பும் ஒரு நாட்டிடம் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்க கருவிகள்  இல்லை . மனித உயிரின்  மதிப்பு இருக்கும் இடம் பொறுத்து மாறுகிறது  என்பது வேதனையான நிலைமை. இதனை தடுக்க  கடுமையான சட்டங்களாவது அரசாங்கங்கள் போட வேண்டும் .ஆள்துளைக் கல்லறைகள் இதுவே கடைசியாக இருக்கட்டும்.

பெரியாரும் அண்ணலும் வகுத்துக்கொடுத்த பாதையில் நேர்மையாகவும் , வெளிப்படையாகவும் , தன்னாட்சியுடனும் தொடர்ந்து  செயற்பட தங்களின் மேலான ஆதரவையும் ஊக்கத்தையும்
வழங்கிடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் . தங்கள் படைப்புகள் , கருத்துக்கள் , விமர்சனங்கள் , விளம்பரங்களை 'thecommonsense.pasc@gmail.com'  மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்துகொண்டால் மேலும் ஊக்கம் பெறுவோம் .


 
                                    வாழ்க தந்தை ! வாழ்க அண்ணல் !

                                      வளர்க பகுத்தறிவு ! செழிக்க மனிதநேயம் !

                                                                   நன்றி

                                                                ஆசிரியர் குழு

Friday, October 4, 2019

குறுந்தொகை குறிஞ்சித்திணை 142 வது பாடல்


பாடல் காட்சி 

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர்




தோழியிடம் தலைவன் கூறுவதாக வருவது , அதிகம் வராத  காட்சியாக இருக்கிறது , இந்தப்  பாட்டில் வருகிறது , தொடர்ந்து படித்தால்  மற்ற பாட்டுகளில் வரலாம் 


இப்படலை எழுதியவர் :  கபிலர்


விளக்கம்
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே-பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!

நாலாவது வரியில் இருந்து இந்த பாட்டை பார்ப்போம்

பானாள் பள்ளி யானையின் உயிர்த்து  -

பானாள் -  நடு யாமத்துப்
பள்ளி யானையின் - படுத்துத் துயிலுதலையுடைய யானையைப் போலப்
உயிர்த்து - பெருமூச்சு விட்டுக்கொண்டு

என் உள்ளம், பின்னும், தன் உழையதுவே
என் உள்ளம் - எனது நெஞ்சம்,
 பின்னும் - நான் தலைவியைப் பிரிந்து வந்த பின்னரும்
தன் உழையதுவே - அவளிடத்திலே இருக்கின்றது;  தலைவி கிட்ட இருக்கிறது

அந்த தலைவி எப்படி பட்டவங்கனு  விளக்கறாங்க பாருங்க

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,

சுனைப்பூக் குற்றுத் - சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து,

தொடலை தைஇ -   - மாலையைக் கட்டி

புனக் கிளி கடியும் பூங் கட் பேதை

புனக் கிளி கடியும் -
புனம் - மலையில் இருக்கிற கொல்லை  , தோட்டம், 
கிளி கடியும்  -கதிரை உண்ணும் பொருட்டு வரும் கிளிகளை ஓட்டுகின்ற , 

பூங் கட் பேதை
பூவைப் போன்ற கண்ணையுடைய பேதையாகிய  அத்தலைவி

தான் அறிந்தன்றோ இலளே  - 

இதனை அறிந்தாளோ இல்லையோ! 
என் மனது யானை மாதிரி அவள் இருக்குமிடத்திலயே பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறது என்பது தெரியுமா , தெரியாதா  , அப்படினு தோழிகிட்ட  குறை சொல்வதுதான் இந்தப்  பாடல்

பாடல் மறுபடியும்

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே-பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!

குறுந்தொகை குறிஞ்சித்திணை 141 வது பாடல்

பாடல் காட்சி 

" இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகுந் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சிப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அது [வு] மறுத்துச் சிறைப் புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. "

தலைவரை இனிப் பகற்குறிக்கண் வரும்படி நீ சொல்ல வேண்டும்.


இப்பாடலை  எழுதியவர் : மதுரைப் பெருங் கொல்லன் 

மதுரை பெருங்கொல்லன் என்பதில் மதுரையில் உள்ள புகழ்மிக்க கொல்லன் அல்லது கொல்லர் குழுவின் தலைவன் (guild chief) என்று கருதவேண்டியுள்ளது.  மதுரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ச்சியாக மக்கள் வாழும் ஊராக உள்ளதா , இல்லை இது வேற மதுரையா எனத் தெரியவில்லை.

விளக்கம் :

வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
 செல்கென் றோளே யன்னை யெனநீ
  சொல்லி னெவனோ தோழி - கொல்லை
  நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
   பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
    ஆரிரு ணடுநாள் வருதி
    சார னாட வாரலோ வெனவே.

மலைப்பக்கத்தையுடைய நாட்டில் உள்ள  தலைவன்   , தலைவியை இரவில் சந்திக்க எதையெல்லாம் தாண்டி வருகிறான் என்பதை
பாட்டின் நாலாவது வரியில் இருந்து  தலைவி சொல்வது


'கொல்லை
நெடுங்கை வன் மான் கடும் பகை உழந்த

நெடுங்கை வன்  மான் -
 நெடிய கையையுடைய  யானையால்

கடும் பகை உழந்த - கடிய பகையினால் வருந்திய

குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை – குறிய கையையுடைய கொல்லுதல் வல்ல பெரிய ஆண்புலியானது,

பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்

பைங்கட் செந்நாய் - சிய கண்ணையுடைய செந்நாய்
படுபதம் பார்க்கும்  - அகப்படுகின்ற காலத்தை  பார்த்திருக்கும்

ஆரிரு ணடுநாள் வருதி  - அந்த நேரத்தில் இருளையுடைய நடுயாமத்தில் வருகின்றாய்

வாரலோ வெனவே -  அப்படி வருவதை விட்டு விட்டு


வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
 
வளைவாய் சிறுகிளி - வளைந்த அலகையுடைய சிறு கிளிகளை

விளைதினைக் கடீஇயர்  - விளைந்த திணைகளை  சாப்பிடாமல் விரட்டும் பொருட்டு

செல்கென் றோளே யன்னை

நம் தாய், செல்க என்றாள்
யெனநீ
    சொல்லி னெவனோ தோழி

என்று நீ  தலைவனுக்கு சொல்வதால் வரும் குற்றம் என்ன ?

இரவில் வர வேண்டாம் , பகல்ல நான் தோட்டத்திலதான் இருப்பேன் , அப்ப சந்திக்கலாம்னு  தலைவன்கிட்ட தோழியை விட்டு சொல்லும் பாட்டு தான்  இது .  ஒரு பாட்டு எப்படி காட்சிகளை கொடு வருது பாருங்க , காட்டுப் பாதை ,  பெரிய யானை , அந்த யானையை தாக்கும் அளவுக்கு புலி , செந்நாய் , இவற்றுக்கு நடுவில் மக்கள் இருந்திருக்காங்க , உள்ளம் நிறைய நிறைய காதலுடன் . ஊருக்குள்ள ஒரு யானை வந்துருச்சுனா அலறி அடித்து இப்ப ஓடுறோம் , என்ன செய்ய வேண்டும் என்ற அறிவோ , புரிதலோ இல்லை . நாமளும் பாவம் , யானையும்  பாவம் .


பாட்டு மறுபடியும்


 வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
 செல்கென் றோளே யன்னை யெனநீ
  சொல்லி னெவனோ தோழி - கொல்லை
  நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
   பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
    ஆரிரு ணடுநாள் வருதி
    சார னாட வாரலோ வெனவே.  

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...